சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவினை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை கோரும் பகிரங்க அறிக்கையொன்றில் மனித உரிமை ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்கள் கல்விமான்கள் உட்பட 150க்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளிற்கு எங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளும் அச்சுறுத்தல்களும் மனித உரிமை பாதுகாவலர்,சர்வதேச அளவில் நீதிக்காக குரல்கொடுப்பவர் என்ற ஜஸ்மின் சூக்காவின் நீண்டகால கௌரவத்திற்கும்,பாதிப்பை ஏற்படுத்த முயல்பவையாக காணப்படுகின்றன என அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிகாரிகள் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக முன்வைத்துவரும் குற்றச்சாட்டுகள் ஜஸ்மின் சூக்காவிற்கும் அவரது அமைப்பிற்கும்,மனித உரிமை சமூகத்திற்கும் எதிரான குற்றங்கள் மாத்திரமில்லை,அவரது பணியுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்டவர்கள் உயிர்தப்பியவர்களுக்கும் எதிரான குற்றங்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமைகளை , இலங்கையில் பாததிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் ஜஸ்மின் சூக்காவின் நியாயபூர்வமான, நடவடிக்கைகள் குறிப்பாக நீதி மற்றும் உண்மைக்கு ஆதரவான அவரது நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு எதிரான நேரடி பதிலடியாக அவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து நாங்கள் எங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிடுகின்றோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகள் இந்த சர்வதேச கொள்கைகளை மீறும் வகையிலான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர்கள் இலங்கையில் நீண்டகாலமாக காணப்படும் அநீதி மற்றும் நீதியின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுதல் ஆகியவற்றிலிருந்து கவனத்தை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கீழ கைச்சாத்திட்டுள்ள நாங்கள் அரசாங்கத்தினை பொறுப்புக்கூறுதல் குறித்த தீவிர அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறும் மனித உரிமைகளிற்காக பாடுபடுவர்களை தாக்கும் நடவடிக்கைகளிற்கு பதில் மனித உரிமைகளை மதிக்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.