தாய்லாந்திலிருந்து கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட புகை காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 ரக விமானமே தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தில் 208 பயணிகளும், 15 ஊழியர்களும் இருந்துள்ளனர்.பயணிகள எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இருந்த பயணிகளில் சிலர் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சுமார் 150 பயணிகள் இன்னும் நாட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சில பயணிகள் வேறு விமானம் ஒன்றில் அனுப்பப்பட்டுள்ள நிலையில் ஏனைய பயணிகளை இன்றைய தினத்திற்குள் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை விமானத்தை பரிசோதனை செய்வதற்காக அமெரிக்காவின் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்றும் கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்தின் விமானப் பொறியியலாளர்கள் குழுவொன்றும் நாட்டுக்கு வருகை தர உள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகரிகள் கூறினர்.