கோவிட் 19இற்குப் பின்னான காலத்தில் பெண்களின் பாலியல் வாழ்வினதும் கருவள உற்பத்தியினதும் உடல்நலம் பேணப்படல் என்பது இவ்வாண்டுக்கான மையக் கருத்து.
உலகின் மக்கள் தொகை 7.7 பில்லியனை நெருங்கிய நிலையில், கோவிட் 19 ஏற்படுத்திய முடக்க காலத்தில் திட்டமிடப்படாத கருக்கட்டல்களால் 7.7 பில்லியனால் மக்கள் தொகை உயரக் கூடுமென்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்தச் சூழலில் இவ்வாண்டுக்கான உலக மக்கள் தொகைத் தினம் யூலை 11ம் நாள் அனைத்துலக நாடுகளின் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டது.
47 மில்லியன் பெண்கள் வருமானம் குறைந்த உலக நாடுகளில் கோவிட் 19 காலத்தில் நவீன கருக்கட்டுப்பாட்டுச் சாதனங்களைப் பெற இயலாமல் போனமையாலேயே உலக மக்கள் தொகையில் திடீர் அதிகரிப்பான 7.7 மில்லியன் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது என்பதும் இக்காலத்தில் 31 மில்லியன் பெண்கள் வீட்டு வன்முறைகளைச் சந்தித்துத் துன்புற்றுள்ளார்கள் எனவும் அனைத்துலக நாடுகளின் மக்கள் தொகை நடவடிக்கைகளுக்கான நிதியம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் அனைத்துலக ஒன்றியத்தின் செயலாளர் அன்ரோனியோ குற்ரஸ் அவர்கள் “உலகில் சமத்துவமற்ற முறையில் கோவிட் 19 பரவல் தாக்கங்கள் உள்ளதால், சமத்துவமின்மைகளும் நலிவுறுதல்களும் அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களும், இளவயதுப் பெண்களும் மிக அதிக பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ளனர். இந்த உலக மக்கள் தொகைத் தினத்தில் கோவிட் 19இற்கு பின்னான காலத்தில் பெண்களின் பாலியல் வாழ்வினதும், கருவள உற்பத்தியினதும், உடல் நலத்தைப் பேணக்கூடிய முறையில் பெண்களினதும், இளவயதுப் பெண்களதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைவரும் உறுதிபூண வேண்டும்” என்று தமது உலக மக்கள் தொகை நாளுக்கான செய்தியில் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக நாடுகளின் மன்றத்தின் இந்த மையக் கருத்தினை படிக்கும் பொழுது ஈழத்தமிழ்ப் பெண்களினதும், இளந்தமிழ்ப் பெண்களினதும் பாலியல் வாழ்வின் பாதுகாப்பும் கருவள உற்பத்தியின் பாதுகாப்பும் கூட அவர்களின் தமிழ்ப் பெண்கள் என்ற அடையாளத்தினால் இனங்காணக் கூடிய அச்சத்திற்கு உள்ளாகியுள்ளதையும், அதிலிருந்து ஈழத்தமிழ்ப் பெண்களைப் பாதுகாப்பதற்கான அவர்களின் பெண் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் உலக நாடுகளையும், உலக அமைப்புக்களையும் கோர வேண்டிய கடமை புலம் பெயர் தமிழர்கள் அனைவருக்கும் உண்டு என்பதை நினைவுறுத்த விரும்புகின்றேன்.
ஈழத்தமிழ்ப் பெண் அவளின் இனத்துவ அடையாளம் காரணமாக சிங்கள பௌத்த பேரினவாத இனவெறி, மதவெறி இலங்கையில் வீறு கொண்டெழும் பொழுதெல்லாம் பாலியல் சித்திரவைதைகளுக்கும், வன்புணர்ச்சிகளுக்கும், பாலியல் உறுப்புச் சிதைப்புகள் வழியான பாலியல் வாழ்வுச் சிதைப்புகளுக்கும், கருவள உற்பத்திச் சிதைப்புகளுக்கும் நீண்ட காலமாக ஆளாகி வருகின்றாள் என்பது உலகறிந்த உண்மை.
சிறீலங்கா அரசாங்கம் ஈழத்தமிழர்களைத் தனது குடிகளென்று கூறிக் கொண்டு, தனது குடிகளுக்கு மேலேயே வெளிநாட்டுடன் யுத்தப் பிரகடனம் செய்வது போல் போர் என்றால் போர் என்று யுத்தப் பிரகடனம் செய்தும், தனது குடிகள் எனத்தானே கூறிக்கொள்ளும் ஈழத்தமிழர்களின் உயிர் உடல் உடமைகளைத் தானே குண்டு வீச்சுக்கள், எறிகணைத் தாக்குதல்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள் வழி அழித்து அவர்களை இனங்காணக் கூடிய அச்சத்திற்குள் வைத்து அவர்களின் அரசியல் பணிவை பிரகடனப்படுத்தாத இராணுவ ஆட்சி மூலம் பெற்று வரும் அரசியல் தந்திரோபாயம் 2009 இல் யுத்தத்தைத் தான் முடிவுக்குக்கு கொண்டு வந்த பின்னர் அங்கு இல்லை எனச் சிறீலங்கா வாயளவில் அறிவித்தாலும் செயலளவில் இன்று வரை ஏதோ ஒரு வடிவில் இனங்காணக் கூடிய அச்சத்தால் தமிழரின் அரசியல் பணிவைப் பெறுதல் என்பது தொடர்ந்து கொண்டே உள்ளது.
இந்நிலை மாற வேண்டும் என்றால் முதலில் சட்டத்தின் முன் இலங்கையின் குடிகள் அனைவரும் சமம் என்பது எழுத்தளவில் அல்லாது செயலளவில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை உலக நாடுகளின் மன்றம் உண்மை கண்டறியும் முறையியல் மூலம் கண்டறியதல் அவசியம்.
அப்பொழுது தான் தமிழர்களின் அதி முக்கிய கோரிக்கையாகிய சிறீலங்காப் படைகள், தமிழர்களின் வாழ்விடங்களில் இருந்து அகற்றப்பட்டு ஊருக்கு வெளியே மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இந்தப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னதான 1972இல் இருந்த நிலைகளுக்கு படை முகாங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை உலக நாடுகளின் அமைப்பால் கண்டறிய முடியும்.
அவ்வாறே சிறீலங்கா அரசாங்கத்தின் படைகளின் சர்வாதிகாரப் போக்கால் இன்றுவரை ஈழத்தமிழ்ப் பெண்கள் நயமாகவும், பயமாகவும் பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் கொடுமை என்பதும் அவற்றை வெளியே சொல்ல இயலாத, அவர்களின் உயிருக்கான அச்சுறுத்தல்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதும் தெளிவாக்கப்பட வேண்டும்.
தற்பொழுதும் கூட பெண்களின் குடும்பத் தலைவர் யுத்தத்தால் அழிக்கப்பட்ட நிலையில் வறுமையில் தவிக்கும் சூழலைப் பயன்படுத்தி இராணுவத்தினர் அவர்களின் பாலியல் வாழ்வையும் உடல் நலத்தையும் பாதிக்கும் பல செயல்களுக்கு அவர்களைத் தூண்டி வருகின்றனர் என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அதே போன்று பாலியல் உல்லாசப் பயணத்திற்கான வழங்கலிலும் யாழ்ப்பாணப் பகுதிகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையை அனைத்துலக நாடுகளின் ஒன்றிய ஆய்வாளர்களே கூட்டிக் காட்டியுள்ளனர்.
இவை அனைத்திற்கும் மூலகாரணமாக உள்ள படைகள், மக்கள் வாழும் இடங்களில் நிலைப்படுத்தப்படும் அரசியல் முறைமையை நிறுத்துமாறு சிறீலங்கா அரசிற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வைப்பது, புலம்பெயர் தமிழர்களின் கடமையாகிறது. அவ்வாறே பெண்களின் உள உடல் நலத்தின் முக்கிய காரணியாக உள்ள படையினர் தங்கள் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு இழைத்த இனஅழிப்புகள், இனத்துடைப்புக்கள் குறித்த அவர்களின் நீதிக்கான தேடலுக்கு நீதி வழங்கப்படாமை என்பதும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்கள் குறித்து பதிலளிக்காத பொறுப்பற்ற செயல்களும் தொடர்கதையாகத் தொடர்கின்றன.
இவற்றுக்கு அனைத்துலகச் சட்டங்கள் வழியாகவும் நீதி முறைமைகள் வழியாகவும் பொருளாதாரத் தடைகள் மூலமாகவும் உலக நாடுகள் பதிலளிக்க வேண்டும் என்னும் பொறுப்பை உலக நாடுகளுக்கும் உலக நாடுகளின் மன்றத்துக்கும் எடுத்துரைக்க வேண்டிய கால கட்டமாகவும் இன்றைய காலம் உள்ளது.
இவற்றை உண்மையானதும் நேர்மையானதும் ஆகிய முறையில் முன்னுரிமை கொடுத்து உலகெங்கும் உள்ள தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் மக்களுக்கும் அரசுக்களுக்கும் எடுத்துச் சொல்லும் தினமாக இந்த உலக மக்கள் தொகைத் தினத்தை முன்னெடுத்தாலே கோவிட் 19க்குப் பின்னரான காலத்தில் ஈழத்தமிழ்ப் பெண்களின் பாலியல் வாழ்வையும், கருவள உற்பத்தியையும், அவர்களின் பெண்களுக்கான உரிமைகளை மீள் நிலைநிறுத்தச் செய்வதின் வழி பாதுகாக்க முடியும்.