இலங்கையில் இருந்து அகதிகளாக சென்று மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற காத்திருக்கும் ஐந்து பேரும், பிலிப்பைன்ஸின் இருவரும் நாடு கடத்தப்படுவதற்காக குடிவரவு தடுப்பு முகாமுக்கு மாற்றப்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அகதிகளின் பிள்ளைகளும் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இதனை தடுக்க குறித்த அகதிகளின் சட்டத்தரணிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த அகதிகளின் அடைக்கல கோரிக்கையை ஹொங்கொங் அரசாங்கம் நிராகரித்த நிலையிலேயே இந்த அச்சம் வெளியாகியுள்ளது.
இலங்கையின் சுப்புன் கெல்லபாத்த, நதீகா நோனிஸ் அவர்களின் இரண்டு பிள்ளைகள் இதனை தவிர இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவரான அஜித் புஸ்பகுமார, பிலிப்பைன்ஸ் வாசியான வனேஸா ரொடெல் மற்றும் அவரின் மகள் ஆகியோருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு அகதிகளாக சென்ற இவர்கள் ஹொங்கொங்கில் தங்கியிருந்தநிலையில், 2013ஆண்டில், அமெரிக்காவில் இராணுவ ரகசியங்களை கசியவிட்டமைக்காக தேடப்பட்ட அந்த நாட்டின் புலனாய்வு அதிகாரியான எட்வேட் ஸ்னோவ்டன் ஹொங்கொங்கிற்கு தப்பிவந்தார்.
இதன்போது அவரை உபசரித்து தங்குமிட வசதிகளை இந்த அகதிகள் செய்து கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில் ஸ்னோவ்டனுக்கு ரஸ்யா அடைக்கலம் வழங்கி அவர் அங்கு சென்றதன் பின்னர் குறித்த அகதிகள், தாமே ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியதாக வெளிப்படையாக கூறியிருந்தனர்.
அதற்காக தாம் பெருமைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் இந்த உதவியே அவர்களின் அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.