திரு. செல்வின் அவர்கள் இலங்கை நிர்வாகசேவையில் 25 வருடங்களாக பல துறைகளில், பல பதவிகளில் சேவையாற்றியிருந்தார். சேவைக்கும், சேவைக்கு அப்பாற்பட்ட சேவையாக சமூக ஆளுமையை அபிவிருத்தி செய்தல், உள்ளுராட்சி, கிராம அபிவிருத்தி, கூட்டுறவு ஆகிய பரிமாணங்களும் கட்டியெழுப்பப்படும் போது தான் போருக்குப் பின்னரான இந்த சமூகம் முன்னேற்றம் அடையும் என்பது அவரது நம்பிக்கை.
இந்த நிலையில் அனைத்துலக கூட்டுறவு தினத்தை முன்னிட்டு எமக்கு அவர் வழங்கிய நேர்காணலை இங்கு தருகின்றோம்.
கேள்வி -1995 முதல் ஜூலை மாத முதலாம் சனிக்கிழமை கூட்டுறவு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. காலனித்துவ ஆட்சியின் பின் இலங்கை கூட்டுறவு சபையின் வளர்ச்சி பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?
இலங்கை கூட்டுறவு வரலாறு என்பது மிகவும் ஆழமான வரலாற்றைக் கொண்டது. ஆசியாவிலே இந்தியாவில் பஞ்சாப் மாநிலமும், இலங்கையும் ஆரம்ப காலத்திலிருந்து கூட்டுறவுத் துறையை வளர்த்திருக்கின்றது. கூட்டுறவுத் துறை என்பதை விட கூட்டுறவு இயக்கம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில், இது மக்கள் சார்ந்த ஒரு இயக்கம். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அரசாங்கம் சட்டங்களை ஒழுங்குபடுத்தும் போது கூட்டுறவுத் துறை என்றழைத்ததே தவிர உண்மையில் கூட்டுறவுத்துறை என்பது ஒரு மக்கள் சார்ந்த இயக்கம்.
இந்த மக்கள் சார்ந்த இயக்கம் இலங்கையில் வேரூன்றிய போது, பொருளாதார நோக்கங்களுக்கான வசதிகளையும், வாய்ப்புக்களையும் மக்களுக்கு கொடுப்பதற்காக மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டியெழுப்பியதாகத் தான் இருந்தது. ஆரம்பத்தில் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பல இருந்தன. சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்கள் பல இருந்தன.
யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு கூட்டுறவுச் சங்கங்கள் பல சாதனைகளை செய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பல காலமாக புகையிலை உற்பத்தி, ஏற்றுமதி இருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து திருவாங்கூர், இந்தியாவின் தலைநகரங்களுக்கு புகையிலை அனுப்பப்பட்டன. அதற்காக புகையிலை உற்பத்தி, ஏற்றுமதி கூட்டுறவுச் சங்கம் இருந்தது.
அத்துடன் கடல் வளம் கூடிய வடமாநிலத்தைப் பொறுத்தவரையில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை இருந்தது.வாழை மிகப் பெரும் பொருளாதாரமாக இருந்தது. வாழைக்குலை உற்பத்தி, ஏற்றுமதி செய்வதற்காக கூட்டுறவுச் சங்கம் இருந்தது.
இதைவிட ஆழமாக கிராமங்களில் வேரூன்றி இருந்த ஒரு கூட்டுறவுச் சங்கம் சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கம்.
நெருக்கடியான இந்த காலகட்டத்தில் அரசாங்கம் தங்களின் விநியோக பயன்பாட்டிற்காக இந்த கூட்டுறவுச் சங்கங்களின் வணிகத்தை பயன்படுத்த முயற்சித்தன. அதன் விளைவாக கூட்டுறவுச் சங்கங்களின் நோக்கங்கள் நிலை மாறி அரசாங்கங்களின் நிவாரணத் திட்டங்களை விநியோகிக்கின்ற ஒரு கருவியாக மாற்றப்பட்டு தங்கி வாழும் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் என்ற சங்கங்கள் உருவாகி, பல நோக்கங்களையும் தவிர்த்து, கடைசியாக நுகர்வோருக்கு பொருட்களை விநியோகிக்கின்ற அரசாங்கத்தின் கரங்களாக மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுவே இலங்கையின் வடபகுதியில் உள்ள கூட்டுறவின் வரலாறாக உள்ளது.
கேள்வி -நீங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் கூட்டுறவுத் துறையின் செயற்பாடுகளில் மேலோங்கியிருந்த மாவட்டங்கள் என்று சுட்டிக்காட்டக்கூடிய மாவட்டங்கள் ஏதாவது உள்ளதா? அது சம்பந்தமான கருத்துக்களை கூறுங்கள்?
குறிப்பாக வடபகுதியில் யாழ்ப்பாணம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதேபோல தென்பகுதியில் காலி, கேகாலை மாவட்டங்கள் இருந்தன. யுத்த நெருக்கடி காலகட்டத்தில் கூட்டுறவு மிகவும் சிறப்பாக செயற்பட்டது. காரணம் மிகப் பெரிய பொருளாதாரத் தடையை உடைத்தெறிந்து மக்களுக்கு உணவளிப்பதில் ஒரு சிறந்த விநியோகக் கரமாகவும், சவால்களை எதிர்கொள்வதற்காகவும், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் கூட்டுறவு தனது தளத்தைப் பதித்திருந்தது.
கேள்வி -வடக்கு கிழக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சியும், பங்களிப்பும் 1945 இலிருந்து இன்று வரை எவ்வாறு மாற்றங்கள் அடைந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
தொடர்ச்சியான யுத்த நெருக்கடி காரணமாக உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் பலமிழந்து போயுள்ளது. 1977இன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் சிறந்த சந்தைப் பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டது.
1980 இற்குப் பின்னர் இன ரீதியான, யுத்தக் காரணிகளால் நாங்கள் மிகவும் நெருக்கடிக்கு உள்ளான காலங்களில் சிறந்த பொருளாதாரத்தின் அனுகூலங்களை வடபகுதி மக்களால் அனுபவிக்க முடியவில்லை.
தென்பகுதி மக்கள் சிறந்த பொருளாதாரத்தின் அனுகூலங்களை எதிர்கொண்டு வேறொரு பாதையில் பயணிக்கத் தொடங்கிய போது, 1977 தொடக்கம் இன்று வரை எங்களுக்கு தொடர்ச்சியாக கை கொடுத்தது. கூட்டுறவுத்துறை எங்கள் உள்ளுர் மக்களிடம் பொருளாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றிற்கு கைகொடுத்தது.
ஒரு விடயத்தை நான் பதிவு செய்ய வேண்டும். ஒன்று வடபகுதியில் கூட்டுறவுத் துறையினால் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. வைத்தியசாலைகள். குறிப்பாக இலங்கையில் கூட்டுறவு சங்கங்கள் வரலாறு மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை ,தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை போன்றன முக்கியமானவை.
ஒருகாலத்தில் மக்கள் தங்களுக்குத் தேவையான வைத்தியத் தேவைகளைக் கையாள்வதற்காக கூட்டுறவு இயக்கத்தை ஒரு வலிமையான இயக்கமாக கொண்டு வந்தார்கள்.
2000 ஆண்டிற்குப் பின்னர் கூட்டுறவு இயக்கம் மிக வலிமையுடையதாக இருந்தது. மீண்டும் அந்த வாய்ப்பு திரும்ப எங்களுக்குக் கிடைத்துள்ளது.
கேள்வி -கூட்டுறவு அமைப்புக்கள் ஊடாக சாதாரண மக்கள் எவ்வகையான அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும் ?
கூட்டுறவு இயக்கங்கள் ஊடாக 3 அல்லது 4 பரிமாணங்களைப் பெற முடியும்.
முதலாவது உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள்: வாழைக்குலை உற்பத்தி, ஏற்றுமதி கூட்டுறவுச் சங்கங்கம் நீர்வேலியில் உள்ளது. அந்தப் பகுதியிலுள்ள வாழைக்குலை உற்பத்தியாளர்கள் நாளாந்தம் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு வாழைக் குலைகளை வெட்டும் போது, அவற்றை சந்தைப்படுத்துவது மிகப் பெரும் சவாலாக இருக்கின்றது. இதனால் அந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் அந்த வாழைக் குலைகளைப் பெற்று வெளி மாவட்டங்களில் விற்பனைக்கு அனுப்புகின்றது. வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத காலகட்டத்தில் நீர்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து விற்பனை செய்து கொடுக்கின்றது.
அடுத்தது சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கம்: கிராமங்கள் தோறும் மிக வலுவாக விரிவடைந்துள்ளது. இன்று சமுர்த்தி போன்ற விடயங்கள் நடந்தாலும்கூட
சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கம் குறிப்பாக கிராமியப் பெண்கள், குடும்பப் பொருளாதாரத்தில் சாதாகமான தாக்கங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளன.
மூன்றாவது பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்: மகிந்தவின் விநியோக வேலைகளில் தங்கி வாழந்து வந்தனால் சிரமப்பட்டிருந்தனர். தற்போது அதிலிருந்து மீண்டெழுவதற்காக புதிய தந்திரோபாயத்தை அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் இந்த இடைக்காலத்தில் பல உற்பத்தி முயற்சிகளை முன்னெடுத்திருக்கின்றன.
உதாரணமாக பண்டத்தரிப்பு, சங்கானை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், இறக்குமதித் தடை இருந்த 70களின் பிற்பகுதியில் மிகப் பெரிய துணி ஆலைகளை வைத்திருந்தன. இலங்கையில் பெரிய துணி ஆலைகளை வைத்திருந்த கூட்டுறவுச் சங்கங்களாக பண்டத்தரிப்பு கூட்டுறவுச் சங்கமும் சங்கானை கூட்டுறவுச் சங்கமும் இருந்தது.
அதுபோல மீண்டும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் பல பல முயற்சிகளில் ஈடுபட்டு உணவு உற்பத்தி, உணவுகளை பொதியிட்டு விற்றல், சிறு தொழில் முயற்சிகளை ஆரம்பித்தல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கொடிகாமம் கூட்டுறவுச் சங்கம் ஒரு அரிசி ஆலையை வைத்திருக்கின்றது.
அதேபோல விசுவமடு, நெடுங்கேணி, துணுக்காய் போன்ற கூட்டுறவுச் சங்கங்கள் மிகப் பெரிய அரிசி ஆலைகளை தங்களுக்கு சொந்தமாக வைத்திருக்கின்றன. அத்துடன் அந்தப் பிரதேசத்தினுடைய நெல் உற்பத்தியாளர்களின் நெல்லை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்து சந்தைப்படுத்துகின்ற மிகப் பெரிய ஒரு பணியில் தங்களை அர்ப்பணித்துள்ளன.
அதைவிட பல்பொருள் அங்காடிகளை தேசிய வர்த்தகர்கள் கொண்டு வந்து போட்டிருக்கின்ற போதிலும், அவர்கள் பெரும்பாலும் நகரத்தை அண்டியதாகவே இருக்கின்றார்கள். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தரமான பொருட்களை நியாயமான விலையில் சாதாரண மக்களுக்கு கிடைக்கக் கூடியதாக வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்திலும் பல்வேறு கோப் சிற்றி என்று சொல்கின்ற பல்பொருள் அங்காடிகளை கூட்டுறவுச் சங்கங்கள் திறந்து அதன் மூலம் சாதாரண மக்களுக்கும், கிராமங்களில் உள்ள மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வசதியை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன.
குறிப்பாக கோப் சிற்றி என்பது அண்மைக் காலமாக போருக்கு பின்னர் கிராமங்களில் மூடப்படும் நிலை காணப்படுகின்றது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
பெரும்பாலான கூட்டுறவுச் சங்கங்கள் இடப்பெயர்வு காலத்தில் தங்கள் சொத்துக்களை இழந்துள்ளன. கட்டிடம், போக்குவரத்து சாதனங்கள், களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் என்பன பாரியளவில் இழக்கப்பட்டன. இதற்கு அரசாங்கம் எந்தவித நட்டஈடும் கொடுக்கவில்லை.
இதனால் கூட்டுறவுச் சங்கங்கள் உறுதியற்றவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய நிலைமையில் அவைகள் தங்கள் கிளைகளை பராமரிப்பதும், அவற்றிற்கு விநியோகம் மேற்கொள்வதும் பாரிய சவாலாக இருக்கின்றது. இதனால் கிளைகள் இயங்க முடியாமல் போவதும், அவர்களால் உருவாக்கப்பட்ட கோப் சிற்றிகள் இயங்க முடியாமல் போவதும் ஒரு புதிய நிலைமையாக காணப்பட்டது.
இதற்கு மாற்றாக இப்போது வவுனியா, கிளிநொச்சி, கொடிகாமம் கூட்டுறவுச் சங்கங்கள் கோப் சிற்றிகளை தாங்களாகவே உருவாக்கி சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்திலுள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் எல்லாம் இணைந்து, யாழ்ப்பாண கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜம் என்று செயற்படுகின்ற ஒரு அமைப்பு இருக்கின்றது.
அந்த சமாஜம் இப்போது மக்கள் கடைகள், கோப் சிற்றிகளை உருவாக்குகின்ற ஒரு முயற்சியை தொடங்கியிருக்கின்றது. அதன்படி ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கங்கள் இருந்த பிரதேசங்களிலும் முன்மாதிரியாக சில கிளைகளை எடுத்து அவைகளை கோப் சிற்றிகளாக அல்லது மக்கள் கடைகளாக மாற்றி சமாஜமே பொருட்களை கொள்வனவு செய்து, அந்தக் கூட்டுறவுச் சங்கங்களின் முகாமையாளர்களை வேலைக்கு அமர்த்தி அந்தக் கிளைகளை சிறப்பாக செயற்படக் கூடியதாக தரமுயர்த்துகின்றது. அவற்றை மீண்டும் அந்தக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கையளிக்கின்றது. அதனால் கூட்டுறவுச் சங்கங்கள் தங்களால் முடியும் என்ற ஒரு நம்பிக்கையை பெறக் கூடியதாக இருக்கின்றது.
இத்தகைய முயற்சியை தற்போது நாங்கள் சமாஜம் என்ற வகையில் தொடங்கியிருக்கின்றோம். இந்த வகையில் 5 மக்கள் கடைகளை தொடங்கியுள்ளோம். இன்னும் 2 மக்கள் கடைகளை தொடங்கவுள்ளோம்.
கேள்வி -ஈழப் போர் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில், வடக்கில் கூட்டுறவு அமைப்புக்களின் பங்கு எப்படியிருந்தது?
இக்காலப் பகுதியில் கூட்டுறவுச் சங்கங்களின் பங்கு மிகவும் உன்னதமானது. ஏனெனில் அக்காலப் பகுதியில் பொருட்கள் கப்பலால் கொண்டு வரப்பட வேண்டும். பதுக்கல் இருக்கக் கூடாது. பொருட்கள் நியாய விலைக்குத் தான் வழங்கப்பட வேண்டும் என்று இருந்த போது, மக்களின் இருப்புக்கு ஆதாரமாக இருந்தது கூட்டுறவுச் சங்கங்கள் தான்.
அவைகள் தங்கள் இயல்பிற்கு அப்பால் நின்று கடுமையான உயிர் ஆபத்துக்களின் மத்தியிலும், எத்தனையோ இழப்புக்கள், குண்டு வீச்சுக்களின் நடுவிலும் மக்கள் இடம்பெயரும் போது, தாங்களும் இடம்பெயர்ந்து, அவர்களுக்கான உணவு விநியோகத்தை உத்தரவாதப்படுத்திக் கொண்டே இருந்தன. அதேபோல இடம் பெயர்ந்த இடங்களில் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்த போது, அவற்றை கொள்வனவு செய்து விவசாயிகளை காப்பாற்றியது. மிகவும் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த சமயம், கப்பலில் கோதுமை மா அனுப்பி வைக்கப்படாது இருந்த காலத்தில் குரக்கன் செய்கையை ஊக்குவித்திருந்தார்கள்.
குரக்கன் செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடை செய்யப்பட்ட போது, எங்களுக்கு கோதுமை மாவை அனுப்பியிருந்தார்கள். இதனால் குரக்கன் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். கூட்டுறவுச் சங்கங்கள் குரக்கனை கொள்வனவு செய்து மாவாக்கி மக்களுக்கு விநியோகிக்கும் பெரும் பொறுப்பை மேற்கொண்டிருந்தனர். யுத்த நெருக்கடிக்குள் சிக்கியிருந்த சமூகத்தை தாங்க வைத்ததில் வடமாகாண கூட்டுறவுச் சங்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
கேள்வி 2009ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட இந்தக் காலப்பகுதியில் கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடும், வளர்ச்சிப் போக்கும் எப்படியிருக்கின்றது?
ஆரம்ப காலப் பகுதியில் மிகவும் மந்த கதியில் தான் இருந்தது. அரசாங்கம் தங்களுக்கு நட்டஈடு தரும் அல்லது விசேட நிதிகள் தரும், அதைக் கொண்டு தாங்கள் மேலெழலாம் என்று கூட்டுறவுச் சங்கங்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை.
அது மிகப் பெரிய ஏமாற்ற காலமும், மிகப் பெரிய நெருக்கடியான காலமுமாய் இருந்தது. அத்துடன் 2009 இற்கு பின்னர் வடபகுதிக்கு பெருமளவில் படையெடுத்த நிதிக் கம்பனிகள், தேசிய விற்பனையாளர்கள், முகவர்கள் போன்றோர் வடபகுதியில் பொருளாதாரத்தை ஆக்கிரமித்திருந்த வேளையில், அவர்களுடன் போட்டி போட இயலாத நிலை கூட்டுறவுத்துறைக்கு ஏற்பட்டது.
அந்த வேளையில் கூட்டுறவுத் துறையை மீள் பொறியியல் கட்டமைப்பு மேற்கொள்ள வேண்டிய தேவை ஒன்று இருந்தது. இதனை உருவாக்குவதில் பொருத்தமான தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் இது தாமதித்துப் போனது.
ஆனாலும் தற்போது இருக்கும் மாகாண கூட்டுறவு ஆணையாளர் திரு வாகீசன் அவர்கள் மற்றும் கூட்டுறவுத் துறைக்கு ஆதரவாக வந்துள்ள அனுசரணையாளர்கள் இந்தத் துறைக்கு முழுமையாக உள்வந்து அரசாங்கத்துடன் பேசி சிறப்பு நிதிகளை எடுத்து 2017, 2018, 2019 காலகட்டங்களில் கூட்டுறவுத்துறைக்கு ஒரு எதிர்காலம் இருப்பதற்கான நம்பிக்கையை கொண்டு வந்திருக்கின்றனர்.
சிறிது சிறிதான மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றார்கள். அந்தக் குழுவில் நானும் இணைந்துள்ளேன். நிறைய நம்பிக்கையோடு இருக்கின்றோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்திற்குள் வடபகுதியில் கூட்டுறவு ஒரு பெரிய மாற்றத்திற்கும், ஒரு பெரிய நிலைக்கும் வரும் என்பது உறுதியான நம்பிக்கை.
நன்றி – இலக்கு