மௌனன் யாத்ரீகா:- தற்காலக் கவிதைகள் பெரும்பாலும் மறுவாசிப்பைக் கோருபவை. மறுவாசிப்பு என்பதை புரிதலில் புதிய விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாகக் கொள்ளலாமா?
ஆண்டன் பெனி:- அப்படிக் கொள்ளமுடியாது. அதன் படிமங்களின் மீதான ஈர்ப்பிலோ அல்லது மொழியின் நடையிலோ அல்லது உள்ளுணர்வைத் தீண்டிய மயக்கத்திலோ… மறுவாசிப்பு தேவைப்படுகிறது என்றால் மகிழ்ச்சியே. மாறாகக் கவிதையைப் புரிந்துகொள்ளவே நிறைய மறுவாசிப்பு அவசியமெனில், எத்தனை வாசிப்பு இருந்தாலென்ன? அதனைப் புறந்தள்ளிக் கடந்து போவதே சாலச்சிறந்தது.
கவிதைகளுக்குள் இருக்கும் அதன் ஆன்மாவைத் தேடித்தேடி மேற்கொள்ளப்படும் மறுவாசிப்பு என்பது மிகவும் அவசியமானது. கிறங்கடிக்கும் கவிதையொன்றிலிருந்து வாசித்து வாசித்துத்தானே வெளிவரமுடியும்?
ஒரு படைப்பு வாசகனை அடையாளப்படுத்த வேண்டும் அல்லது வாசகன் அந்தப் படைப்பை அடையாளப்படுத்த வேண்டும், மாறாக தற்காலப் படைப்புகள் பெரும்பாலும் வாசகனை அந்நியப் படுத்துகிறது அல்லது அலட்சியப் படுத்துகிறது.
கவிதையின் படிமங்களோடே கவிஞனும் பயணம் செய்கிறான். தன்மீதான கவன ஈர்ப்புக்காகவே மறுவாசிப்பைக் கட்டாயப்படுத்துகிறான். அவனைத் தவிர்த்துவிட்டு அவனது எந்தக் கவிதைகளையும் அணுகமுடியவில்லை. எனினும் எதிலும் ஒட்டாத மறுவாசிப்பு ஒன்றிலிருந்து விலகிச் செல்லவே விரும்புகிறேன். அது என்னுடையதாக இருப்பினும்.
மௌனன் யாத்ரீகா:- கவிதையில் அடையாளம் காணப்பட வேண்டிய முக்கியமான கூறுகள் எவை?
ஆண்டன் பெனி:- கவிதையைக் கூறுபோட விரும்பவில்லை நான்.
படிமம், குறியீடு, ஓசை, நயம், நடை எல்லாவற்றையும் தாண்டி, எனக்கு மொழியின் பயன்பாடே முக்கியம்.. மொழியின் பயன்பாட்டு வளர்ச்சியானது, அதன் இயல்பான பிற அடையாளங்களுக்குள் எளிதாகப் பயணப்பட வைக்கும். எந்தப் படைப்பாக இருந்தாலும் வாசிப்பு மட்டுமே அதற்கான நிரந்தர அடையாளமாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன்.
கவிதைக்கான *சுயவாசக காலம்* தொடங்கிவிட்டது. தற்காலத்தில் அதிகமானவர்கள் எழுதுகிறார்கள். அதில் பெரும்பாலும் சுயவாசகர்கள்தான். அதனாலென்ன? இருக்கட்டுமே. மொழியின் பயன்பாடு கூடியிருக்கிறது, அதுபோதும்.
மொழியின் பயன்பாடு கவிதையின் அடையாளங்களை வளப்படுத்தும். மொழியைப் பயன்படுத்துகிறவன் ஒருபோதும் அப்படியே அங்கேயே தங்கிவிடப்போவதில்லை, அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்வான். அங்கே அவன் கவிதைகளின் பல்வேறு அடையாளங்களையும் காண்பான். அதனை இன்னும் வளப்படுத்துவான், கொண்டாடுவான். அதுவரையிலும் மொழியின் பயன்பாடும், அதன் வாசிப்புமே கவிதையின் அடையாளங்களாக இருந்துவிடட்டுமே.
மௌனன் யாத்ரீகா:- சிறுகதையைச் சொல்லிப் பெரும் வாசகக் கூட்டத்தை சேர்க்க முடிவதைப்போல் கவிதைகளைப் பொதுவெளியில் சொன்னால் சேர்க்க முடியுமா?
ஆண்டன் பெனி:- முன்னமே சாத்தியமான ஒன்றுதானே அது.
வானம்பாடிகள் தொடங்கி பல்வேறு அமைப்புகள் பல்வேறு காலகட்டத்தில் அதைச் சாத்தியமாக்கியிருந்தன. இசையும் பாடலும் சமமாகப் பயணித்த காலத்தில்கூட, கவிதைகளானது பாடல்கள் வழியாக வாசகக் கூட்டத்தைச் சேர்த்தன. வாசகக் கூட்டத்தைச் சேர்த்த கவியரங்கங்களும் கடைசிக் காலத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டன.
ஒலிக்கு இனிமையான கவிதை, ஔிக்கு இனிமையான கவிதை என்ற இரண்டு வகையான கவிதைகளும் அதனதன் தொணியில் மனதைச் சேர்ந்தாலும், செவிக்கு இனிய கவிதைகளே பெரும் வாசகக் கூட்டத்தைச் சேர்த்தன. செவிக்கினிய கவிதையானது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். அவ்வாறான கவிதைகள் குறைந்துவிட்டன. தற்போது *தன்னுணர்வுக் கவிதை*களே அதிகமாக எழுதப்படுகின்றன. தன்னுணர்வுக் கவிதைகளுக்கு தனி வாசிப்பே போதுமானது. அவை சுய சிலாகிப்பிலேயே மகிழ்ந்துவிடுகின்றன. தன்னுணர்வுக் கவிதைகள் பொது வெளியில் எதனையும் ஈர்க்காது.
ஒரு கவிதையில் எங்கோ ஓரிடத்தில் நாம் ஒளித்து வைத்திருக்கும் ஏதோ ஒரு அடையாளத்திற்காக, இப்பவும் பெருவெளியில் வாசகன் காத்திருக்கிறான் ஆனால் மறைத்து வைக்கப்பட்ட கவிதையின் அடையாளமானது வாசகனுக்கும் தெரியாமல் மறைந்தே அவனைக் கடந்து சென்றுவிடுகிறது.. வாசகன் ஏமாந்துவிடுகிறான். அவன் ஒரு நம்பிக்கையோடு இன்னமும் காத்திருக்கிறான்.
எல்லோருக்குமான கவிதையை நாம் எப்போது எழுதப் போகிறோம்?
சக கவிஞர்- ஆண்டன் பெனி