தாம் தற்போது ‘தள்ளாடும்’ வயதில் இல்லை என்று கூறியுள்ள நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன், ஆனால் தாம் தமது மாணவனாகிய சுமந்திரனை நாடாளுமன்ற அரங்கிலிருந்து “தள்ளி’ விடுவார் என்று கூறியிருக்கின்றார்.
நேற்றிரவு திருநெல்வேலியில் நடந்த நமது கூட்டணியின் கடைசிப் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“தள்ளாடும் வயதிலும் எம். பி. பதவிக்காக அலையும் விக்கி” என சுமந்திரன் தெரிவித்தார் என்று “காலைக்கதிர்’ பத்திரிகையின் நேற்றைய மாலைப்பதிப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக விக்கினேஸ்வரன் அங்கு தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்-
“எனக்கு இப்போது “தள்ளாடும்’ வயதில்லை. ஆனால் “தள்ளிவிடும்’ வயது. யாரை தள்ளிவிடப்போகின்றேன்? எமது மாணவனாகிய சுமந்திரனை நாடாளுமன்ற அரங்கிலிருந்து தள்ளிவிடப் போகின்றேன். தற்போது அவரைத் தள்ளிவிடும் அவசியம் ஏற்பட்டுள்ளது. அவர் எமது தமிழ் மக்களை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிடப் பார்க்கின்றார்.
நான் வெற்றி பெற கூடாது என அவர் கூறுவது, தான் நினைத்தது போன்று மக்களை அகால பாதாளத்திற்குள் தள்ளிவிடுவதற்காக. நாம் அதற்கு இடமளிக் கமாட்டோம் என்பதனை நான் எனது இந்த வயதில் கூறுகின்றேன். எந்த வயதிலும் கூறுவேன்” என மேலும் தெரிவித்தார் விக்னேஸ்வரன்.