அன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
இன்னும் சிலநாட்களில் இலங்கை பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் இந்நிலையில் உங்களது வாக்குகள் யாருக்கானவை என்பதை நீங்கள் தீர்மானித்திருப்பீர்கள், இருப்பினும் கிடைக்கும் சலுகைகளைவிட எங்களது மண்ணும், வளமும் அதனோடு இணைந்த வாழ்வும் முக்கியமானவை என்பதை அறிவீர்கள்
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழின விடுதலைக்காக நிகழ்த்தப்பட்ட விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் அரசியல் தலைவிதியை யார் யாரோவெல்லாம் மாத்தியெழுத முயற்சிக்கிறார்கள். பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களை கொண்றுகுவித்த ராகபக்ச குடும்பத்தை சர்வதேச விசாரனைகளூடாக நீதி பெற்று தந்திருக்க வேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் “தமிழினப்படுகொலை” என்பதையே குறிப்பிடவில்லை தவிர, சர்வதேச விசாரணை பற்றியோ இனவழிப்புக்கான நீதி பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை, இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கும் வாக்குகள் தமிழின படுகொலைக்கான நீதி தேடலை இல்லாமல் செய்துவிடும். இதனூடாக இனப்பிரச்சினைக்கான தீர்வும் கிடைக்காது போய்விடும்.
இன்று தமிழ் மக்களுக்கு வேண்டியது கொள்கையில் சமரசம் செய்யாத தலைமையே அன்றி, இனத்தின் இருப்பையே இல்லாதொழிக்கும் தலைமையன்று. சிங்கள கடும்போக்கு ராஜபக்சே கும்பலின் நில அபகரிப்பு இன்னும் துரிதகதியில் தமிழர் தேசமெங்கும் நிகழவிருக்கிறது, இவற்றை தடுத்துநிறுத்தவும் சர்வதேச அழுத்தத்தை பிரயோகிக்கவும் மண்ணையும் வளத்தையும் காக்கவும் துடிப்புள்ள இளைய தலைமையொன்று தேவைப்படுகிறது. அத்தகைய தலைமைத்துவம் திரு கஜேந்திரகுமார் அவர்களால் கொடுக்கப்படமுடியும் என்பதை ஈழத்தமிழ் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். கடந்தபல வருடங்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமக்கு கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் பயன்படுத்தி சிங்கள தற்போதைய அரச தலைவர்களால் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலை தொடர்பாக சர்வதேச பிரதிநிதிகளை அணுகிய போதெல்லாம் அவர்கள் கேட்டது, உங்களுக்கு இருக்கும் மக்கள் ஆதரவை நிரூபித்து, நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக வருமிடத்து நாங்கள் உங்கள் கருத்துக்களை பரிசீலிப்போம். எனவே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வை காணவும் தமிழினப்படுகொலைக்கான நீதிகோரவும் தமிழ் தேசிய முன்னணிக்கு உங்களது பலத்த ஆதரவு தேவைப்படுகிறது.
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண கிடைத்த வாய்ப்புக்களை தவறவிட்டும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும், தமிழினப்படுகொலையாளிகளை தண்டிக்கவும் கிடைத்த அரிய வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்ட தமிழ் தலைவர்கள் தங்களை நல்லாட்சி அரசு ஏமாற்றிவிட்டது என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். சிங்களவர்களை நோக்கி ஒருமுகமும், தமிழ்மக்களுக்கு பிறிதொரு முகமும் காட்டி எங்கள் மக்களை ஏமாற்றி வருகின்ற தமிழ் தலைவர்கள் மத்தியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையால் மாமனிதர் என்ற சிறப்பு மதிப்பளிப்பை பெற்ற குமார் பொன்னம்பலம் அவர்களது வழித்தோன்றல் கஜேந்திரகுமார் பலமடங்கு மேலானவர். அவரது தலைமைத்துவத்துக்கு பக்கபலமாக சற்றும் விட்டுக்கொடுப்பில்லாத கொள்கையாளன் கஜேந்திரன் அவர்களது ஆதரவுடனும் இன்னும் பல இளைய தலைவர்களை பக்கபலமாக கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றே எங்களுக்கான நிம்மதியான வாழ்வை பெற்றுத்தரக்கூடிய ஒற்றை நம்பிக்கை.
வடக்கில் டக்கிளஸ் தேவானந்தா, அங்கயன், விஜயகலா, கிழக்கில் முரளீதரன் என்னும் கருணா, இன்னும் பல சுயேட்ச்சைகள் அரச ஆசீர்வாதத்துடன் தேர்தலில் களமிறங்குகின்றன. இவர்களுக்கு செலுத்தும் வாக்குகள் ஒட்டுமொத்த தமிழினத்தையே சிங்களவர்களுக்கு அடகுவைப்பதற்கு ஒப்பானது. எனவே சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம். தவிர இந்திய பின்புலத்துடன் தமிழ்மக்களது தமிழ்த்தேசிய எண்ணத்தை சிதைக்கவென களமிறக்கப்பட்டவர்தான் விக்கினேஸ்வரன் மற்றும் அவரது கட்சியினர், அவர்கள் தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஐக்கியமாவதற்கு ஏற்கனவே தயாராகி விட்டார்கள். தமிழர் தேசம் என்ற சொல்லாடலைக்கூட விரும்பாத விக்கினேஸ்வரன் எவ்வாறு தமிழர்களது நலன்களை திருப்திப்படுத்த போகிறார்?
தமிழர் தேசம் என்பது இன்று நேற்று வந்த சொல்லாடல் அல்ல அது தந்தை செல்வநாயகம் காலத்திலிருதே பயன்படுத்தபட்டுவந்தது. தந்தை செல்வா அவர்கள் நிராகரித்த சிங்க கொடியை இன்றய தமிழ்த்தலைவர்கள் தூக்கி சுமக்க முற்படுகிறார்கள். தேர்தலின் பின்னர் கடும் சிங்கள விசுவாசிகளான சுமந்திரனது கைப்பிடிக்குள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முழுமையாக சரணடைந்து விடும் அதன் பின்னர் தமிழ் மக்களது எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் இவர்களால் நாங்கள் படப்போகும் அவலத்தை எண்ணிப்பார்த்தால் வேண்டும். அத்தோடு சுமந்திரன் தான்தோன்றித்தனத்தால் அவருக்கு வேண்டிய தமிழ் தேசிய எதிர்ப்பாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற போர்வையில் உள்நுழைக்கப்பட்டு தமிழர்களது எச்ச சொச்ச நலன்களும் புறம்தள்ளப்படும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது “தமிழ்த் தேசிய பேரவையின்” உருவாக்கம், இந்த தமிழ் தேசிய பேரவை என்பது தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவபடுத்தும், மேலும் எதிர்வரும்காலங்களில் தமிழ் மக்களது நலன் சார்ந்து எடுக்கப்படும் எந்த முடிவுகளையும் இந்த தமிழ் தேசிய பேரவையே தீர்மானிக்கும், இதனால் தனியொருவரோ அல்லது தனிக்கட்சியோ சுயமாக முடிவெடுக்க முடியாது என்பதோடு இந்த தமிழ்த் தேசிய பேரவை ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை காணவும் பாடுபடும்.
இந்தவிடத்தில் தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் குரல்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்கின்றன, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களது ஆதரவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை வலுப்பெற வைக்கிறது, தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் இருப்பை உறுதிசெய்ய அவரால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் நீங்கள் அறிந்தவையே, இத்தகைய தமிழ்த் தேசிய தலைவர்களை எதிர்காலத்தில் ஒன்றுபடுத்தி உலகத்தமிழினத்தை ஒரேயணியாக பிரதிநிதித்துவ படுத்தவும் இந்த தேர்தல் உதவும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் தங்கள் சார்ந்த கொள்கைகளில் தீவிரமானவர்கள். அதனால் தமிழ் மக்களது நலன்களை சற்றும் சமரசம் செய்யாமல் பெற்றுத்தருவார்கள் என்று நம்புகிறோம், தவிர்த்து சிங்கள அரசின் கைப்பொம்மைகளாக இருக்கும் தலைவர்களால் நாம் அனுபவித்ததை நீங்கள் அறிவீர்கள். கடந்தகாலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் தமிழ் மக்களுக்கு என்னவெல்லாம் செய்தார்கள்?
தமிழினப்படுகொலைக்கான நீதி கோருதலை புறக்கணித்தார்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை புறம்தள்ளினார்கள், சிங்கள பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள், தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று முன்னாள் போராளிகளை சிறையில் தள்ளினார்கள், போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கான வாழ்வாதாரங்களை பெற்றுத்தரவில்லை, தமிழர்களது கடல்வளங்களும் நிலங்களும் சிங்கவர்களால் அபகரிக்கப்படும்போதெல்லாம் அமைதிகாத்தார்கள், ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்கிறார்கள், தமிழர்களது தேசம் என்பதையே நிராகரித்தார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள அரசை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பிக்க வைத்தார்கள்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு நீங்கள் செலுத்தும் வாக்குகள் அடுத்துவரும் ஐந்து வருட காலப்பகுதிக்கு உங்களை நிம்மதியாக வாழவைக்கும். சிங்கள அரசினது கடும்போக்கை எதிர்த்து நின்று கேள்விக்கு உட்படுத்தும் கஜேந்திரர்களின் வெற்றியே சிங்களவனை கதிகலங்க வைக்கும். சுத்துமாத்து அப்புக்காத்துகளை நம்பியதும் ஏமாந்த்ததும் போதும், தீர்க்கமாய் முடிவெடுங்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட அத்தனை சொந்தங்களையும் மனதில் இருத்துங்கள், தமிழின விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை இந்த வீர மறவர்களை மனதில் கொள்ளுங்கள், அந்த தூய மறவர்களை உண்மையாக மனதளவில் நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் வாக்களிக்க வேண்டும், அந்தவாக்கு சைக்கிள் சின்னத்துக்காக இருத்தல் வேண்டும். சிங்கள பாராளுமன்ற வாசலை இந்த சைக்கிள் மணி ஓங்கியடித்து நீதிகேட்க்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
இவ்வண்ணம்
தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள்
அவுஸ்திரேலியா.