பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. புதன்கிழமை வாக்களிப்பு. இடையில் வரும் இரண்டு தினங்களும் அமைதித் தினங்கள். மக்கள் தீர்மானிப்பதற்கான தினங்கள் இவை. மக்கள் எவ்வாறு தீர்மானிக்கப்போகின்றார்கள்? யாருக்கு வாக்களிக்கப்போகின்றார்கள்?
தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களுடைய வாக்குகள் எவ்வாறு அமையும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுனைவிற்குத்தான் அவர்கள் வாக்களிக்கப்போகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை – பொதுத் தேர்தலிலும் அவர்கள் தக்கவைப்பார்கள். பிரதான எதிர்க் கட்சியாக இருக்க வேண்டிய ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவும் அவர்களுக்குச் சாதகமாகியிருக்கின்றது.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பொதுஜன பெரமுன இத்தேர்தலில் வெற்றி பெறும். ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது சுமார் 115 ஆசனங்களை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கு அது போதும். ஆனால், மூன்றில் இரண்டு – 150 ஆசனங்களைப் பெறுவதற்கு தேர்தலின் பின்னர்தான் அவர்கள் பேரம் பேச வேண்டியிருக்கும்.
எதிர்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சுமார் 65 ஆசனங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சியாக வரலாம். ரணில் தலைமையிலான ஐ.தே.க. சுமார் 20 ஆசனங்கள் வரை தான் பெற்றுக் கொள்ளும். ஆக, மீண்டும் பிரதமராக வரப்போவது மகிந்த ராஜபக்ஷதான் என்பதுதான் புலனாய்வுப் பிரிவுகள் கொடுத்துள்ள தகவல். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டைப் பெற்றுக்கொள்வதற்கு ரணிலின் தயவை மகிந்த நாடலாம். அப்படியானால், தமிழ்த் தரப்புக்களையிட்டு கவலைப்படாமல் ஆட்சி தொடரும்.
தமிழ்த் தரப்பின் நிலை என்ன?
தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில் அதனை மூன்று பிரிவாகப் பார்க்க முடியும். தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய அணிகள். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன அடங்கும். இரண்டாவது, அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் குழுக்கள். ஈ.பி.டி.பி., பிள்ளையான் அணி, கருணா அணி என்பன இதற்குள் அடங்கும். மூன்றாவது சுயேச்சைக் குழுக்கள். இவற்றைவிட தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக தமிழ்ப் பகுதிகளில் போட்டியிடுபவர்கள்.
இதில் தமிழர் தாயகப் பகுதிகளைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் மூன்று கட்சிகளுமே முதன்மையானவையாக உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றது. விக்கினேஸ்வரனின் அணியும், கஜேந்திரகுமாருடைய அணியும் கிழக்கு மாகாணத்தில் போதியளவு ஆதரவைக் கொண்டவையாக இல்லை. யாழ், வன்னி தேர்தல் மாவட்டங்களில்தான் அதிகளவு செல்வாக்கைக் கொண்டவையாக அவை உள்ளன.
“அதிகளவு பலத்துடன் சென்றால்தான் பேரம்பேச முடியும்” என்ற கோஷத்தை முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்காக 20 பேர் தமது தரப்பில் வெற்றிபெற வாக்களியுங்கள் என்ற கோரிக்கையை வாக்காளர்கள் முன்வைக்கின்றது.
ராஜபக்சாக்கள் ரணிலின் ஆதரவையும் தக்கவைத்து மூன்றில் இரண்டைப் பெற்றுவிட்டால், கூட்டமைப்பால் எவ்வாறு பேரம்பேச முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெறுவதைத்தான் ராஜபக்சாக்களும் விரும்புவதாகவே தெரிகின்றது. காரணம் – கூட்டமைப்பைக் கையாள்வது இலகுவானது என்பது ராஜபக்சாக்களுக்குத் தெரியும்.
தேர்தல் விஞ்ஞாபனங்கள்
இந்த நிலையில் பிரதான தமிழ்க் கட்சிகள் தமது விஞ்ஞாபனங்களையும் வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வழமைபோல சமஷ்டியை வலியுறுத்துகின்றது. “ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டிக் கொள்கைகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு ஏற்பாட்டின் மூலம் மட்டுமே இலங்கைத் தமிழர்கள் மற்றும் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களின் நியாயமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியும். உண்மையில் அத்தகைய ஏற்பாடு அம்மக்களை நிலைநிறுத்துவதற்கு இன்றியமையாததாகி விட்டது” என்பதுதான் கூட்டமைப்பு முன்வைக்கும் அரசியல் தீர்வு.
போர் முடிவுக்கு வந்த கடந்த பத்து வருடங்களில் சந்திக்கும் மூன்றாவது தேர்தல் இது. இதற்கு முன்னைய இரண்டு தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான் மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். முதல் 5 வருடங்கள் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியிலும், பின்னைய ஐந்து வருடங்கள் மைத்திரி – ரணில் ஆட்சியிலும் கூட்டமைப்பினால் சாதிக்க முடிந்தது என்ன என்ற கேள்வி பிரதானமாக எழுகின்றது. அவர்களே மீண்டும் வந்தால் சாதிப்பார்களா என்ற கேள்விக்கும் விடைகாண வேண்டும்.
அதேவேளையில் பொறுப்புக் கூறல் விடயத்திலும் கூட்டமைப்பு உறுதியாக நிற்கவில்லை. குறிப்பாக பரிகார நீதியை கூட்டமைப்பு கேட்கவில்லை. இலங்கையில் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பரிகார நீதியைக் கோர முடியும். இனப்படுகொலையிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பது என்பதற்காக சர்வதேச அங்கீகாரத்துடனான நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கியும் அதிலிருந்துதான் செல்ல முடியும்.
ஆனால், கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், “அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக தீர்வு அமைய வேண்டும்” என தமது சுருதியை மாற்றியிருப்பது கவனிக்கத்தக்கது. அதாவது, சிங்களவர்களின் அங்கீகாரத்தைப் பெறக் கூடிய ஒரு தீர்வு தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை எப்படித் தீர்ப்பதாக இருக்கும்?
பரிகார நீதியும் நிலைமாறுகால நீதியும்
மறுபுறத்தில் விக்கினேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் பரிகார நீதியை ஏற்றுக்கொள்கின்றார்கள். இருவருமே இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொண்டவர்கள். எந்த ஒரு தீர்வும் அதன் அடிப்படையில்தான் வர வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர்கள். அதேவேளையில், தீர்வுக்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தமிழர் தாயகப் பகுதிகளில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை இருவருமே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் வலியுறுத்தியருக்கின்றார்கள்.
“இலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும் ஒட்டுமொத்தமான ஒரு இனப்படுகொலையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் முரண்பாடுகளைக் களையும் விதத்திலும் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்வதற்கும் சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்துமாறு சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிடம் கோருவதாக” விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதன் விஞ்ஞாபனத்தில் பிரதானமாகக் குறிப்பிட்டிருப்பது இதனைத்தான்; “எமது மக்களின் தாயகம், தனித் துவமான இறைமை கொண்ட தேசம் மற்றும் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படைகள் சமரசத்துக்கு அப்பாற்பட்டவை. எமது மக்களின் நலன்களுக்கு மேற்குறித்த கோட்பாடுகள் அங்கீகரிக்கப்படுவது அடிப்படையானது. நாம் எந்த நாட்டினதும் தேசத்தினதும், இனத்தினதும், இனக்குழுக்களினதும் நலன்களுக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாக, எமது தேசத்தின் நலன்கள் பேணப்படும் வகையில் சிங்கள தேசத்துடனும் இந்தியா மேற்குலகு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடனும் ஆரோக்கியமான இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப விரும்புகின்றோம்.”
வாக்காளர்களைப் பொறுத்தவரையில் விஞ்ஞாபனங்களைப் படித்து வாக்களிப்பவர்கள் அல்ல அவர்கள். ஆனால், பிரதான தமிழ்க் கட்சிகள் எவ்வாறான பாதையில் செல்லப் போகின்றன என்பதை இவை ஓரளவுக்காவது கட்டியம் கூறுவதாக இருக்கும். புதன் கிழமை மக்கள் எடுக்கப் போகும் முடிவு என்ன?
நன்றி – இலக்கு