உலகை அச்சுறுத்தி வரும் ரான்சம்வேர் வைரஸ்க்கும், தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என வட கொரியா மறுப்பு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப உலகில் அசுரத்தனமாக தற்போது உருவெடுத்துள்ள வான்னாக்ரை ஹேக்கிங் குழுவினர், இமெயில் மூலமாக ரான்சம்வேர் ஹேக்கிங் மால்வேரை ஒருவரது கணினிக்கு அனுப்புகிறார்கள்.
பின்னர், சம்மந்தப்பட்ட நபருக்கு தெரியாமல் அவரின் இ-மெயிலை திறக்கும் போது அந்த மால்வேர், அந்த கணினியில் உள்ள தகவல்களை ஹேக் செய்து விடுகிறது.
பின்னர், கணினிக்கு சொந்தமான நபரிடம், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் திருடிய தகவல்களை திரும்ப அளிப்போம். இல்லையேல் அழித்து விடுவோம் என அந்த குழுவினர் எச்சரிக்கை செய்தி விடுகின்றனர்.
இந்த ரான்சம்வேர் வைரஸால் உலகளவில் உள்ள பெரிய நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என பலவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளது
இந்த ஆபத்தான வைரஸை அணு ஆயுதங்களால் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் வட கொரியா தான் உருவாக்கியது என பரவலாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம், தென் கொரியாவுக்கு எதிராக ஒரு பயங்கர வைரஸை வட கொரியாவின் சைபர் கிரைம் குழு ஏற்கனவே உருவாக்கியதாக சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.
இந்த ரான்சம்வேர் வைரஸும், வட கொரியா முன்பு உருவாக்கிய வைரஸ் போலவே உள்ளதாக இணைய வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களை வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், உலகில் எங்கு பிரச்சனை நடந்தாலும் வடகொரியாவை இழுத்து விடுவது கேலிக்குறியதாக உள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் துணைத்தூதர் கிம் இன் யோன் தெரிவித்துள்ளார்.