மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் உரிய நேரத்திற்கு வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும்,மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் நிலையமான மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்க 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் புத்தளத்தில் இடம் பெயர்ந்த 5 ஆயிரத்து 807 வாக்களர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்காளர்கள் வாக்களிக்க முடியும். மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்கள் 15 அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளில் ஆயிரத்து 202 உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 8 மணி முதல் 10 மணி வரையான நேரப்பகுதிக்குள் 76 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேர்தல் கடமைக்கு 130 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் மன்னார் மாவட்டத்தில் இது வரை எவ்வித அசம்பாவிதமும் இடம் பெறவில்லை.
நல்ல முறையில் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.வன்னி தேர்தல் மாவட்டத்தில் 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
17 கட்சிகளும், 28 சுயேட்சைக்குழுக்களும் இவ்வாறு தேர்தலில் போட்டியிடுகின்றனர். வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய உள்ளனர்.
நாளை புதன் கிழமை காலை 7 மணியில் இருந்து வாக்கெடுப்பு இடம் பெறும். வழமையாக இடம் பெறும் வாக்கெடுப்பு இம்முறை வித்தியாசமான முறையில் அனுகப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து வாக்கெடுப்புக்கள் இடம் பெற உள்ளது.
காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்கெடுப்பு மாலை 5 மணிவரை இடம் பெறும். வாக்களிப்பு நிறைவடைந்தவுடன் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு கொண்டு வரப்படும்.
எதிர் வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மீண்டும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.தேர்தல் கடமைக்கு 700 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இருந்து புத்தளத்தில் இடம் பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வவுனியாவிற்கு வாக்கு எண்ணுவதற்காக கொண்டு செல்லப்படும்.
இது வரை எவ்வித அரசியல் கட்சிகளும் எவ்வித குழப்பங்களையும் எற்படுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.