இலங்கையில் 2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு சீட்டுகள் வாக்களிக்கும் பெட்டிகள் இன்று காலை முதல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மற்றும் மகாஜன கல்லூரி என்பனவற்றில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 428 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் வாக்கு சீட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டன.
19 கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார விதிமுறைகளைப் பேணியவகையில் பிரதான வாக்கெடுப்பு நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.மாவட்டத்தில் உள்ள கல்குடா, பட்டிருப்பு,மட்டக்களப்பு ஆகிய 03 தேர்தல் தொகுதிகளிலும் 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் 05 பாராளுமன்றப் பிரதிநிகளைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கவுள்ளனர். இதற்காக 16 அரசியல் கட்சிகளையும், 22 சுயேச்சைக்குளுக்களையும் சேர்ந்த 304 அபோட்சகர்கள் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும்,கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும்,பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வாக்களிப்புக் கடமைகளுக்காக இம்முறை 4 ஆயிரத்தி 710 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்கெண்ணும் பணிகளுக்காக பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும், மகாஜனக் கல்லூரியும் செயற்படவுள்ளன. இதில் 34 வாக்கெண்ணும் மண்டபங்கள் இந்துக்கல்லூரியிலும்,33 வாக்கெண்ணும் மண்டபங்கள் மகாஜனக்கல்லூரியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1417 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர்.