விந்தணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஹார்மோன்களை கொண்டுள்ள இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட வேண்டியிருக்கும்.
ஆணுறை மற்றும் விந்தணுக்குழாய் நீக்க அறுவை சிகிச்சை (வஸக்டமி) போன்ற தற்போது ஆண்களுக்கு இருக்கின்ற குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளோடு இந்த மாத்திரையும் சேரவுள்ளது.
ஆனால், இந்த மாத்திரை சந்தைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என்று ‘என்டாக்டரின் சொஷைட்டியின்’ ஆண்டுக் கூட்டத்தில் மருத்துவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் தேவைகளை நிறைவேற்றும் ஆவல்
பெண்களுக்கான கருத்தடை மாத்திரை பிரிட்டனில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியானது. ஆனால், அதேபோல ஆண்களுக்கு இத்தகைய ஒரு மாத்திரை கொண்டு வருவது ஏன் மிகவும் கடினமாக உள்ளது?
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கொண்டு வருவதற்கு சமூக மற்றும் வணிக விருப்பம் குறைவாக இருந்ததே இதற்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால், இத்தகைய ஒரு மாத்திரை சந்தையில் கிடைக்குமானால், பல ஆண்கள் அதனை சாப்பிடுவதை விரும்புவர் என்று கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
2011ம் ஆண்டு ஆங்கிலேய ரஸ்கின் பல்கலைக்கழகம் பிரிட்டனில் நடத்திய ஆய்வில், 134 பெண்களில் 70 பேர், தங்களின் ஆண் துணைவர் இந்த மாத்திரையை சாப்பிட மறந்துவிடுவர் என்று கவலைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
உயிரியல் ரீதியாக, பாலியல் தேவைகளை நிறைவேற்றும் ஆவல் அல்லது ஆண்குறி விறைப்பை குறைக்காதவாறு ஹார்மோன் அடிப்படையிலான மாத்திரையை உருவாக்கும் சவால் சாத்தியமாகி வருவதை இது காட்டுகிறது.
விந்தணு உற்பத்தி
ஹார்மோன்களால் தூண்டப்பட்டு, ஆண்களின் விரைகளால் தெடர்ந்து விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஹார்மோன் நிலைகளை குறைக்காமல் இந்த விந்தணுக்கள் உற்பத்தி திறனை தற்காலிகமாக தடுப்பதால் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதுதான் பிரச்சனை.
ஆனால், எல்ஏ பயோமெட் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் பரிசோதனை செய்யப்படுகின்ற இந்த சமீபத்திய மாத்திரை, இந்த இலக்கை எட்டும் என்று நம்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
40 ஆண்களோடு நடத்தப்பட்ட தொடக்க பரிசோதனையின் “முதல் கட்டம்” திருப்தியாக உள்ளது என்று இந்த விஞ்ஞானிகள் ‘என்டாக்டரின் 2019’ கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
28 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வு
- 10 பேர் போலியான மாத்திரை சாப்பிட்டனர்
- 30 பேர் ஆண் கருத்தடை மாத்திரையான 11-பீட்டா-எம்என்றிடிசி சாப்பிட்டனர்.
போலி மாத்திரை எடுத்தவர்களை விட, ஆண் கருத்தடை மாத்திரை சாப்பிட்டவர்களிடம் விந்தணு உற்பத்தி செய்வதற்கான ஹார்மோன் நிலைகள் அதிகமாக குறைந்தது. பரிசோதனை காலத்திற்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது.
ஆண்குறி விறைப்பு செயலிழப்பு
பக்க விளைவுகள் இந்நேரத்தில் பெரிதாக எதுவும் இல்லை. லேசாகவே இருந்தன.
இந்த சோதனையில் பங்கேற்ற ஐந்து ஆண்களில் பாலியல் தேவைகளை நிறவேற்றி கொள்ளும் ஆவல் குறைந்ததாகவும், இரண்டு பேரிடம் லேசான ஆண்குறி விறைப்பு செயலிழப்பு இருந்தாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பாலியல் செயல்பாடுகளில் குறைவு ஏற்படவில்லை. பக்க விளைவுகளின் காரணமாக இதில் பங்கேற்ற யாரும் மாத்திரையை எடுக்காமல் விட்டுவிடவும் இல்லை. அனைவரும் இந்த மாத்திரை மனிதருக்கு பாதுகாப்பாப்பானதா என்ற பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வு பணியை மேற்கொண்டுள்ள ஆய்வாளர்களான பேராசிரியர் கிறிஸ்டினா வாங் மற்றும் அவரது சகாக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இந்த கண்டுபிடிப்புக்கள் பற்றி அவர்கள் எச்சரிக்கையாகவே உள்ளனர்.
“இரண்டு ஹார்மோன்களின் செயல்பாடுகளை ஒன்றாக இணைக்கின்ற இந்த மாத்திரை, பாலுணர்வை பாதுகாத்து அதேவேளையில், விந்தணுக்களின் உற்பத்தியை குறைக்கிறது” என்று அவர் கூறுகிறார்.
ஆனால், குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவதற்கு போதிய அளவுக்கு வேலை செய்கிறதா என்று சோதிப்பதற்கு பெரிய அளவிலான, நீண்டகால ஆய்வுகள் அவசியம்.
உடல் ஜெல்
ஹார்மோன் அடிப்படையிலான ஆண் கருத்தடை மாத்திரை ஒன்றை மட்டுமே பேராசிரியர் வாங் ஆய்வு செய்யவில்லை.
ஆண்கள் உடலில் பூசக்கூடிய ஜெல் ஒன்றையும் இந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சர்வதேச அளவில் நடத்தக்கூடிய பரிசோதனையின் ஒரு பகுதியாக பிரிட்டனிலுள்ள ஆண்கள் இதனை சோதிக்க தொடங்குவர்.
இதனை பயன்படுத்துவோர் தங்களின் முதுகிலும், தோள்களிலும் இந்த ஜெல்லை தடவ வேண்டும். தோலிலுள்ள நுண்ணிய துளைகள் வழியாக இது உடலுக்குள் உறிஞ்சப்படும்.
இந்த ஜெல்லிலுள்ள புரோகெஸ்டேன் ஹார்மோன், விந்தணு உற்பத்தியை அல்லது விந்தணு இல்லாத அளவுக்கு குறைத்து, விரைகளின் இயல்பான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை தடுக்கிறது.
அதேவேளை டெஸ்டோஸ்டிரோனுக்கு பதிலாக உடலில் பூசப்படும் இந்த ஜெல், ஹார்மோனால் தூண்டப்படும் பாலியல் தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் ஆவலையும், பிற செயல்பாடுகளையும் அப்படியே பராமரிக்கிறது,
இந்நிலையில், வாஷிங்டன் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் வாங், டாக்டர் ஸ்டெஃபானியே பேஜ் மற்றும் சகாக்கள், டிஎம்ஏயு என்ற இன்னொன்றையும் சோதனை செய்து வருகின்றனர்.
கருத்தடை மாத்திரைபோல ஆண்கள் இதனை ஒவ்வொரு நாளும் சாப்பிடலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
100 ஆண்களிடம் நடத்தப்பட்ட சோதனைகள் அடுத்தக்கட்ட சோதனைகளுக்கு செல்லக்கூடிய அளவுக்கு பாதுகாப்பானது என்று முடிவுகளை தந்துள்ளன.
மனநிலை கோளாறுகள்
ஒவ்வொரு மாதமும் ஊசி மூலம் நீண்டகாலம் செயல்படும் குழந்தை பிறப்பை தடுப்பதற்கான முயற்சிகளை பிற விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
ஆனால், மனநிலை கோளாறுகள் அல்லது மன அழுத்தம் உள்பட பக்கவிளைவுகள் இருப்பதாக சில தொண்டர்கள் கூறியதால், இந்த ஊசி மருந்தின் பாதுகாப்பையும், செயல்திறனையும் பார்த்து, இரண்டாம் கட்ட ஆய்வில் ஆண்களின் பெயரை பதிவு செய்வதை அவர்கள் நிறுத்தியுள்ளனர்.
ஹார்மோன்களை செலுத்த விருப்பப்படாத ஆண்களுக்கு, விந்தணு ஆண்குறிக்கு செல்வதை நிறுத்துவதன் மூலம் விந்தணு செல்லுகின்ற பாதைகளை தடுப்பதற்கு வழிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர்.
இடது மற்றும் வலது விரைகள் ஆண்குறிக்கு விந்தணுவை அனுப்புகின்ற இரண்டு நாளங்களில் வசால்ஜெல் என்கிற பல்படிம பொருளை செலுத்துவது, ஹார்மோன் அல்லாத, மீண்டும் இயல்புநிலை அடையக்கூடிய, நீண்டகால ஆண்களின் கருத்தடை மாத்திரையாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இதுவரை விலங்குகளில் மட்டுமே இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த சோதனைகளை செய்கின்ற விஞ்ஞானிகள் மனிதரிடம் பரிசோதனைகளை மேற்கொள்ள சமீபத்தில் நிதி ஆதரவு பெற்றுள்ளனர்.
சாத்தியமான சந்தை
பிரிட்டன் மேற்கொள்ளும் சோதனைகளில் முன்னிலையிலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் அன்டர்சன், ஆண்களின் உடலில் பூசப்படும் ஜெல் கருத்தடை பற்றி பரிசோதிப்பார்.
ஆண்களும், அவர்களின் பெண் துணைவர்களும் கருத்தடைக்கு இன்னொரு தெரிவு இருப்பதை வரவேற்கவே செய்வர் என்பதற்கு சிறந்த சான்று இருந்தாலும், ஆண் கருத்தடை பற்றிய புதிய கருத்தை ஏற்பதில் மருந்து தொழில்துறை மொதுவாகவே இருப்பதாக இவர் குறிப்பிடுகிறார்.
“மருந்து தொழில்துறை சத்தியமான சந்தை பற்றிய சம்மதிக்கவில்லை என்றே நான் எண்ணுகிறேன்” என்று அவர் கூறினார்.
“இதுவொரு நீண்ட கதை. முதலீடு குறைவே இதன் ஒரு பகுதி” என்கிறார் அவர்.
சரிபார்க்கப்பட்ட வரலாறு
தொழில்துறையில் குறைவான ஈடுபாடு காரணமாக, லாபம் ஈட்டாத அமைப்புகள் மற்றும் கழகங்களின் நிதி ஆதரவை விஞ்ஞானிகள் நம்பியிருக்க வேண்டியுள்ளதால், அதிக காலம் எடுத்துள்ளது.
இது பற்றி கருத்துக்கூறிய ஷிஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண் உறுப்பு நோயியல் பேராசிரியர் ஆலன் பாசே, “குழந்தை பிறப்பை தடுக்கும் மாத்திரை அல்லது ஊசியை உருவாக்குவது இதுவரை வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட வரலாற்றை கொண்டுள்ளது. எனவே, புதிதாக உருவாக்கப்பட்டவை பரிசோதிக்கப்படுவதை பார்ப்பது நன்றாகவே உள்ளது” என்று கூறியுள்ளார்.
“இந்த பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், அதனை சந்தைக்கு கொண்டு வருவதற்கு மருந்து நிறுவனங்கள் போதிய ஆர்வம் காட்டுவது மிகவும் முக்கியமானதாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, ஆண் கருத்தடை மாத்திரையை சந்தைக்கு கொண்டு வருவதற்கு மருந்து நிறுவனங்கள் இன்னும் ஆர்வம் காட்டவில்லை. காரணங்களை முழுமையாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அறிவியலைவிட வர்த்தகத்தையே நான் சந்தேகிக்கிறேன் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.