தேர்தல் பரப்புரைகள் முடிந்து, மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், முடிவுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தேர்தல் மாவட்ட நிலைமைகளை ஒருமுறை விரைவாகப் பார்த்துவிடுவோம்.
மொத்த வாக்காளர்கள்: 5,71,848
(கிளிநோச்சி – 92,264, காங்கேசன்துறை – 63,535, கோப்பாய் 61,415, மானிப்பாய் 58,720, சாவகச்சேரி 55,291, நல்லூர் – 50,849, வட்டுக்கோட்டை – 50,441, உடுப்பிட்டி – 41,403, பருத்தித்துறை – 39,226, யாழ்ப்பாணம் – 35,216, ஊர்காவற்த்துறை – 23,488)
கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தல் வாக்காளர்கள் எண்ணிக்கை 5,29,239 உடன் ஒப்பிடுமிடத்து 42,609 வாக்காளர்கள் அதிகமாகும்.
வாக்களிப்பு வீதம்: 2015 – 61.56% (3,25,805)
அனைத்து 22 தேர்தல் மாவட்டங்களிலேயே அதிகுறைந்த வாக்களிப்பு வீதம். 2015 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின் 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சிச்சபைத் தேர்தல்கள் மற்றும் 2019 சனாதிபதித் தேர்தல்களில் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. ஆனால் 70 சதவீதத்தையே கடக்கவில்லை. இம்முறை வாக்களிப்பு குறைவடையலாம் என்ற நிலையில் இவ்விடயம் முடிவுகளில் அதீத கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
நிராகரிக்கப்படும் வாக்குகள்: 2015 – 7.83% (25,496)
22 தேர்தல் மாவட்டங்களில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அளிக்கப்பட்ட வாக்குகளில் அதிகரித்த வாக்குகள் நிராகரிக்கப்பட்ட மாவட்டமாகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகளே ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யும் அளவுடையது என்பது கரிசனை தரும் விடயம்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை: 7
வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்தலுக்கு தேர்தல் மாறுபடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில், அதிக பாதிப்பை எதிர்கொண்ட மாவட்டம். 11 பாராளுமன்ற உறுப்பினர்களை 1989 தேர்தலில் கொண்டிருந்து பின்னர் அது 9 ஆகக் குறைக்கப்பட்டு, 2015 இல் அது 7 ஆக குறைக்கப்பட்டது.
கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகள், 6 சுயேற்சைக் குழுக்கள் என 21 குழுக்கள் போட்டியிட்டன. ஆனால் இம்முறை 19 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயேற்சைக்குழுக்கள் என 33 குழுக்கள் தேர்தல்க் களத்தில் உள்ளன. இதில் முதன்மை அணிகள்:
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – இலங்கை தமிழரசுக்கட்சி
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்
தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி
ஈழ மக்கள் சனநாயகக்கட்சி
ஜக்கிய தேசியக்கட்சி
ஜக்கிய மக்கள் சக்தி – சஜித் அணி
சிறீலங்கா சுதந்திரக் கட்சி
சுயேற்சைக்குழு 5 – சந்திரகுமார் அணி
மேற்க்கணட அணிகள் கணிசமாக வாக்குகளைப் பெறக்கூடியவை. ஆனால் முதல் கட்ட தெரிவாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 5 சதவீதம் (அது வாக்களிப்பு வீதத்தைப் பொறுத்து 12,500 வாக்குகளில் இருந்து 15,000 வரை அமையலாம்) வாக்குகளைப் இதில் எத்தனை அணிகள் பெறும்? அடுத்து ஒரு ஆசனத்தை உறுதிப்படுத்த 25,000 முதல் 30,000 வாக்குகள் தேவைப்படும். அந்நிலையை எட்டப்போபவர்கள் யார்? அடுத்து இரண்டு ஆசனங்களைப் பெற வேண்டுமானால் 75,000 முதல் 80,000 வாக்குகளை பெற்றாக வேண்டும். அந்நிலையை யார் எட்ட முடியும்? அடுத்து அனைவர்களிலும் அதிக வாக்குகளைப் பெறப்போகும் அணி எது? அவர்களுக்கு முதலில் வருவதால் கிடைக்கும் போனஸ் ஆசனம் உட்பட ஏழில் மூன்று ஆசனங்கள் நிச்சயம் என்ற நிலைiயில், அந்நிலையை எட்டப்போபவர் யார்? இவையே தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது கவனத்தில் கொள்ளபடும் விடயங்கள்.
மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சித்தார்த்தன், கஜேந்திரக்குமார், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், டக்லஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன், விஜயகலா மகேஸ்வரன் எனக் கட்சிகளின் முக்கிய தமிழர்கள் போட்டியிடும் பிரதான தமிழர் தேர்தல் மாவட்டமாக யாழ். தேர்தல் மாவட்டம் திகழ்வதால், தேர்தல் முடிவுகளில் இவர்களின் நிலை குறித்த அதீத கவனம் இங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
கடந்த 2015 தேர்தலில் கட்சிகளும் அவர்களின் வாக்கு விபரம் வருமாறு:
தமிழரசுக்கட்சி: 2,07,577 வாக்குகள் (69.12%) – 5 உறுப்பினர்கள் தெரிவு
ஈ.பி.டி.பி – 30,232 (10.07%) – 1 உறுப்பினர் தெரிவு
ஜக்கிய தேசியக்கட்சி – 20,025 (6.67%) – 1 உறுப்பினர் தெரிவு
ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 17,309 (5.76%)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 15,022 (5.00%)
ஏனையவை – 10.144 (11 அரசியல் கட்சிகள் – 6 சுயேற்சைக் குழுக்கள்)
இதற்கு பின்னர் 2018 பெப்பிரவரியில் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தல்களில், யாழ் தேர்தல் மாவட்டம் முழுமையாக பெற்ற வாக்குகள்
இலங்கை தமிழரசுக்கட்சி – 1,36,266 (37.11%)
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 66,672 (18.16%)
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி – 60,254 (16.41%)
சிறீலங்கா சுதந்திரக்கட்சி – 27,756 (7.56%)
ஜக்கிய தேசியக்கட்சி – 22,114 (6.02%)
சுயேற்சை (சந்திரகுமார் அணி) – 18,988 (5.17%)
தமிழர் விடுதலைக் கூட்டணி – 18,732 (5.1%)
உள்ளுராட்சி சபைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை இவர்களால் தக்கவைக்க முடியுமா? இல்லை அதில் இருந்து யார் வாக்குகளில் மேல் நோக்கி நகர்கிறார்கள்? யார் கீழ் நோக்கி நகர்கிறார்கள்? என்பதெல்லாம் முதல் வெளியாகும் முடிவுகளிலேயே அனுமானிக்க முடியும்! அதேவேளை 2015இல் தெரிவானவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரங்களையும் ஒருமுறை யார்த்து விடுவோமா?
இலங்கை தமிழரசுக்கட்சி
1. S. Sridharan 72,058
2. Mavai Senathirajah 58,782
3. M.A. Sumanthiran 58,043
4. T. Siddharthan 53,740
5. E. Saravana Bhavan 43,289
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி
1. Douglas Devananda 16,399
ஜக்கிய தேசியக்கட்சி
1. Vijayakala Maheswaran 13,071
இந்நிலையில் முதல் இடத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கீழிறங்கி தக்கவைக்கும் என்பதே களயதார்த்தம் என்ற நிலையில், ஏனைய முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது குறித்து நீங்களும் தனிப்பட்ட விருப்புகளைக் கடந்து சிந்தியுங்கள் முடிவுகளுக்கு முன்னர் அது குறித்துத் பேசுவோம்..
நேரு குணரட்னம்.