நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளின் பின்னர், ஒற்றுமைக்கான கோசங்களை விக்கினேஷ்வரன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அழைப்பில் பல சந்தேகங்கள் இருக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் வானொலி ஒன்றுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
அவர் இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது:
உண்மையான ஒற்றுமைக்கான அழைப்பு எனின், கொள்கை அடிப்படையில் தங்களை திருத்திக்கொண்டு அந்த அழைப்பை விடவேண்டும். ஆனால் வெறுமனே மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஒற்றுமையாக செயற்படுவோம் என சொல்வது ஒரு ஏமாற்று நாடகம் என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது.
பல தடவைகள் ஏமாற்றப்பட்டதால் வந்த படிப்பினைகளை கொண்டே, தெளிவான முடிவை எடுக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம்.
பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமையான பிரகடனம் ஒன்றை ஆறு கட்சிகள் சேர்ந்து செய்திருக்க முடியும். ஆனால் எமது கட்சியை வெளியே அனுப்பி, ஒற்றுமையை சீர்குலைத்தவர்கள் அவர்கள்.
ஆனால் தேர்தல் முடிந்தவுடன், ஒன்றாக வாருங்கள் என்றால் என்ன அடிப்படையில் ஒன்றாக செல்ல முடியும்?
அதனால்தான், அவர்களது செயல்பாடுகள் ஊடாக ஒற்றுமைக்கான தளத்தை உருவாக்கட்டும். உதாரணமாக, இடைக்கால தீர்வு வரைபு பற்றி என்ன முடிவு எடுக்கிறார்கள்? ஜெனிவாவில் வருகின்ற பிரேரணைகள் தொடர்பில் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என நடைமுறையில் பார்ப்போம்.
அந்த செயற்பாடுகளில் ஒற்றுமை வந்தால், அதுவே உண்மையான ஒற்றுமையாக இருக்கும். அப்படியான ஒற்றுமைகள் ஏற்படும்போது அனைவரும் ஒருமித்து செயற்படக்கூடிய சூழல் இயல்பாகவே ஏற்படும் என்று கூறினார்.