தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சுமந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றினால் தமிழரசு கட்சி மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து பயனிக்கும் வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
2015 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகளுக்கு சரி அரைவாசி குறைந்த அளவு வாக்குகளையே எமது கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். இந்த வாக்கு வீழ்ச்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே பொறுப்பாளியாகவேண்டும்.
ஊடக பேச்சாளர் என்ற பதவினை வைத்துக் கொண்டு தான்தோண்றித்தனமான கருத்துக்களை வெளியிடுவதும் கருத்துக்களும், அவருடைய செயற்பாடுகளுமேன தேல்விக்கு காரணமாக உள்ளது. இதனை அனைத்து மக்களும் அறிவார்கள்.குறிப்பாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தோற்கடிக்க வேண்டும் என்று கட்சி வேட்பாளர்களே திட்டமிட்டு செயற்பட்டுள்ளார்கள்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட வீழ்ச்சி தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.அந்த குழுவின் அறிக்கையின்படி சுமந்திரனின் நடவடிக்கைகள் மற்றும் அவர் வெளியிடும் கருத்துக்கள்தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையினை வெளியிடாமல் மூடி மறைத்துள்ளார்கள்.
சுமந்திரனாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், க.வி.விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் போன்றவர்கள் வெளியேறியிருந்தார்கள்.
தமிழர் தேசங்களில் புதிய கட்சிகள் உருவாகியுள்ளமைக்கும், மக்களின் பிரிவுகளுக்கும் சுமந்திரன்தான் காரணம். ஒருவர் மட்டும் முடிவுகளை எடுப்பதே கட்சிக்குள் பிளவுபாடுகளை எற்படுவதற்கு காரணமாக உள்ளது.சுமந்திரன் மீது எனக்கு தனிப்பட்ட கோபங்கள் எவையும் இல்லை.
கட்சியின் எதிர்கால நலனுக்காகவே இவற்றை தெரியப்படுத்துகின்றேன்.கட்சியின் சகல விடயங்களிலும் தலையிட்டுவிட்டு, இப்போது தோல்வியை மட்டும், தலைவர், செயலாளர் மீது போடுவது என்பது பொறுத்தமற்ற ஒன்று.சுமந்திரனை கட்சியில் இருந்து விலக்கினால் தமிழ் தேசிய கட்சி மட்டுமல்லாமல் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
தமிழரசு கட்சியை மருசீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இப்போது உள்ளோம். இதனால் கட்சியின் தலைவரை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் கலையரசன் தேசிய பட்டியலில் ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஆனால் அது உறுதிப்படுத்தப்பட்டதாக எனக்கு தெரியவில்லை.
பிரதேச வாதம் நான் பேசவில்லை. தேசிய பட்டியல் ஆசனம் மாவை சேனாதிராஜா அல்லது சசிகலா ரவிராஜ் தெரிவு செய்யப்பட வேண்டும். எதுவாக இருந்தாலும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் கூடியே முடிவுகளை எடுக்க வேண்டும்.
மேலும் சசிகலாவிற்கு தேர்தலில் நடந்ததாக சொல்லப்படும் அநீதிகளுக்கு எதிரான வழங்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நாங்களும் சசிகலாவிற்கான குரல் கொடுத்து, அவர் பின் நிற்போம் என்றார்.