தொலைதூரத்திலிருந்து கேட்ட ஒரு பேரொலியிலிருந்துதான் எல்லாமே தொடங்கியது. லெபனானைச் சேர்ந்த பலரையும் போல எனது முதல் உள்ளுணர்வால் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தேன். மருந்துக் கடையிலிருந்து வெளிவந்த நான் மேகங்களுக்கிடையில் உன்னிப்பாகக் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு இஸ்ரேலிய விமானத்தைப் பார்க்கப்போகிறேன் என்றே உறுதியாக நம்பினேன்.
இஸ்ரேலிய ஜெட் விமானங்களின் சத்தம் எனக்கு அத்துபடி. அச்சுறுத்தும் சத்தத்துடன் வரும் அந்த விமானங்களின் ஒலி காதைக் கிழிக்கும் வகையில் அதிகரித்துப் பின்னர் சன்னமாகி மறைந்துவிடும். ஒவ்வொரு வருடமும் லெபனான் வான் எல்லையில் 1,000 தடவைக்கும் அதிகமாக அத்துமீறி நுழையும் அந்த விமானங்கள், லெபனானிலும் அண்டை நாடான சிரியாவிலும் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும்; அல்லது சோதனை நடத்துவதான பாவனையில் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் பலத்தைப் பறைசாற்றிக்கொள்ள லெபனான் மீது பறந்து செல்லும்.
அண்ணாந்து பார்த்தபடி சில நிமிடங்கள் காத்திருந்தும் என் பார்வைக்கு எதுவும் தட்டுப்படவில்லை. எனவே, இயல்பாக எனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். திடீரென்று எனது சமநிலை குலைந்து தடுமாறினேன். காதைச் செவிடாக்கும் வகையில் வானமே இடிந்துவிட்டதைப் போலவும், நிலநடுக்கத்தால் பூமியே அதிர்ந்தது போலவும் இருந்தது. நாங்கள் ஏற்கெனவே தாக்குதல்களுக்கு உள்ளான அனுபவம் கொண்டவர்கள் என்பதால், இப்போதும் தாக்குதல்தான் நடக்கிறது என்று நினைத்து, எனது காரில் தாவி ஏறி வேகமாகக் கிளம்பினேன்.
அதிரும் நினைவுகள்
வீட்டை நோக்கி விரைந்துகொண்டிருந்த சமயத்தில், பழைய நினைவுகள் என் மனதில் தோன்றின. 2006-ல் பதுங்குகுழிகளைத் தகர்க்கும் அமெரிக்கத் தயாரிப்பு குண்டுகள் பெய்ரூட் நகரத்தைச் சின்னாபின்னப்படுத்திய நாளை நினைத்துக்கொண்டேன். அன்று பெய்ரூட்டிலும் அதன் புறநகர்களிலும் உள்ள ஒவ்வொரு கட்டிடமும் அதிர்ந்தது. 1996-ன் ஒரு நாளில், இஸ்ரேல் ஜெட் விமானங்களிலிருந்து, அருகில் உள்ள மின் நிலையத்தின் மீது ஏவுகணைகள் சீறிப்பாய்ந்ததை எனது வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்த தருணத்தை நினைத்துக்கொண்டேன்.
2005-ல், எனது அலுவலகத்துக்குச் சற்று தொலைவில் முன்னாள் பிரதமரின் வாகன அணிவகுப்பில் ஒரு டன் டிஎன்டி வெடிப்பொருட்கள் வெடித்ததில் எனது அலுவலகக் கட்டிடமே அதிர்ந்த நாள் என் நினைவுக்கு வந்தது. இந்த முறை கரும் புகை வானத்தில் பரவத் தொடங்கியபோது, இப்போது என்ன நடந்திருக்கிறது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஏதாவது விபத்தாக மட்டுமே இருக்கும் எனும் நம்பிக்கையே என் மனதில் மீண்டும் மீண்டும் எழுந்தது.
வீட்டைச் சென்றடைந்தபோது, பயங்கரமான வெடிவிபத்து நிகழ்ந்து 10 நிமிடங்களுக்குப் பின்னரும் அதன் அதிர்வுகளை எனது எலும்புகளில் என்னால் உணர முடிந்தது. செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம் என எனது செல்போனைக் கையில் எடுத்தேன்.
ஆதாரமற்ற செய்திகள்
எனது டைம்லைனில் முதலில் கண்ணில் பட்ட ட்வீட் நம்பிக்கை தரும் வகையில் இல்லை. பெய்ரூட் துறைமுகத்திலும், முன்னாள் பிரதமர் சாத் ஹரிரியின் வீட்டுக்கு அருகிலுமாக இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக 1 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட, வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் எழுதியிருந்தார். விரிவான பின்னணித் தகவலும் சேர்க்கப்பட்டிருந்தது. சாத் ஹரிரியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ரஃபீக் ஹரிரி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சம்பவம் (2005-ல் எனது அலுவலகக் கட்டிடத்தை உலுக்கிய அதே குண்டுவெடிப்பு) தொடர்பான வழக்கில், சர்வதேசத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வரவிருந்த நிலையில் இந்தக் ‘குண்டுவெடிப்புகள்’ நிகழ்ந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்படி நடந்திருக்கும் என்று கணிப்பது இயல்பானதுதான். ஆனால், உடனடியாக எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. இரண்டு பெருங்கடல்கள், 9,000 கிலோமீட்டர் தொலைவு தாண்டி வசிப்பவரால், இங்கு நடந்தது என்ன எனச் சில நிமிடங்களிலேயே எப்படித் தெரிந்துகொண்டிருக்க முடியும்?
ஆனாலும், எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் அந்த வாதம் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டது. பல அமெரிக்கப் பத்திரிகையாளர்களும், அறிஞர்களும்கூட அதை உண்மை என நம்பி எழுதியிருந்தனர். எனினும், அந்த ட்வீட் தவறானது என்பது ஓரிரு நிமிடங்களிலேயே நிரூபணமானது. ஹரிரியின் அரண்மனைக் குடியிருப்பு அருகே குண்டுவெடிப்பு ஏதும் நிகழவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. வெடிவிபத்தில் நகரின் ஆயிரக்கணக்கான வீடுகளைப் போலவே அவரது வீடும் சேதமடைந்திருந்தது எனத் தெரியவந்தது.
தவறான வாதங்கள்
அதற்குப் பின்னரும், நடந்தது இதுதான் என சிலர் தங்களுக்குத் தெரிந்ததை வைத்து எழுதுவது நின்றுவிடவில்லை. பெய்ரூட் துறைமுகம்தான் அந்த வெடிவிபத்தின் மையப்பகுதி என்பது உறுதியான பின்னர், மேற்கத்திய செய்தி இணையதளங்களிலும், மேற்கத்திய அரசுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட மத்தியக் கிழக்கு ஊடகங்களிலும் பல்வேறு கட்டுரைகளும், வலைப்பூ பதிவுகளும் எழுதப்பட்டன. பெய்ரூட் பேரழிவுக்குக் காரணம், ஹிஸ்புல்லா (லெபனானிலிருந்து இயங்கிவரும் போராளி இயக்கம்) தான் என்று அவை குற்றம்சாட்டியிருந்தன.
ஏராளமான வெடிபொருட்கள் நிறைந்த ஆயுதக் கிடங்கை பெய்ரூட் துறைமுகத்தில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பொறுப்பற்ற வகையில் பதுக்கி வைத்திருந்ததாகவும், அவற்றை அழிக்க இஸ்ரேல் விமானங்கள் அந்தத் துறைமுகத்தைக் குறிவைத்துத் தாக்கியதாகவும் அந்தக் கட்டுரைகளின் மையக் கருத்து அமைந்திருந்தது.
வெடிவிபத்து நடப்பதற்கு முன்னர் விமானங்களின் சத்தங்களைக் கேட்டதாகப் பலர் குறிப்பிட்டதை அடிப்படையாக வைத்தே அவை எழுதப்பட்டிருந்தன. ஆனால், அதில் ஒரு முக்கியமான பிரச்சினை இருந்தது. லெபனான் வான் எல்லையில் இஸ்ரேல் விமானங்கள் நுழைவதை லெபனான் ராணுவமும், லெபனானில் உள்ள ஐநா படைகளும் தொடர்ந்து கண்காணித்து, அது தொடர்பான தகவல்களை அவ்வப்போது அளித்துவருகின்றன. ஆனால், வெடிவிபத்து நடந்த நாளில் இஸ்ரேலிய விமானங்கள் லெபனான் வான் எல்லையில் இருந்ததைக் குறிக்கும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
நகரமே பற்றியெரிந்துகொண்டிருந்தபோது, வீதியெங்கும் உடல்கள் சிதறிக் கிடந்தபோது, அதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஹிஸ்புல்லா இயக்கமே காரணம் என பலரும் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தனர்.
அரசுத் துறைகளின் மெத்தனம்
ஆனால், இதுவரை கிடைத்திருக்கும் சான்றுகள் மிகச் சிக்கலான கதையையே சொல்கின்றன. ஆகஸ்ட் 4-ல் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து அது தொடர்பான புகைப்படங்கள், ஆவணங்கள், லெபனானின் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு இடையில் நிகழ்ந்த அதிகாரபூர்வத் தகவல் பரிமாற்றங்கள், வெளிநாட்டுக்காரர்கள் – வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வைத்த சாட்சியங்கள் என அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. வெடிவிபத்துக்குக் காரணம் ஹிஸ்புல்லா ரகசியமாகப் பதுக்கியிருந்த ஆயுதக் கிடங்கு அல்ல; அதற்குக் காரணம், 2,750 டன் அமோனியம் நைட்ரேட். உரம், வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அந்தப் பொருள் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ற ஏற்பாடுகள் இல்லாமலும், நிபுணர்களின் கண்காணிப்பு இல்லாமலும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் அந்தத் துறைமுகத்தில் அது வைக்கப்பட்டிருந்தது.
2013 செப்டம்பரில், குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஒரு ரஷ்ய சரக்குக் கப்பல் அமோனியம் நைட்ரேட்டை ஏற்றிக்கொண்டு, மொஸாம்பிக் நாட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நிதிப் பிரச்சினை காரணமாகவும், சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவும் அக்கப்பல் பெய்ரூட்டில் நிறுத்தப்பட்டது. அது திட்டமிடப்படாத ஒரு நிகழ்வு. கட்டணம் செலுத்தப்படாததையும், பாதுகாப்புக் காரணங்களையும் சொல்லி அந்தக் கப்பலை லெபனான் அதிகாரிகள் நிறுத்தி வைத்ததையடுத்து, அந்தக் கப்பலின் உரிமையாளர் அதைக் கைவிட்டுவிட்டார். அந்தக் கப்பலில் இருந்த ஆபத்தான சரக்கு இறக்கப்பட்டு, துறைமுகத்தின் ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டது. பயங்கர வெடிவிபத்து நிகழும் வரை அது கிட்டத்தட்ட சீண்டப்படவேயில்லை.
வெடிவிபத்துக்குப் பிறகு, லெபனான் அரசு நிறுவனங்களுக்கிடையில் நடந்த பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் குறித்த செய்திகள் லெபனான் ஊடகங்களிலும், சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகின. வெடிக்கக்கூடிய அந்தப் பொருளை என்ன செய்வது என்று முடிவுசெய்வது தொடர்பாக அதிகாரிகள் நீண்டகாலமாக விவாதித்து வந்ததாகவும், ஆனால் அதை அழிக்க அல்லது விற்பனை செய்ய பொறுப்பேற்பது யார் என்பது தொடர்பாக ஒரு முடிவுக்கு வர அவர்கள் தவறிவிட்டார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமோனியம் நைட்ரேட் எளிதில் தீப்பற்றிக்கொள்ளலாம்; திருடு போக வாய்ப்பு ஏற்படலாம் என்றெல்லாம் கவலைப்பட்ட ஒரு நீதிபதி, அப்பொருள் வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் இருந்த ஓட்டையை அடைக்க, 2020 ஜூன் மாதம் ஒரு வெல்டிங் குழுவுக்கு உத்தரவிட்டார். அரசுப் பாதுகாப்புத் துறை அறிக்கையை மேற்கோள் காட்டி, இது தொடர்பான செய்தியை ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
மேற்பார்வையாளர்கள் இல்லாமல் பணியைத் தொடங்கிய வெல்டிங் குழுவினரின் கவனக்குறைவு காரணமாக, அருகில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த சரக்குப் பொதி மீது தீப்பொறிகள் விழுந்திருக்கின்றன. அந்த நெருப்பு அமோனியம் நைட்ரேட்டுக்குப் பரவிய பின்னர்தான், அந்த வெடிவிபத்து நிகழ்ந்தது.
நிபுணர்களின் விளக்கங்கள்
ராய்ட்டர்ஸில் வெளியான அந்தச் செய்தி பின்னர் உள்ளூர் ஊடகங்களில் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் மூலம் வெளியான செய்திகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டது.
அரசின் ஆரம்பகட்ட ஆய்வின்படி அந்தச் சம்பவம் தற்செயலாக நிகழ்ந்தது என முடிவுசெய்யப்பட்டதாக, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழுக்கு அந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. வெடிவிபத்து ஏற்பட்ட பகுதிக்கு மேலே பரவியிருந்த புகையும், சிதிலங்களும், இருண்ட சிவப்பு நிறத்தில் இருந்தது அங்கு அமோனியம் நைட்ரேட் இருந்ததை உணர்த்துவதாகவும், அது ராணுவப் பயன்பாட்டுடன் தொடர்புடையதல்ல என்றும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழுக்குப் பேட்டி அளித்திருந்த அமெரிக்க வெடிபொருள் நிபுணர் டாக்டர் ரேச்சல் லான்ஸ் கூறியிருந்தார். கடந்த நூறாண்டுகளில் தற்செயலாக நிகழ்ந்த 47 முக்கிய வெடிவிபத்துகளைப் போன்றதுதான் பெய்ரூட் வெடிவிபத்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஹிஸ்புல்லா இயக்கத்துடன் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட வாதங்களை மறுத்த பலரும், இந்த விளக்கங்களை ஏற்றுக்கொண்டார்கள். அதற்குக் காரணம், தகுந்த சான்றுகளின் துணையுடன் இவை முன்வைக்கப்பட்டன என்பது மட்டுமல்ல, அரசின் செயலற்ற தன்மை, திறனின்மை ஆகியவற்றுக்கு லெபனான் பேர் பெற்றது என்பதும்தான். அதன் விளைவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத ஆபத்துகள் வெடிக்கக் காத்திருக்கின்றன.
அன்றாட அபாயங்கள்
ஆபத்தான பொருட்களை முறையாகப் பராமரிக்காததன் விளைவாக, லெபனானில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு பேரழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன – எரிவாயு நிலையங்களிலும், தொழிற்சாலைகளிலும் நிகழ்ந்த 10-க்கும் மேற்பட்ட வெடிவிபத்துகள், தீவிபத்துகள் உட்பட. தவிர நாடு முழுவதும் வீடுகள், அலுவலகக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் அபாயகரமான பொருட்கள் பாதுகாப்பற்ற வகையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
தனியார் ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக வணிக நிறுவனங்களாலும், தனிமனிதர்களாலும் இந்தப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், லெபனானின் மின் துறையால், மக்களின் மின் தேவையில் பாதியைத்தான் பூர்த்திசெய்ய முடியும். பிரம்மாண்டமான தனியார் ஜெனரேட்டர்களிலிருந்து வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் செல்லும் மின் கம்பிகள், சிலந்தி வலைகளைப் போல வீதிகளில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. இவை மேலும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
பொது சுகாதாரம் தொடர்பான ஆபத்துகள் அத்துடன் நின்றுவிடவில்லை. தனியார் விருந்துகள், திருமணங்கள்… ஏன் சில ராணுவக் கொண்டாட்டங்களின்போதும், தொழில்துறைப் பயன்பாட்டுக்குரிய வெடிபொருட்கள் பரவலாகவும், ஒழுங்குமுறைகளைப் பின்பற்றாமலும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பல தீ விபத்துகள் ஏற்படுகின்றன.
வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்து குப்பைகளைச் சேகரிப்பது உள்ளிட்ட அடிப்படை உள்ளாட்சிப் பணிகளை நிர்வகிப்பதில் அரசின் தோல்விகள், குப்பைகளை எரிக்கும் பரவலான பழக்கத்தை நோக்கி மக்களைத் தள்ளியிருக்கின்றன. தீ விபத்துகளும், காற்று மாசுபாடும் அதிகம் ஏற்பட இதுவும் ஒரு காரணம். அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் ஆபத்துகள் இன்னும் உண்டு. திடக் கழிவுகளும், திரவக் கழிவுகளும் கடலில் நேரடியாகக் கலக்கப்படுவது; உணவுக் கிடங்குகளில் உணவுப் பொருட்கள் அழுகும் சம்பவங்கள்; இறைச்சிக்கூடங்களின் அவலச் சூழல்கள்; வேகக் கட்டுப்பாடு, போக்குவரத்துக் காவலர்கள் என சட்டரீதியான எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஆபத்தான சூழலில் இருக்கும் நெடுஞ்சாலைகள், டிராஃபிக் சிக்னல்கள் இல்லாமல் குறுக்கும் மறுக்குமாகச் செல்லும் வாகனங்கள், பல இடங்களில் தெருவிளக்கு இல்லாதது என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
அதனால்தான், ‘பெய்ரூட் வெடிவிபத்து ஹிஸ்புல்லா பதுக்கிவைத்த ரகசிய ஆயுதக் கிடங்கின் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலால் ஏற்படவில்லை; மாறாக உள்ளூர் அரசு நிர்வாகத்தில் தொடர்ந்து நீடிக்கும் இயலாமையின் விளைவாலேயே ஏற்பட்டது’ என்று பலரும் எளிதாக நம்புகிறார்கள்.
கொந்தளிப்பான வரலாறு
லெபனானைச் சேர்ந்த எந்த ஒரு வரலாற்று மாணவருக்கும் அரசின் இந்தச் செயலற்ற தன்மை ஆச்சரியம் தராது. லெபனான் ஒரு நாடு என்பது பெயரளவுக்குத்தான். இங்கு இருப்பதெல்லாம் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் போராளிக் குழுக்கள்தான். காரணம், ஒரு தேசமாக லெபனான் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே இங்கு உள்நாட்டுப் போர்கள் நடந்துவருகின்றன. லெபனானின் அரசியல் சூழலை விளக்குவதற்கு, 1975-1990 உள்நாட்டுப் போரைப் பின்னணியாக முன்வைக்க பல ஆய்வாளர்கள் முனைகிறார்கள்.
ஆனால், அதற்கு முன்பும் பின்புமான ஆண்டுகளில் உள்நாட்டுத் தரப்புகளும், வெளிநாட்டுத் தரப்புகளும் வான்வழித் தாக்குதல்கள் முதல் படுகொலைகள் வரை பல்வேறு மோதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்படியான நிரந்தரக் குழப்பங்கள், நிலையான அரசு உள்கட்டமைப்புகளையோ, பொருளாதாரத்தையோ கட்டமைக்க கால அவகாசத்தை வழங்குவதில்லை. திட்டங்களை வகுக்கவோ, அவற்றைச் செயல்படுத்தவோ அதிகாரப் படிநிலையோ, கட்டளைச் சங்கிலியோ இங்கு இல்லை. ஒவ்வொரு தரப்பும் தனது பிராந்தியத்தைத் தனது இஷ்டம்போல் ஆள்கிறது. கூட்டுறவு, கூட்டுப் பணிகள், ஒருங்கிணைந்த தேசியப் பார்வை என எதுவுமே இல்லை.
படுகளமாகிப்போன தேசம்
அதேசமயம், உள்நாட்டுப் பிற்போக்குத்தனம் மட்டுமே இதற்கெல்லாம் காரணம் என்று சொல்வதில் ஆர்வம் காட்டுபவர்கள், இந்த முடக்கம் உலகளாவிய அரசியலின் நேரடி விளைவும்கூட எனும் உண்மையைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். லெபனானில் செயல்படும் உள்ளூர் குழுக்கள், தங்கள் வெளிநாட்டுக் கூட்டாளிகளிடமிருந்து ஆதரவு பெறுகின்றன. ஈரான், சவுதி அரேபியா, அமெரிக்கா, சிரியா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் லெபனானில் உள்ள பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கின்றன, நிதியுதவி வழங்குகின்றன. பல தசாப்தங்களாகத் தொடரும் இந்தப் போக்கின் காரணமாக, பனிப்போர்கள், சதித்திட்டங்கள், மர்மமான வெடிவிபத்துகள் போன்றவற்றின் படுகளமாக லெபனான் மாற்றப்பட்டிருக்கிறது.
நீண்டகாலமாகச் சிதறிக் கிடக்கும் அதிகார மையங்கள், அதன் விளைவாக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் செயலற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அணுகும்போது, லெபனானில் எப்படி எல்லாவிதமான விபத்துகளும் தொடர்ச்சியாக நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்காது.
சர்வதேச உளவு அமைப்புகளின் தோல்வி
பெய்ரூட் ஒரு கொந்தளிப்பான, முடங்கிக்கிடக்கின்ற நகரம் மட்டுமல்ல. உலகில் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் நகரங்களில் ஒன்றும்கூட. லெபனானின் உள்நாட்டு விவகாரங்களைக் கண்காணிப்பதில் விரிவாகச் செயலாற்றும் உலகின் உளவு அமைப்புகள், டன் கணக்கில் வெடிபொருட்கள் ஏற்றிவந்த ஒரு கப்பல், தலைநகரின் முக்கியத் துறைமுகத்தில் எந்த அறிவிப்பும் இன்றி இறக்கிவைத்தபோது எங்கே இருந்தன? இந்த ஆபத்தைக் கணிக்கும் அளவுக்கு உள்ளூர் அதிகாரிகள் திறமையும், துல்லியப் பார்வையும் அற்றவர்களாக இருக்கலாம். ஆனால், ‘டைம் பாம்’ போன்ற இந்த வெடிபொருள் வந்து இறங்கியதை சர்வ வல்லமை பொருந்திய சர்வதேச உளவு அமைப்புகள் எப்படிக் கவனிக்கத் தவறின?
யாருமே இதைக் கவனிக்கவில்லை என்று அத்தனை எளிதாக நம்ப முடியவில்லை. பெய்ரூட் துறைமுகத்துக்கு ஆயுதங்களோ, அவை சம்பந்தப்பட்ட பொருட்களோ வந்தடைவதைத் தடுக்கும் நோக்கில், அமைதியை நிலைநாட்டும் ஐநா கப்பற்படை, 24 மணி நேரமும் லெபனான் கடல் பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. 2006-ல் நடந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஐநா பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த தீர்மானத்தின்படி, ஹிஸ்புல்லா இயக்கத்துக்குக் கப்பல்கள் மூலம் ஆயுதங்கள் வருவதைத் தடுக்க இந்த ரோந்துப் பணிகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன்னர், இந்தத் திட்டத்தின்படி ஒரு லட்சமாவது கப்பல் வந்து சென்றது கொண்டாடப்பட்டது. லெபனானுக்கு அமோனியம் நைட்ரேட்டைக் கொண்டுசேர்த்த கப்பல், அந்த ஒரு லட்சம் கப்பல்களில் ஒன்று இல்லையா? 2016-லேயே, பெய்ரூட் துறைமுகத்தில் இருந்த அமோனியம் நைட்ரேட் குறித்து அமெரிக்க ஒப்பந்ததாரர் ஒருவர் எச்சரிக்கை விடுத்தது குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ குறிப்பிட்டிருந்ததே? அவருடைய எச்சரிக்கை ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை?
உண்மையான காரணம் கண்டறியப்பட வேண்டும்
லெபனானில் இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கில் நடந்திருக்கும் குண்டுவெடிப்புகள், தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் இன்னமும் மர்மத்திலேயே மூழ்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில்; அவற்றைப் பற்றி ஒவ்வொரு தரப்பும் தங்களுக்குச் சாதகமாக, தங்கள் அரசியல் லாபங்களைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் விளக்கமளிக்கும் போக்கு தொடரும் நிலையில், இந்த வெடிவிபத்து அவற்றிலிருந்து எந்த வகையில் வேறுபட்டது என்பதைப் புரிந்துகொள்வது சாத்தியமற்றது.
சதித்திட்டத்தால் நிகழ்ந்தது என்று சொல்லப்படுவதை ஏற்பதும், அரசின் செயலற்ற தன்மையாலும், திறனின்மையாலும் விளைந்த விபத்து என்று சொல்லப்படுவதை ஏற்பதும் எளிது. ஆனால், எளிமையான, சந்தர்ப்பவாத விளக்கங்களால் நாம் திருப்தி அடைந்துவிடக்கூடாது.
இந்தத் துயரச் சம்பவத்துக்கு முன்னதான ஆறு வருட காலகட்டத்தில், யாராவது ஒருவர், எந்தக் கணத்திலாவது எதையாவது செய்திருக்க வேண்டும். இதுபோன்ற பேரழிவுகள் எதிர்காலத்தில் நிகழ்வதைத் தடுக்க நாம் உண்மையாகவே விரும்பினால், இவ்விஷயத்தில் செயலாற்றுவதிலிருந்து பலரைத் தடுத்தது எது என்பதைக் கண்டறிவது மிக அவசியம்!
– ஹபீப் பட்டா, நன்றி: அல் ஜஸீரா (கத்தார் ஊடகம்)
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்