1931-2020 வரையிலான இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது என்பதனையே கடந்த 5 ஆம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்துக்கான தேர்தலும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வலுப்பெற்று வரும் நிலையில் பெண்கள் உள்ளதையும் இழந்த கதையாகவே பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் புதிய பாராளுமன்றத்திற்கு எட்டு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட 6 பெண்களும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட இரண்டு பெண்களுமே இவ்வாறு பாராளுமன்றத்துக்கு மக்களின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பாராளுமன்றத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை சேர்ந்த சுதர்சினி பெணான்டோபிள்ளை 89,329 விருப்பு வாக்குகளையும் கோகிலா ஹர்ஷனி 77,922 விருப்பு வாக்குளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். காலி மாவட்டத்திலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினை சேர்ந்த கீதா குமாரசிங்க 63,358 விருப்பு வாக்குளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். மாத்தளை மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினை சேர்ந்த ரோஹினி குமாரி கவிரத்ன 27,587 விருப்பு வாக்குளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினை சேர்ந்த பவித்திரா வன்னியாராச்சி 200,977 விருப்பு வாக்குகளையும் முதித்த பிரசாந்தினி 65,923 விருப்பு வாக்குகளையும் பெற்று வெற்றியடைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினை சேர்ந்த தலதா அத்துக்கோரள 45,105விருப்பு வாக்குளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். கேகாலை மாவட்டத்திலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினை சேர்ந்த ரஜிகா விக்ரமசிங்க 68,802 விருப்பு வாக்குளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை இவ்விரு கட்சிகளிலுமிருந்து தேசியப்பட்டியல் ஊடாக தலா ஒவ்வொரு பெண்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதனால் புதிய பாராளுமன்றத்தை 10 பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தப் போகின்றார்கள்.
1931-2020 வரையிலான இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் தேசியப்பட்டியலுடன் சேர்த்து 13 என்ற எண்ணிக்கையை இதுவரை தாண்டவில்லை என்பதே மிகவும் துர்ப்பாக்கியமானது. 2004-2010 வரையிலான பாராளுமன்றக்காலம், 2010-2015 வரையிலான பாராளுமன்றக் காலம்,2015-2020 வரையிலான பாராளுமன்றக் காலம் வரை தொடர்ச்சியாக பெண்களின் பிரதி நிதித்துவம் 13 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் அதனை மேலும் அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள், மக்கள் மத்தியிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது 11 பெண் பிரதிநிதித்துவங்களைப் பெற்று மீண்டும் பின்னோக்கி செல்லே வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தளவில் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு தேர்தல் என்றே கூறவேண்டும். பெண்கள் அமைப்புகள் 25-30 பெண்களாவது இம்முறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று போராட்டங்களை முன்னெடுத்து வேட்பாளர் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தேசியப் பட்டியலில் உள்ளடக்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திவந்த நிலைமையிலேயே பெண்களுக்கு இம்முறை பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றம்,உள்ளுராட்சிசபைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்படுவதுடன் பெண்களின் அரசியல் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பாலின வன்முறைகளுக்கு எதிராக அவளைத் தேர்ந்தெடுப்போம், வன்முறையை ஒழிப்போம்” என்ற பணித் திட்டம் ஐ.நா மக்கள்தொகை நிதியத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையிலேயே கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தேர்தலில் என்றுமில்லாதவாறு பெண்கள் போட்டியிட்ட எண்ணிக்கை அதிகரித்தது.
அந்த வருடம் பாராளுமன்றில் வாக்களிப்பு ஊடாக 196 ஆசனங்களைக் கைப்பற்ற 6,151 பேர் போட்டியிட்டனர். இதில் 556 பெண் வேட்பாளர்கள் இருந்தனர். இது மொத்த வேட்பாளர்களில் 9.2% வீதமாகவிருந்தது. அதிக பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்த மாவட்டமாக கொழும்பு இருந்தது. கொழும்பில் 147 பெண்கள் போட்டியிட்டனர். அதேவேளை, குறைந்தளவு பெண்கள் போட்டியிட்ட மாவட்டம் பதுளை. அங்கு 3 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டனர். இறுதியில் 2015 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் 11 பெண்கள் மாத்திரமே வெற்றி பெற்றார்கள். தேசியப்பட்டியலில் இரண்டு ஆசனங்களையும் சேர்த்து 2010 ஆம் ஆண்டைப்போல் 13 பெண் உறுப்பினர்கள் தெரிவாகினர். இது மொத்த உறுப்பினர் தொகையில் 5.8% வீதமாக இருந்தது.
எனினும் பின்னர் பெண் எம்.பி.யான கீதா குமாரசிங்க வெளிநாட்டு பிரஜாவுரிமை கொண்டவர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு நீதிமன்றம் ஊடாக அவரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டு அவரின் இடத்துக்கு ஆண் எம்.பி. ஒருவர் நியமிக்கப்பட்டதனால் பாராளுமன்றில் அந்த வருடம் பெண்களின் பிரதிநிதித்துவம் 12 ஆகக் குறைந்தது. கீதா குமாரசிங்கவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டபோது சக பெண் எம்.பிக்கள் கூட அவருக்காக குரல் கொடுக்கவில்லை. நீதிமன்றத்தின் முடிவு என்று கூறிவிட்டு மௌனமாக இருந்து விட்டனர்.தற்போது நடந்த தேர்தலில் அதே கீதா குமாரசிங்க அதே மாவட்டத்தில் அதே கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.
அவளைத் தேர்ந்தெடுப்போம், வன்முறையை ஒழிப்போம் என்ற பணித் திட்டம் மூலம் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் 6,151 பேர் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 556 பெண் வேட்பாளர்கள் இருந்தமையை தமது வெற்றியாக கருதிய பெண்கள் அமைப்புக்களும் பெண்ணிய செயற்பாட்டாளர்களும் 2020 பாராளுமன்றத்தேர்தலில் அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் ;அவளுக்கு ஒரு வாக்கு ; என்ற கோஷத்தை முன்வைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இந்நிலையில் 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து முன்னணி அரசியல் கட்சிகளிடமிருந்தும் பெறப்பட்ட மொத்த வேட்புமனுக்களைப் பார்த்த போது, பெண் வேட்பாளர்களின் வேட்பு ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 10% வேட்பாளர்களைக் கூட கொண்டிருக்கவில்லை.
2020 பாராளுமன்றத்தேர்தலை முன்னிட்டு ;அவளுக்கு ஒரு வாக்கு என்னும் விழிப்புணர்வுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு பெண்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வலியுறுத்தப்பட்ட நிலையில் 2020 பாராளுமன்றத்தேர்தலில் 196 பிரதிநிதிகளை மாவட்ட மட்டத்தில் தேர்ந்தெடுப்பதற்காக 7458 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் வெறுமனே 819 பெண்களுக்கு மாத்திரம் தான் கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலுமாக வேட்பாளர்களாவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் பிரதான கட்சிகளான பொதுஜன பெரமுன சார்பில் போட்டிட்ட 252 வேட்பாளர்களில் 14 பேர் பெண் வேட்பாளர்களாகவும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட 262 வேட்பாளர்களில் 15 பேர் பெண் வேட்பாளர்களாகவும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட 262 வேட்பாளர்களில் 10 பேர் பெண் வேட்பாளர்களாகவும் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட 262 வேட்பாளர்களில் 16 பேர் பெண் வேட்பாளர்களாகவும் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட 44 வேட்பாளர்களில் 4 பேர் பெண் வேட்பாளர்களாகவும் இருந்தனர். தேசிய மக்கள் சக்தி மாத்திரமே ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும் போது அதிகளவான பெண் வேட்பாளர்களை களமிறக்கியிருந்தது
2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் 6,151 பேர் போட்டியிட்ட போது அவர்களில் 556 பெண் வேட்பாளர்களாக இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தேர்தலில் 7458 பேர் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 819 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்களாக இருந்தனர்.கடந்த முறை 556 பெண் வேட்பாளர்களில் 11பேர் வாக்களிப்பில் மூலமும் 2 பேர் தேசியப்பட்டியல் மூலமுமாக 13 பெண்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் இம்முறை 819 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 8 பேர் வாக்களிப்பின் மூலமும் 3 பேர் தேசியப்பட்டியல் மூலமுமாக 10 பேர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். கடந்த முறை 5.7 வீதமாக இருந்த பெண் பிரதிநிதித்துவம் இம்முறை 4.8 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது ”அவளுக்கு ஒரு வாக்கு திட்டத்துக்கு விழுந்த பேரடியாகவே உள்ளது.
இதேவேளை இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்,முஸ்லிம்கள் சார்பில் எந்தவொரு பெண் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என்பது இன்னும் துரதிர்ஷ்டவசமானது. கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் தமிழர்கள் சார்பில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோர் தெரிவாகினர். இதில் விஜயகலா மகேஸ்வரன் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டும் சாந்தி சிறிஸ்கந்தராஜா தேசியப்பட்டியல் மூலமும் பாராளுமன்றத்துக்கு வந்தனர். ஆனால் இம்முறை இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட்ட போதும் தோல்விகண்டுள்ளனர். விஜயகலா மகேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சராக தமிழ் பகுதிகளுக்கு பல சேவைகளை முன்னெடுத்த நிலையிலும் சாந்தி சிறிஸ்கந்தராஜாவும் பெண்கள் உரிமைகள் தொடர்பில் பல காத்திரமான பங்களிப்புக்களை வழங்கியிருந்த போதும் தமிழ் மக்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் இம்முறை 20 க்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகள் தேர்தலில் போட்டியிட்ட போதும் எவருமே வெற்றிபெறவில்லை. அத்துடன் வடக்கு,கிழக்கை மையப்படுத்திய தமிழ் ,முஸ்லிம் கட்சிகளிலிருந்து தேசியப்பட்டியல் மூலமாகக்கூட பெண்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை. 1931-1935 ஆண்டு வரையான முதலாவது அரசுப் பேரவையில் கூட நேசம் சரவணமுத்து என்ற தமிழ் பெண் அங்கத்துவம் பெற்றிருந்தார். அதற்கு அடுத்ததான இரண்டாவது அரசுப் பேரவையிலும் 1936 -1947 வரையிலும் இவர் அங்கத்துவம் பெற்றிருந்தார். எனினும் இவருக்கு பின்னர் நீண்ட காலத்துக்கு தமிழ், முஸ்லிம் பெண்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் 1977 ; 1978 / 1978 1989 வரையான முதலாவது பாராளுமன்றத்தில் திருமதி ரங்கநாயகி பத்மநாதன் இடம்பிடித்தார். அதன் பின்னர் 1989 1994 வரையான இரண்டாவது பாராளுமன்றம் 1994 ; 2000 வரையான மூன்றாவது பாராளுமன்றத்தில் ஐ.தே .க. சார்பில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி திருமதி ஆர். எம். புலேந்திரன் இடம்பிடித்திருந்தார்.
2000 – 2001 வரையான நான்காவது பாராளுமன்றத்தில் பேரியல் அஷ்ரஃப், ஏ. டி. அன்ஜான் உம்மா ஆகிய இரு முஸ்லிம் பெண்கள் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். இவ்விருவரும் 2001 ,-; 2004 வரையான ஐந்தாவது பாராளுமன்றத்திலும் தொடர்ந்தனர். 2004-; 2010 வரையான ஆறாவது பாராளுமன்றத்தில் பேரியல் அஷ்ரஃப் கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்ல மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும் செல்வி.தங்கேஸ்வரி கதிர்காமன் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும் திருமதி பத்மினி சிதம்பரநாதன் வடக்கில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தியும் ஏ. டி. அன்ஜான் உம்மா கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தியும் இருந்தனர். இதுதான் தமிழ், முஸ்லிம் பெண்கள் அதிகம் இருந்த பாராளுமன்றமாக இருந்தது.
2010 ; 2015 வரையான ஏழாவது பாராளுமன்றத்தில் திருமதி. விஜயகலா மகேஸ்வரன் ஐ.தே.க.சார்பில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும் 2015-2020 வரையான பாராளுமன்றத்தில் ஐ.தே.க.சார்பில் விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவும் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையிலேயே இம்முறை வடக்கு,கிழக்கு மாகாணங்களிலிருந்து எந்தவொரு தமிழ், முஸ்லிம் பெண் பிரதிநிதித்துவமும் தெரிவு செய்யப்படவில்லை.
பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலேயே பெண்களுக்கும் சேர்த்து சர்வஜன வாக்குரிமை பெற்ற முதலாவது நாடு இலங்கை. உலகிலேயே பெண்ணை பிரதமராக்கி முன்னுதாரண மாகத் திகழ்ந்த நாடு இலங்கை. அது மட்டுமன்றி ஆசியாவிலேயே முதலாவது பெண் மேயரைத் தந்ததும் இலங்கை தான். இலங்கையின் வரலாற்றில் அனுலா, சுகலா, லீலாவதி, கல்யாணவதி, சீவலி போன்ற சிங்களப் பெண்கள் அரசிகளாக ஆண்டிருக்கிறார்கள். அது போல ஆடக சவுந்தரி, உலகநாச்சி போன்ற தமிழ் பெண்களும் அரசிகளாக இருந்திருப்பதாக வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். இதேவேளை இலங்கை வரலாற்றில் இரு பெண்கள் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறார்கள். பெண் பிரதம நீதியரசர்,பெண் சட்டமா அதிபர் என இலங்கையில் பெண்களின் வகிபாகம் கனதியானது.
1937இல் டொக்டர் மேரி ரத்தினம் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண். ஆனால் அந்தத் தேர்தலில் எழுந்த சட்டப் பிரச்சினை காரணமாக அவர் ஒரு சில மாதங்களில் அங்கத்துவமிழந்தார். 1949இல் ஆயிஷா ரவுப் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். இவர் தான் இலங்கையில் தேர்தல் அரசியலில் பிரவேசித்த முதல் முஸ்லிம் பெண்ணாகவும் திகழ்கிறார். 1979இல் திருமதி சந்திரா ரணராஜா கண்டி மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அவர் அதன் பிரதி மேயராகவும் கடமையாற்றியிருந்தார். அத்துடன் அவர் தான் ஆசிய நாடொன்றில் தெரிவான முதலாவது பெண் மேயருமாவார் .
உலகின் முதல் பெண் பிரதமரை கொண்ட நாடு என நாங்கள் பெருமையாகக் கூறினாலும், அடுத்தடுத்து அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை. சர்வதேச ரீதியில் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவ அடிப்படையிலான தரப்படுத்தலில் 193 நாடுகளில் இலங்கை 182 ஆவது இடத்தில் உள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மாலைதீவு 183 ஆவது இடத்தைப் பிடித்த நிலையில், இலங்கை தெற்காசிய பிராந்தியத்தில் கடைசிக்கு முதலிடத்தில் உள்ளது.
இலங்கையின் சனத்தொகையில் 52 வீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள். அதுமட்டுமன்றி இலங்கையின் வாக்காளர்களில் 56 வீதத்தினர் பெண்கள். பல்கலைக்கழக மாணவர்களில் 60 வீதமானோர் பெண்கள்.உள்ளூராட்சி சேவையில் உள்ள அரசாங்க ஊழியர்களில் 59.7 வீதத்தினர் பெண்கள். நாட்டுக்கு பிரதான பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் பெரும் தொழிற் படையாக பெண்கள் இருக்கிறார்கள். மத்திய கிழக்கு பணிப்பெண்களாகவும், தோட்டத்துறை பெண்களாகவும், சுதந்திர வர்த்தக வலய பெண்களாகவும் இன்னும் பற்பல துறைகளின் மூலம் தங்களை அதிகாரம் செலுத்தும் ஆண்களுக்காவும் சேர்த்து உழைத்துத் தருபவர்கள் பெண்கள்.எனினும் இலங்கையில் அரசியலைப் பொறுத்தவரையில் பெண்களை ,அவர்களின் ஆளுமைகளை புறக்கணிக்கும் மனோபாவமே இன்னும் தொடர்கின்றது. அரசியல் என்றால் அது ஆண்களுக்கு மட்டும்தான் என்ற மன நிலை இன்று மக்கள் மத்தியில் அதுவும் பெண்கள் மத்தியில் இருப்பதும் பெண்கள் தொடர்பான சமூக மட்ட பிற்போக்குத்தனமான பார்வைகள், விமர்சனங்களும் பாதாளக்குழுக்கள், குற்றவாளிகள், ஊழல், மோசடிப் பேர்வழிகள் நிறைந்ததுமான அரசியலுமே பெண்கள் அரசியலில் சாதிப்பதற்கு பெரும் தடைக் கல்லாகவுள்ளன.
எச்.ஹுஸ்னா