தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நிலைமைகள் எதிர்பார்த்தவாறே தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆட்சியாளர்களின் தேர்தலுக்கு அடுத்தபடியான நடவடிக்கைகள் இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றன. இன ஒதுக்கீட்டு நடவடிக்கை என்று கூறத்தக்க வகையிலேயே புதிய அமைச்சரவை உருவாக்கமும், அமைச்சுக்களுக்கான செயலாளர்களின் நியமனமும் அமைந்திருக்கின்றன.
பொதுஜன பெரமுன தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால் எதிரணியாகிய ஐக்கிய தேசிய கட்சி பொதுஜன பெரமுனவின் தேர்தல் குறிக்கோளை முறியடிப்பதற்கோ அல்லது அதனைப் பலவீனப்படுத்தவதற்கோ முயற்சிக்க வில்லை. மாறாக தனது உள்வீட்டுப் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி, தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின் தீவிர கவனம் செலுதத் தவறிய நிலையில் குழம்பிக் கிடந்தது.
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை உருவாக்கிய சஜித் பிரேமதாசாவும்சரி, அவருடன் அணி சேர்ந்திருந்த எனைய கட்சித் தலைவர்களும் சரி பொதுஜன பெரமுனவுக்கு நிகராக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடத் தவறியிருந்தனர் என்றே கூற வேண்டும். இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கொடாக்கண்டன் போக்கிலான அரசியல் செயற்பாடுகளும் காரணமாக அமைந்திருந்தன.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலம் நாட்டில் ஸ்திரமனதோர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் ஏற்கனவே வெளிப்படுத்தி இருந்தனர்.நல்லாட்சி அரசாங்கம் என்றழைக்கப்பட்ட ரணில் – மைத்திரி கூட்டு அரசாங்கம் பலமிழந்து அரசியல் ரீதியான நலிந்து நாட்டில் ஸ்திரமற்றதோர் அரசியல் நிலைமையை உருவாக்கி இருந்தது.
அந்த கூட்டு அரசாங்கத்தின் செயல் வல்லமையற்ற அரசியல் போக்கே பொதுஜன பெரமுனவின் அரசியல் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தில் வெற்றி பெற்று முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்ஷ சர்வாதிகார முறையில் மனம்போன போக்கில் ஆட்சி நடத்திய காரணத்தினாலேயே 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.
ஜனநாயகத்தைப் பாதுகாத்து நல்லாட்சி நடத்தப் போவதாக உறுதியளித்து, உத்தரவாதம் வழங்கி ஆட்சியைப் பிடித்த நல்லாட்சி அரசாங்கம் தனது தேர்தல்கால ஆணையை நிறைவேற்றத் தவறியது. அதன் தலைவர்களாகிய மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரப் போட்டியில் மூழ்கிப் போனதன் காரணமாகவே பொதுஜன பெரமுன என்ற அரசியல் பெயரின் கீழ் ராஜபக்ஷக்களின் சர்வ அதிகாரப் போக்கிலான ஆட்சி முகிழ்த்துள்ளது.
விரும்பியவாறு செயற்படுவதற்கான வழி
பேரின அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கொள்கை ரீதியாக வேறு வேறு அணிகளாகப் பிரிந்திருந்து மாறி மாறி ஆட்சி நடத்தி வந்த போதிலும் இலங்கையின் ஒற்றை ஆட்சி முறையில் அவர்கள் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்தார்கள்.
அந்த இரண்டு தேசிய கட்சிகளும் இன்று பலமிழந்து அடையாளம் இழக்கும் நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியுடன் சமரசம் செய்து கொண்டு ஆட்சி அமைத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கைவிட்டு பொதுஜன பெரமுன என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கிய ராஜபக்ஷக்கள் இன்று நிகரற்ற அரசியல் பலம் கொண்டவர்களாக ஆட்சி பீடத்தைக் கைப்பற்றி இருக்கின்றார்கள்.
சஜித் பிரேமதாசாவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டுக் கட்சி பொதுஜன பெரமுனவுக்கு எதிராக, எதிர்க்கட்சியாக முளைவிட்டிருக்கின்றது. ஆனாலும் பெரும்பான்மை பலத்தையும் அரசியல் ரீதியாகத் திடமான போக்கையும் வலுவான செயல் வல்லமையையும் கொண்டுள்ள ராஜபக்ஷக்களின் தலைமையிலான அரசாங்கத்தை வளைத்து நெளிக்கத்தக்க வகையிலானதோர் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
கொழும்பு மற்றும் மலையக சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டு 47 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி 7 தேசிய பட்டியல் ஆசனங்களையும் தனதாக்கிக் கொண்டது. ஆனால் தனது பங்காளிக் கட்சிகளாகிய தமிழ்க்கட்சிகளுடன் இந்தத் தேசிய பட்டியல் உறுப்புரிமையைப் பகிர்ந்து கொள்ள அதன் தலைவர் சஜித் பிரேமதாசா முன்வரவில்லை. இது தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களின் மனங்களில் சோர்வையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்க்கட்சிகள் கூட்டுச் சேராமல் விட்டிருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி 47 ஆசனங்களைத் தேர்தலில் கைப்பற்றி இருக்க முடியாது என்பது அரசியல் அவதானிகளின் கருத்து. ஐக்கிய தேசிய கட்சி என்ற நாட்டின் அரசியல் இமயத்தில் இருந்து பிரிந்த உடனேயே 47 ஆசனங்களை இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தனித்து நின்று வெற்றிகொண்டிருக்க முடியாது. அதற்கு ஏற்ற தேர்தல் கள நிலைமை காணப்படவில்லை. இந்த வெற்றிக்கு தமிழ்க்கட்சிகளே உறுதுணையாக இருந்தன என்பதை மறுக்க முடியாது.தேர்தலின் பின்னர் அமைச்சரவை உருவாக்கப்பட்டு, பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் உறுதியான செயற்பாட்டிற்கு தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் எந்த அளவில் ஒத்துழைப்பார்கள் என்று தெரியவில்லை. தேசிய பட்டியல் நியமனத்தில் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டோமே என்ற அரசியல் தாக்கம் மிக ஆழமாக அவர்களின் மனங்களில் ஏற்பட்டிருப்பதே இதற்கான காரணம்.
உட்கட்சிப் பூசலைப்போல ஆமான ஏமாற்ற உணர்ச்சியுடன் உள்ள பங்காளிக்கட்சிகளின் பூரண ஒத்துழைப்பின்றி ஐக்கிய மக்கள் சக்தி பலமானதோர் எதிர்கட்சியாகச் செயற்பட முடியாது. அதிலும் அதிகார ஆளுமையும் தந்திரோபாய செயல் வல்லமையும் கொண்ட ராஜபக்ஷக்களுக்கு வலுவுள்ள எதிர்கட்சியாகச் செயற்படுவதற்கு இறுக்கமான கட்டமைப்புடன் கூடிய ஆளுமை மிக்க தலைவரே இன்றைய தேவை. அதனை அரசியலில் மென்மைப் போக்கைக் கொண்டவராகத் தோற்றம் தருகின்ற சஜித் பிரேமதாசாவினால் பூர்த்தி செய்ய முடியுமா என்பது சந்தேகமே.
உறுதியான பலத்துடன் எதிர்த்து மடக்கி நல்வழிப்படுத்துவதற்கான ஆளுமை மிக்கதோர் எதிர்த்தரப்பு இல்லாத ஒரு நிலையில் தமது பெரும்பான்மைப் பலத்துடன் ராஜபக்ஷக்கள் தாங்கள் விரும்பியவற்றை செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் இந்தத் தேர்தல் வழிசமைத்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.
ஆதவும் ஏமாற்றமும்
அதேவேளை. ஆளுந் தரப்பினராகிய ராபக்ஷக்களை ஆதரிப்பதன் மூலம் நன்மைகளை அடையலாம் என்று எண்ணிச் செயற்பட்ட வடகிழக்கைச் சேர்ந்த பிரமுகர்களும் ஏமாற்றத்திற்கே ஆளாகியிருக்கின்றனர்.
பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாகவும், அதன் மொட்டுச் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தாங்கள் எதிர்பார்த்தவாறு தேர்தலின் பின்னர் ஆளுந்தரப்பிடமிருந்து நன்மையைப் பெற முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்ப்பிரதேசங்களில் பொதுஜன பெரமுன காலூன்றுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்ததேயல்லாமல், தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு சேவையாற்றத் தக்க வகையில் அரசாங்கத்தில் அதிகார பலத்தைக் கைப்பற்ற முடியாத நிலைமைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
மொட்டுச் சின்னத்தில் அல்லாமல் வேறு தேர்தல் சின்னங்களின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டு வடக்கிலும் கிழக்கிலும் தேர்தலில் வெற்றி ஈட்டித் தந்த அரசியல் பங்காளிகளுக்கும் ஆளுமையுடன் கூடிய அதிகார பலம் கொண்ட அமைச்சுப் பதவிகள் எதனையும் ராஜபக்ஷக்கள் வழங்கவில்லை. இருந்ததும் தட்டிப்பறிக்கப்பட்ட நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது.
வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மாத்திரமே அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. காலம் காலமாக ராஜபக்ஷக்களுக்கு ஆதரவாக அவர் அரசியலில் செயற்பட்டு வந்ததன் காரணமாகவே அவருக்கு இந்த அமைச்சுப் பதவி கிடைத்திருக்கின்றது எனக் கருதலாம்.
வடக்கில் அதிகூடிய வாக்குகளைப்பெற்று வெற்றி வாகை சூடிய அங்கஜனுக்கு ராஜாங்க அமைச்சுப் பதவிகூட வழங்கப்படவில்லை. சுமார் நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் வடக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தை அங்கஜன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தைத் தவிர்த்து, அதன் பங்காளிக் கட்சியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கஜனை வேட்பாளராக நிறுத்தி இந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டிருந்தது.சுதந்திரக்கட்சி என்ற முகவரியைவிட, அங்கஜன் என்ற தனது சுய அடையாளத்தை முதன்மைப்படுத்தி பொதுஜன பெரமுனவுக்கு வெற்றகரமான அரசியல் அந்தஸ்தை அவர் பெற்றுக் கொடுத்துள்ளார். இதற்குக் கைமாறாக அமைச்சுப் பதவி கிட்டும், அதன் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று அங்கஜன் அரசியல் கனவு கண்டிருக்கலாம். ஆனால் அந்தக் கனவு கனவாகவே மிஞ்சியுள்ளது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது பெயரளவிலான ஒரு பதவியே அல்லாமல் அதிகார பலமுள்ள ஒரு பதவியல்ல. ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், துறைசார்ந்த அதிகாரிகள் ஆகியோரின் முடிவுக்கு அமைவாகவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்டும். அதையும்விட வடமாகாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைவராக வடமாகாண ஆளுனர் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருப்பதும் கவனத்திற்கு உரியது.
பதவி வழியாகவும், அதிகார வழியாகவும் ஆளுமையும் செல்வாக்கும் கொண்ட ஆளுனரின் இணைத் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராகச் செயற்படுபவர்கள் பெரிய அளவில் எதனையும் சாதிக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இந்த நிலையில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்களும் தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்தவர்களும் ராஜபக்ஷக்களினால் ஏமாற்றப்பட்டிருப்பது தெளிவாகவே தெரிகின்றது.
இதே நிலைமைதான் மலையகக் கட்சிகளுக்கும் நேர்ந்துள்ளன. பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்றவர்கள் அந்தக் கட்சிக்கான அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு உரிய எதிர்பார்த்த அரசியல் அங்கீகாரத்தை அரசிடமிருந்து பெற முடியவில்லை. அதிகார பலத்தையும் பெறவில்லை. ஏமாற்றத்திற்கே ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.
தேசிய கொடியும் அமைச்சரவை நியமனமும்
பேரின கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேசிய அரசியலின் முக்கிய தலைவர்களுமாகிய ராஜபக்ஷக்களும், சஜித் பிரேமதாசாவும் இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ் முஸ்லிம் தரப்பினரை துரும்புகளாக அரசியலில் பயன்படு;த்தி இருப்பதையே தேர்தலின் பின்னரான அவர்களின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. அதேவேளை, ராஜபக்ஷக்களின் அமோக தேர்தல் வெற்றியானது நாட்டின் ஒற்றை ஆட்சியை ஒற்றைக் கட்சி அரசாங்கமாக நாளடைவில் மாற்றி விடுவதற்கான வாய்ப்பை ஏற்டுத்தி உள்ளதாகவே தெரிகின்றது.
தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள ராஜபக்ஷக்களின் நடவடிக்கை அல்லது அரசாங்கத்தின் நடவடிக்கை ஒற்றை ஆட்சி முறையையும் கடந்து ஓரின ஓரு கட்சி அரசாங்கமாகக் கொண்டு நடத்துவதற்கான முனைப்படன் செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதான தோற்றம் வெளிப்பட்டுள்ளது.புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு, அமைச்சர்களாகத் தெரிவாகியவர்கள் தமது பதவிப்பிரமாணங்களைச் செய்த வைபவத்தில் பறக்கவிடப்பட்டிருந்த தேசிய கொடியில் சிறுபான்மை இனங்களைக் குறிக்கின்ற நிறங்கள் நீக்கப்பட்டிருந்தன.தேசிய கொடி என்பது அரசியலில் கட்சி பேதங்களைக் கடந்து உலக நாடுகளில் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. அது நாட்டு மக்களாலும், அரசியல் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என பலதரப்பட்டவர்களினாலும் மதிக்கப்படுகின்றது. அதற்கு உரிய மரியாதை எல்லா இடத்திலும் எந்த வேளையிலும் வழங்கப்பட வேண்டும் என்பது எழுத்தில் வடிக்கப்படாததும், வாழ்வியல் முறையில் கடைப்பிடிக்கப்படுவதுமான வழக்கமாகும்.
ஆனால் அந்தத் தேசிய கொடியில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கின்ற வைபவத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு நாட்டின் பன்மைத்தன்மை நீக்கப்பட்டிருந்தது. தேசிய கொடியில் செய்யப்பட்டிருந்த இந்த மாற்றத்தை அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதனை அவர்கள் அவதானிக்கத் தவறிவிட்டார்கள் என்று கூற முடியாது.
அந்த வைபவத்தில் பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்தவர்களில் எவருமே அதனைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்று கருதவும் முடியாது. மொத்தத்தில் அரசியல் தேவைக்காக அதிகாரமுள்ள யாரோ அந்த மாற்றத்தைச் செய்திருக்கின்றார்கள். அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் அதனைக் கண்டும் காணாமல் நடந்து கொண்டார்கள் என்றே கருத வேண்டும். அல்லது மேலிடத்தின் சம்மதத்துடன் அல்லது உத்தரவின் கீழ் தேசிய கொடியில் அந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றே கொள்ள வேண்டும்.
தேசிய கொடியில் மாற்றங்களைச் செய்வதென்பது பாரதூரமான ஒரு விடயமாகும். அரசியலமைப்பில் தேசிய கொடியின் அவசியம், அதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்புச் சட்டமே நாட்டில் முதன்மையானது. மதிப்புக்குரியது. போற்றிப் பின்பற்றப்பட வேண்டியது. அத்தகைய தன்மைகளைக் கொண்ட அரசியலமைப்பை மீறும் வகையில் அதனை அதற்கு முரணான வகையில் அதில் குறித்துக் கூறப்பட்டுள்ள தேசிய கொடியில் மாற்றங்கள் செய்வதென்பது அதனை அவமதிக்கின்ற ஒரு காரியமாகும்.
வருங்காலத்தை எதிர்வு கூறும் நிகழ்வுகள்
அரசியலமைப்பை மீறுபவர்களும், அதனை மதிக்கத் தவறுபவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களாகவே கருதப்படுகின்றனர். அதேவேளை, அரசியலமைப்பை மீறிய வகையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வை அல்லது ஒரு சம்பவத்தைக் கண்டும் காணாமல் இருப்பவர்கள் அதனை அனுமதித்ததாகவே கருத வேண்டி உள்ளது. ஆகவே அரசியலமைப்பை அவர்களும் மீறியவர்களாகவே கருதுவதில் தவறிருக்க முடியாது.
அமைச்சர்கள் பதவியேற்ற வைபவத்தில் தேசிய கொடியில் அரசியலமப்பை மீறும் வகையில் மாற்றங்கள் செய்யபட்டிருந்தது மட்டுமல்லாமல், பாதுகாப்பு அமைச்சு பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதும், அரசியலமைப்பை மீறிய செயலாகவே சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்
அரசியலமைப்பில் காலத்துக்குக் காலம் மாற்றங்கள் செய்யப்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்க முடியாது. ஏற்கக் கூடாது. அமைச்சுக்களின் கீழ் வருகின்ற திணைக்களங்களை அவர் பொறுப்பேற்கலாம். ஆனால் அமைச்சுக்களைப் பொறுப்பேற்க முடியாது.
ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அமைச்சுப் பொறுப்பை ஏற்கக் கூடாது என்பது அரசியலமைப்பின் விதி. அதனை மீறிய வகையிலேயே புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டபோது, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பைத் தன்வசம் வைத்துக் கொண்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி முப்படைகளின் தளபதி. இது பதவி வழியாக அவருக்கு அளிக்கப்பட்ட உரிமை. உரித்து. முப்படைகளின் தளபதி என்ற காரணத்தைக் காட்டி அல்லது அதனைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பை அவர் ஏற்க முடியாது. அதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை. அவர் அமைச்சுப் பொறுப்புக்கள் எதனையும் ஏற்க முடியாது என்று தெளிவாக அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் தேசிய கொடியில் செய்யப்பட்டிருந்த மாற்றங்களும், பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதும். அப்பட்டமான அரசியலமைப்பை மீறிய செயற்பாடுகளாகும். இது புதிய அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கின்ற முக்கியமானதும் பாரதூரமானதுமான விடயமாகும்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் கொண்டிருக்கின்றது. அதற்கான அங்கீகாரத்தை மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்ததன் மூலம் அளித்திருக்கின்றார்கள் என்பதற்காக அரசியலமைப்பை மீறிச் செயற்படுவது முறையாகாது.
இந்த அரசாங்கத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், செயற்பாடுகள் எப்படி இருக்கும் என்ன வகையில் அமைந்திருக்கும் என்பதைக் கட்டியம் கூறுகின்ற நிகழ்வுகளாகவே இந்த இரண்டு நிகழ்வுகளையும் இப்போது நோக்க வேண்டி உள்ளது.