சிறீலங்காவின் புதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் நாள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் புதிய பாராளுமன்றம் கொலைகாரர்களின் மையக்களமாக மாறுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
தமிழர்களின் முள்ளிவாய்க்கால் படுகொலையின் இதய நாயகர்களான அன்றைய பாதுகாப்பு அமைச்சர் இன்றைய பிரதமர், அன்றைய துணைபாதுகாப்பு அமைச்சர் முன்னாள் சனாதிபதி மட்டுமல்ல இந்நாள் முக்கியஸ்தர், அன்றைய பாதுகாப்புச்செயலர் இன்றைய சனாதிபதி, இவர்கள் பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வின் இன்றைய கதாநாயகர்கள் கூட.
அதையும் விட மேலும் விசேடம் உண்டு. சத்தியப்பிரமாணத்திற்கென சிறையில் இருந்து அழைத்துவரப்படவுள்ள அரசகட்சிப் பாராளுமன்ற உறுப்பினர், “சொக்கா மாலி” எனப்படும் பெருமலால் ஜெயசேகர ஏற்கனவே இரத்தினபுரி உயர்நீதிமன்றத்தால்,கொலைக்காக மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
இதில் நகைச்சுவை என்னவென்றால், அவர் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளாராம். அவர் மேல்முறையீடு செய்திருக்கலாம்,ஆனால் அதில் தீர்ப்பு மாற்றப்படும்வரை அவர் தண்டனைக்குரிய குற்றவாளியே. சிறீலங்கா அரசமைப்பு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிஇ தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கிறது. ஆனால் பின்னர் தண்டனை வழங்கப்பட்டால், என்ன என்பதில் மயக்கம் நிலவுகிறது. இவர் வேட்பாளராக மனு கொடுத்தபோது தண்டனை வழங்கப்படவில்லை என்பது தான் இங்கு விடயம்.
அதேபோன்று தான், சந்திரகாந்தனும். பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தேவாலயத்தில் வைத்து 2005இல் படுகொலை செய்யப்பட்டதற்கான வழக்கில்இ தடுப்பில் உள்ளார். அவரையும் விலங்குடன் பாராளுமன்ற சத்தியப்பிரமாணத்திற்காக மட்டக்களப்பில் இருந்து கொழும்பு அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அஸ்தஸ்தை வழங்கும் இவர்கள், நம்பிக்கையீனம் காரணமாக விலங்குடனேயே வேறு அழைத்துச செல்கின்றனர். பின்னரும் சிறைக்கே அழைத்துச் செல்லவும் உள்ளனர்.
சிறீலங்காவின் பாராளுமன்ற சனநாயக நடைமுறை இந்நிலையில் இன்று உள்ளது.
ஆனாலும் ஒன்றுஇ ஈற்றில் இருவருக்கும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டாலும், சனாதிபதி வழங்கும் பொதுமன்னிப்பு ஒன்றின் ஊடாக இவர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கலாம் என்பது வேறு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு தான் செம்மணி விவகாரத்தில், மரணதண்டனை விதிக்கப்பட்டு அதை அதியுயர் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்திய பின்னரும், அந்த இராணுவத்தினனை கோத்தா பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது நேற்றைய வரலாறு தான். இல்லையேல், அலி சபாரியும் கோத்தாவும் இணைந்து, இன்றைய புதிய ஒழுங்கில் நீதித்துறையை எவ்வாறு கையாளப்போகின்றனர் என்பதுவும் இதற்கான விடையாகலாம்.. ஆகமொத்தத்தில் இன்றைய கட்டாட்சியில் எதுவும் சாத்தியம் என்பதே நிலை.