இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஸ குடும்பத்தினர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மொத்தமாக உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 145 உறுப்பினர்கள் ராஜபக்ஸவின் கட்சியான பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்கள். 5 உறுப்பினர்கள் அவர்களின் தோழமைக் கட்சியினர். ஆகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களுக்குக் கிடைத்து விட்டது. ராஜபக்ஸவின் சகோதரர் கோத்தபயா ராஜபக்ஸ நாட்டின் அதிபர், மகிந்த ராஜபக்ஸ தலைமை அமைச்சர்,
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த சஜித் பிரேமதாசாவிற்கு 54 இடங்கள் கிடைத்திருக்கின்றன. சம்பந்தர் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி 16இலிருந்து 10ஆக சுருங்கி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சிக்கு 2 இடங்கள், விக்னேஸ்வரன் கட்சிக்கு அவர் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்தத் தேர்தல் தொடர்பாக தமிழர்கள் அஞ்சி அலறுவதற்கு முன்பாக சிங்களவர்கள் அஞ்சி அலறுகிறார்கள். சிறிசேன அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, மூன்றில் இரண்டு பெரும்பான்மை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எந்தக் கட்சிக்குக் கிடைக்கிறதோ அது அரசியலமைப்பை சிதைக்கிறது, சின்னாபின்னமாக்குகிறது, உரிமைகளைப் பறிக்கிறது, பெரும் பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பது தான் வரலாறு என்று கூறுகிறார்.
1956இல் S.W.R.D.பண்டாரநாயக்காவிற்கு மூன்றில் இரண்டு பங்கு கிடைத்தது. 1977இல் மூன்றில் இரண்டு பங்கு, அதேபோல் 2010இல் மூன்றில் இரண்டு பங்கு. இப்படிக் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் அப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர் மேலும் கூறுகையில், சிறிசேன அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 19ஆவது திருத்தச் சட்டம், இது குடியரசுத் தலைவருக்குரிய அதிகாரத்தை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தைக் கொடுக்கும் சட்டத் திருத்தம். இதற்கு ஆபத்து இருப்பதாக மங்கள சமரவீரவும், மற்றவர்களும் கூறுகிறார்கள்.
மேலும் இலங்கையில் பிரபலமான பேராசிரியர் ஹர்ஸன ரம்புக்வெல கூறும் போது, ராஜபக்ஸ குடும்ப வெற்றியினால் ஜனநாயக வாய்ப்புக்கள் சுருங்கும். உரிமைகள் சுருங்கும், அரசியல் லாபமடையக் கூடிய கும்பல்கள் அதிகமாகப் பலனடையும். ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று கூறியிருக்கின்றார்.
ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த பஸில் ராஜபக்ஸ தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி த இந்து நாளிதழின் ஆங்கில நாளேட்டில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவரே இந்த தேர்தலிற்கான வியூகத்தை வகுத்தவர். தேர்தல் உத்திகளை இயக்கியவர் பசில் ராஜபக்ஸ. அவர் கூறும் போது,
எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால், இந்திய இலங்கை உடன்படிக்கையில் மாநிலங்களுக்கு அதிகாரம் கொடுக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தூக்கி எறிந்து விடுவோம். மற்றும் சிறிசேன அரசாங்கம் ஏற்படுத்திய ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் அதிபராக முடியாது என்ற 19ஆவது திருத்தம் ஆகியவற்றை தூக்கி எறிந்து விடுவோம்.
அரசமைப்பு சட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைப்போம். எவ்வாறாயின், சீன கம்யூனிஸ் கட்சி ஆட்சி நடத்துகின்ற பாணியில், பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி நடத்துகின்ற பாணியில் மாற்றியமைப்போம். சீனாவில் ஒற்றையாட்சி, இங்கு இந்தியாவில் பாஜக ஆரியத்துவ ஒற்றையாட்சியை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.
இதே ஆட்சி நடைபெற்றால் மாநிலங்களுக்கு இருக்கும் கொஞ்ச அதிகாரமும் இல்லாமல் போகும். கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை திணித்து தமிழர் மாகாணம் என்ற நிலையையே மாற்றி விட்டார்கள். அந்த நிலைமையை வடக்கு மாகாணத்திற்குக் கொண்டு வருவார்கள். பெரியளவில் தமிழின ஒடுக்கு முறை இருக்கும்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர் மாநிலமாக இல்லாத ஒரு சூழல் வரும். கோத்தபயா ஆட்சியில் என்ன நடக்கின்றது என்று 10 பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இலங்கையில் இப்போது மனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நபர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். சிறையில் அடைக்கப்படுகின்றனர். வழகறிஞர்கள் மிரட்டப்படுகின்றார்கள். தாக்கப்படுகின்றார்கள். ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றார்கள் என்று அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு உட்பட பத்து அமைப்புகள் ஐ.நாவிற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் தெரிவித்திருக்கின்றன.
ஈழத் தமிழர்களுக்கு என்ன நடக்கும் என்பதை ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டு தமிழர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும். மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதும், முதன்முதலில் முந்திக் கொண்டு தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. ஏனெனில் அதிக நெருக்கம். இலட்சிய, தத்துவ ஒற்றுமை. சர்வாதிகார சிந்தனையில், தேசிய இனங்களை அழிப்பதில் ஒற்றுமை.
அவரும் சேர்ந்து செயற்படுவோம் என்று பதில் அனுப்பியுள்ளார். இருவரும் சேர்ந்து இந்தப் பகுதியிலே ஒற்றை மைய சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவார்கள். இலங்கையில் பௌத்த சிங்கள இனவாத சர்வாதிகார மையம் ஒற்றை ஆட்சிக்கு இந்தியாவில் ஆரிய, பிராமண ஒற்றையாட்சி முறைக்கு செயற்படுவார்கள். அவர்கள் சிங்கள பௌத்த மதத்தை எல்லோரும் அனுசரிக்க வேண்டிய மதமாக ஆக்குவார்கள்.
ஆனால் ஈழத்தில் இந்து ஆலயங்கள் தாக்கப்படும் போது இந்திய இந்துத்துவம் கேட்கவில்லை. அது ஆரியத்திற்கு கீழ்ப்படிய வேண்டிய இந்து. ஆட்சியில் உள்ள எவரும் கேட்கவில்லை. சிங்கள பௌத்தர்கள் அழித்தால் வாழ்த்துச் சொல்லும் இந்துத்துவம் தான் இங்கு இருக்கின்றது.
ஈழத் தமிழ் இந்துவிற்கு உள்ள நிலைமையே தான் தமிழ் நாட்டு தமிழ் இந்துவிற்கும். ஆரிய இந்து வேறு. தமிழ் இந்து வேறு. தமிழ் இந்துக்களையும், தமிழர்களையும், தமிழ் மொழியையும், தமிழ்நாட்டு அதிகாரங்களையும் பறிப்பார்கள். அதேபோல் ஈழத்திலும் நடக்கும். இதை அறிந்து கொள்ள வேண்டும். இதை எதிர்கொள்வதற்கு நம்முடைய மக்கள், இளைஞர்கள், படித்தவர்கள், பிள்ளைகள் சிந்தித்து நமக்குள் ஒற்றுமையை உண்டாக்க வேண்டும்.
எனது வேண்டுகோள். சம்பந்தர் வெற்றி பெற்று அவரின் கட்சி தோற்றுப் போனது தவறல்ல. அது துரோகக் கட்சி. மக்களுக்கு அறிமுகமானது என்பதால் மீண்டும் மீண்டும் அதற்கு வாக்களிக்கின்றனர். இதை மாற்றுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களும் மனந்திறந்து பேசி ஒரு கூட்டமைப்பை உருவாக்குங்கள். உங்கள் இருவருக்கும் நல்ல கொள்கை இருக்கிறது பாராட்டுக்கள்.
மக்களிடம் செல்லுங்கள். இளைஞர்களை களத்திற்கு அனுப்புங்கள். திட்டமிட்டு பணியாற்றுங்கள். மீண்டும் ஆயுதப் போராட்டம் அல்ல. மக்களை ஒரு புதிய தமிழ்த் தேசியத்திற்கு உட்படுத்துவது. ஒரு சிங்கள பேரினவாதம் மறுபடியும் நாடாளுமன்றம் வழியிலே வருகின்றது. அதை எதிர்கொள்வதற்கு, வடக்கு கிழக்கு மாநிலங்களை இருக்கின்ற அளவிற்கு பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த விழிப்புணர்ச்சியை உருவாக்குங்கள்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், விக்னேஸ்வரன் அவர்களும் சிந்திக்க வேண்டியது என்னவென்றால், ராஜபக்ஸ குடும்பத்திற்கு சிங்களவர்கள் மத்தியில் எதிர்ப்பு வருகின்றது. ஜனநாயக உரிமைப் பறிப்பு, மற்றய கட்சிகளை ஒடுக்கி நசுக்குவது. சீன கம்யூனிஸ்ட் கட்சி போல, பாஜக போல ஆட்சியை கொண்டு வந்தால், சஜித் பிரேமதாசாவின் கட்சிக்குக்கூட வாய்ப்புக் கொடுக்க மாட்டார்கள்.
சிங்களவர்களுக்கும் ஜனநாயக உரிமை பறிக்கப்படும். அவர்களும் கொதித்து எழுவார்கள். அவர்களோடு பேசி இணக்கம் காணுங்கள். இலங்கைக்கு குறைந்தது ஒரு கூட்டாட்சி வேண்டும் என்பதை பேசுங்கள். ஜனநாயக உரிமைகள் ஒரு கூட்டாட்சி இரண்டும் வேண்டும் என்று பேசுங்கள்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், விக்னேஸ்வரனும் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குங்கள். ஜனநாயக மீட்பு இயக்கம் உருவாகும். அவர்களுடன் ஒரு கூட்டாட்சி முறைக்கு பேசி களம் இறங்குங்கள். முதலில் வடக்கு கிழக்கு மாணங்களில் தமிழர்களுக்குரிய ஒற்றை அமைப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், விக்னேஸ்வரனும் இணையுங்கள். யார் யாரை இணைக்க முடியுமோ இணையுங்கள். இந்த திட்டத்தை போர்க்கால வேகத்தில் செய்யுங்கள்.
தமிழ் நாட்டுத் தமிழர்கள் இதை புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் ஒரு தாயக உரிமைப் பாதுகாப்பு, மொழிப் பாதுகாப்பு, இனப் பாதுகாப்பு, குடிமை உரிமைப் பாதுகாப்பு என்ற தளத்தில் சிந்திக்க வேண்டும். இதற்கான கொடை தத்துவமாக தமிழ்த் தேசியம் இருக்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களும், தமிழீழத் தமிழர்களும் கருத்துப் பரிமாறிக் கொள்ளுங்கள். இல்லையேல் நாங்கள் பாதிக்கப்படுவோம்.
ஏனெனில், பசில் ராஜபக்ஸவின் கூற்றைப் பார்த்தால் பாஜக ஆட்சி எப்படிப்பட்டது என அவர்களுக்குப் புரிகிறது. இவை எல்லாவற்றையும் புரிந்து கொண்டு விழிப்புணர்ச்சி பெற்று, நாம் ஒருங்கிணைய வேண்டும். இலங்கை தேர்தல் முடிவுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டு செயற்பட வேண்டும். அச்சப்படக் கூடாது. பின்வாங்கக் கூடாது. செயற்பட வேண்டும். தமிழ்த் தேசியப் பேரியக்கம் செயற்களத்தில் உங்களோடு இருக்கும். கைகோர்த்து செயற்படுங்கள். சிந்தியுங்கள். செயற்களம் வாருங்கள்.
– பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்