ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விசாரணைகள் தொடர்ந்துநடைபெற்று வரும் வேளையில், சிறையிலுள்ள நளினி, முருகன் ஆகியோரை வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் வீடியோ அழைப்பில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில், அவர்களை வீடியோ அழைப்பில் பேச அனுமதிக்க முடியாது என்பதற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் உள்ள அயல் நாட்டு தொடர்புகள் குறித்த விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், அவர்களை வெளிநாட்டிலுள்ளவர்களுடன் பேச அனுமதித்தால், அது விசாரணையைப் பாதிக்கும் எனவும், சிறை அதிகாரிகள் அவர்கள் பேசுவதை கண்காணித்தாலும்கூட அவர்களின் முக அசைவு மற்றும் உருவ அசையில் அவர்கள் கருத்துக்களை பரிமாறக்கூடும் எனவும் இதனாலேயே அவர்களை வீடியோ அழைப்பில் பேச அனுமதிக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணை திகதி குறிப்பிடப்படாது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோரை லண்டனிலுள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையிலுள்ள முருகனின் தாயுடனும் வற்சப் வீடியோ அழைப்பின் மூலம் பேச அனுமதிக்கக் கோரி நளினியின் தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நீதமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிஸ்டர் ஜெனரல் கார்திகேயன், பன்நோக்கு விசாரணைக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீடித்து கடந்த ஜுலை 27ஆம் திகதி மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
நளினி மற்றும் முருகனை வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது வழக்கு விசாரணையை பாதிக்கும் எனவும், 2011 ஆம் ஆண்டு அரசாணையின்படி சிறைக் கைதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி இல்லை எனவும், இந்தியாவிற்குள் உள்ள உறவினர்களுடன் 10 நாளைக்கு ஒருமுறை, மாதம் 3 அழைப்புக்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும், அது சிறைவாசிகளின் அடிப்படை உரிமை இல்லை எனவும் சிறைத்துறை கண்காணிப்பாளரின் அனுமதிக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார்.
மேலும் முருகன் கடந்த ஏப்ரல் மாதம் வேலூரில் உள்ள அவரது சகோதரியுடன் பேசியதாகவும், நளினியும் கடந்த மார்ச் மாதம் அவரது உறவினர்களுடன் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தந்தை இறந்து விட்ட நிலையில் தாய்க்கு ஆறுதல்கூற, சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழைப்பை பதிவு செய்து கொள்ளும் வசதியுடன் பேச அனுமதிக்கலாமே என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.