இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் அகற்றப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பசில் ராஜபக்ஷவும் உறுதியளித்துள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக விக்கினேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,
“அண்மைக்காலமாக சில தரப்பினர், 13ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் எனவும் மறுசீரமைக்கப்படும் எனவும் வெவ்வேறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன தெரிவு செய்வதற்கு முன்னரே எமது ஆதரவை எத்தகையானவருக்கு வழங்வோம் என்பது பற்றி தெளிவாக அறிவித்திருந்தோம்.
நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்தோம். குறித்த சந்திப்பின்போது, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பவித்திரா வன்னியாராச்சி மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதன்போது நானும், கோபால கிருஷ்ணனும் 13ஆவது திருத்தச்சட்டத்திலிருந்து ஆரம்பித்து அடுத்தகட்டம் தொடர்பில் சிந்திக்கும் வேட்பாளருக்கு நாம் ஆதரவளிப்பதாக கூறினோம்.
அதற்கு பசில் ராஜபக்ஷ, தங்களுடைய தரப்பில் யார் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் 13ஆவது திருத்தம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தார். ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்படும் போதே அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் பற்றி அடுத்தகட்ட பேச்சுக்களை முன்னெடுக்க முடியும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.