சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்- சி.வி.க்கு சரத்பொன்சேகா எச்சரிக்கை
கடந்த காலங்களில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை சி.வி.விக்னேஸ்வரன் மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
9ஆவது நாடாளுமன்றின் முதலாவது சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மொழி தொடர்பாக முன்வைத்த கருத்துக்கு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட சரத் பொன்சேகா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.
கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதாவது, நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அதே நிலைமைதான் ஏற்பட்டது.
அந்தவகையில், விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது. அவருக்கு அதற்கான வயதுமில்லை காலமும் இல்லை.
மேலும் உங்களிடம் உள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள். நாட்டிலுள்ள சிங்களவர்களின் நிலையை குறைத்து மதிப்பிடவேண்டாம். அவ்வாறு குறைத்து மதிப்பிட்டால் மோசமான விளைவுகளை நிச்சயம் நீங்கள் எதிர்கொள்வீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.