தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எமது மக்களின் அபிவிருத்தியும்,அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற நிலையில் அபிவிருத்தியை மட்டும் காட்டி மற்றவையை மழுங்கடிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று ஆற்றிய தனது கன்னி உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளை வரலாற்று ரீதியான தாயகமாகக் கொண்டு தனக்கென தனித்துவமாக மொழி, கலை, கலாசாரப் பண்புகளைப் பேணுகின்ற தேசிய இனத்தின் பிரதிநிதிகளாக தமிழ் தேச இறைமை மற்றும் சுயநிர்ணய அடிப்படையில் நாம் ஓர் அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்று நாம் முன்வைத்த கொள்கைகளை ஏற்ற எமது மக்கள் எமக்களித்த ஆணையின் பிரகாரம் அவர்களின் குரலாக இந்த அவையில் நாம் பிரசன்னமாகியிருக்கின்றோம்.
தொடர்ச்சியான போரின் காரணமாக இன அழிப்பின் ஒடுக்குமுறைகளாலும் வடுக்களைச் சுமந்து நிற்கின்ற மக்களாகிய நாங்கள் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் எமது குரல்களை வெளிப்படுத்தியிருக்கின்றோம். உண்மையில் இருந்தே நேர்மையான சமாதானம் பிறக்கும். எந்தவொரு பிரச்னையையும் தீர்க்கவேண்டுமெனில் இங்குள்ள அனைவரும் பிரச்னை இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்தே பிரச்னையின் தீர்வுக்கான ஆரம்பப் படிகள் ஆரம்பமாகின்றன.
மாறாக, பிரச்னையின் மூலத்தையும் பிரச்னையால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் அதற்கான நீதியான தீர்வு எது என்பவற்றையும் மறைத்து, மறந்து வெறுமனே மேம்போக்கான நிலையில் பிரச்னையை அணுகுவது ஒருபொழுதும் பிரச்னைக்கான தீர்வினைக் கொண்டுவரப்போவதில்லை.