காங்கேசன்துறை கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த 30 ரோஹிங்கியா அகதிகளும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்த போது இலங்கை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மியன்மாரைச் சேர்ந்த இவர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவில் அகதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் அதிராம்பட்டினத்தில் தங்கியிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி காங்கேசன்துறை கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
குறித்த ரோஹிங்கியா அகதிகள் மீண்டும் மியன்மாருக்கும் நாடு கடத்தப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, குறித்த ரோஹிங்கியா அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் மற்றும் சட்டத்தரணி சிராஜ் நூர்டின் உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவினர் கொழும்பிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மே 2ஆம் திகதி தஞ்சாவூர் அதிராம்பட்டினம் கடலோர காவல் படையினரால் நான்கு இந்தியர்கள் உட்பட 30 மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் மீதும் வெளிநாட்டினர் மற்றும் பாஸ்போர்ட் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தை தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், கடல் வழியாக வரக்கூடிய அகதிகளை அவுஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்பி வருவதுடன், தடுப்பு முகாமில் உள்ள அகதிகளையும் பல்வேறு வழிகள் மூலம் வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.