பிரான்சு நாட்டின் ஆதரவுப் பின்புலத்துடன் ஆபிரிக்காவின் மாலியில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல் பிரான்சு நாட்டின் பொருண்மிய ஈடுபாடுகளைப் பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டது மட்டுமன்றி, மாலியின் உள்நாட்டுப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.
ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell) 1984 இல் வெளியிட்ட நூலில் “கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துபவர் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார். நிகழ்காலத்தைக் கட்டுப்படுத்துபவர் கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்;” என்று குறிப்பிடுகிறார்.
ஆபிரிக்கக் கண்டத்தில் இஸ்லாம் சமயத்தின் வரலாற்றை எந்த ஒரு பக்கமும் சாயாது, சீரான முறையில் பார்த்தோமானால்,அந்த தேடல் பல விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதைக் காணலாம். முக்கியமாக மாலி மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளின் வரலாற்றை பார்க்கும் போது இவ்விடயம் மிகவும் அதிகம் புலனாகும்.
உலக வரலாற்றில்,மிக அதிகமாகப் பட்டொளி வீசிப்பறந்த இரண்டு இஸ்லாமியப் பேரரசுகளை இந்த இரு நாடுகளும் தன்னகத்தே கொண்டிருந்தன. இவற்றில் ஒன்று பதின்நான்காம் பதினைந்தாம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் இலங்கிய ”மன்சா மூச ப் பேரரசும்” (Mansa Musa) மற்றையது உத்மான் டொன் பாடியோவின்(Uthman don Fadio) பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ”சொக்கொட்டோ கலிபேற்” (Sokoto Caliphate) என அழைக்கப்பட்ட இஸ்லாம் பேரரசும் ஆகும்.
இஸ்லாம் சட்டம், இலக்கியம், விஞ்ஞானங்கள்,புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் பயணங்கள் என்பன மேற்குறிப்பிடப்பட்ட இரு ஆளுமைகள் ஊடாகவே ஆபிரிக்கக் கண்டம் முழுவதும் பரவின என்பதற்கு மாலியின் ”திம்புக்ற்று” (Timbuktu) நகரில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் சான்றுபகர்கின்றன. அதுமட்டுமன்றி இவர்களின் காலத்தில் ஏனைய மறைகள் மதிக்கப்பட்டது மட்டுமன்றி பாதுகாக்கப்பட்டன என்பதும் தெளிவாகிறது.
ஆபிரிக்காவின் இஸ்லாம் மறை தொடர்பான வரலாறு மீளெளுகிறது
பல்வேறு தடைகளுக்கு நடுவிலும் இஸ்லாம் மறை, ஆபிரிக்காவில் அடைந்த
வளர்ச்சி தொடர்பான வரலாறு மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கும் விடயம் ஐரோப்பாவை மையமாக வைத்து வரலாற்றை எழுதும் அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்ய எம்மைத் தூண்டுகிறது.
மன்சா மூசாவுக்குப் பின்னர் மாலிப் பேரரசை ஆட்சிசெய்த, புத்தம் புது நாடுகளைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வங்கொண்ட அரசனாகிய இரண்டாவது மன்சா அபூ பக்கரியின் (Mansa Abubakari II) தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இரு பெரும் கடற்பயணங்கள்,கொலம்பஸ் அமெரிக்காவை அடைவதற்கு 181 ஆண்டுகளுக்கு முன்னரேயே அந்த நாட்டைச் சென்றடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆபிரிக்க கரிபிய அடிமைகளுக்கு முஸ்லிம் வேர்கள் இருக்கின்றன என்ற விடயம் மற்றும் ”நீலங்கள்” என அழைக்கப்படும் கறுப்பின அமெரிக்கர்களின் இசைவடிவத்தில் இருக்கும்புரிந்துகொள்ள இந்த சான்றுகள் துணைபுரிகின்றன.
ஆரம்ப அமெரிக்கச் சட்டத்தின் உருவாக்கத்திலும்,அடிமைத்தனத்தை ஒழிக்க அங்கே ஒலித்த குரல்களிலும் இஸ்லாம் ஒரு மிக முக்கிய பங்கை வகித்தது என்பதை அமெரிக்காவில் அண்மையில் நடத்தப்பட்ட கல்வியியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
அதேவேளையில் மேற்குலகம் முன்னெடுக்கும் ”பயங்கரவாதத்துக்கு எதிரான போரைப்” பொறுத்தவரையில் மாலி ஒரு முக்கியமான மையமாகக் கருதப்படுகிறது. புகழ்; பூத்த இந்த கடந்த காலத்துக்குச் சான்று பகர்கின்ற திம்புக்ற்று ஆவணங்களும் அது தொடர்பான அறிவுப் பொக்கிசமும் இந்தப் பயங்கரமான போரின் நடுவில் அகப்பட்டு அழியும் ஆபத்தில் இருக்கின்றன.
பிரான்சின் காலனித்துவமும் துவாரெக் மக்களின் போராட்டமும்
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரின் மூலகாரணங்களை ஆழமாக உற்று நோக்கும் போது,நாட்டின் வடபிரதேசங்களில் வாழ்கின்ற சமூகங்களை,குறிப்பாக ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் மறையைத் தழுவி ஆபிரிக்காவின் வடபகுதி முழுவதும் அந்த மறையைப் பரப்பிய துவாரெக் (Tuareg) என அழைக்கப்படும் நாடோடிகளாக வாழும் பேர்பர் (Berber) மக்களையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரான்சு நாடு இப்பிரதேசத்தை காலனித்துவப் படுத்திய போது துவாரெக் குழும முஸ்லிம் மக்கள் மிகவும் பயங்கரமான எதிர்ப்பைக் காட்டியதோடு பல முக்கிய போர்களிலும் வெற்றியடைந்திருந்தார்கள். ஆனால் இறுதியில் பிரான்சு நாட்டின் ஆயுத பலத்துக்கு அவர்கள் அடிபணியவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பிரான்சின் தலைமையில் குறிப்பிட்ட பிரதேசங்கள் துண்டாடப்பட்டமை,
வெளிநாட்டு ஆட்சி,வெளிநாட்டுப் பொருண்மிய ஒழுங்குகள் என்பவற்றுடன் வடக்குப் பிரதேசங்களில் நடைபெற்ற பாலவனமாக்கல் போன்ற செயற்பாடுகள்,அந்த மக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளியதுடன் இன்றுவரை நீடிக்கும் இனப்பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன.
அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், இந்தப் போர் ”பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளது போன்று துவாரெக் பிரச்சினை தனியே ”இஸ்லாமியவாதிகளின்” பிரச்சினையல்ல. அரசாங்கத்துக்கும் பிரெஞ்சு காலனித்துவத்துக்கும் எதிரான உணர்வுகள் தனியே முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் உரியவை எனக்கொள்ள முடியாது.
ஆனால் இந்த உணர்வுகள் வடபிரதேசத்தில் உள்ள மற்றைய மக்களினங்களுக்கும் பொதுவானவை என்பதுடன் இவை அந்த மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் கருத்திலெடுக்கப்படவேண்டும்.
உலகவங்கியின் தரவுகளின் படி, மாலியில் வாழும் மக்களில் 44 வீதமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். அப்பிரதேசங்களில் குவிந்திருக்கின்ற இயற்கை வளங்களைப் பார்க்கும் போது இது உண்மையில் பரிதாபத்துக்குரிய ஓர் விடயமாகும்.
உலகளாவிய நுகர்வோர் கலாச்சாரத்தால் தூண்டப்பட்ட ஒரு போர்
பிரான்சு நாடு இப்பிரதேசத்தில் காட்டும் ஆர்வம, முக்கியமாக பொருண்மியத்தை மையமாகக் கொண்டது.
இப்பிரதேசத்திலுள்ள எண்ணெய் மற்றும் யுரேனிய வளங்களைப் பாதுகாப்பதே அங்கு மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளின் நோக்கமாகும். நுகர்வோரின் தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்ய இவை அவசியமானவையாகும்.
மொரிற்றானியாவிலிருந்து தொடங்கி மாலியை ஊடறுத்து அல்ஜீரியா வரை நீளும் 1000 கிலோ மீற்றர்கள் நீளமான மிகப் பிரமாண்டமான ”ராவோஉடேனி கழிமுகம்” (Taoudeni Basin) என அழைக்கப்படும் பிரதேசத்தில் இருக்கும் எண்ணெய் வயல்களில் இயங்குகின்ற எண்ணெயைச் சுத்திகரித்து விநியோ-கிக்கும் நிறுவனங்களின் வலையமைப்புக்களின் பெரும் பகுதியை ”ரோட்டல்” (Total) போன்ற சக்தியை உற்பத்திசெய்யும் பாரிய பிரெஞ்சு நிறுவனமே கட்டுப்படுத்துகிறது.
மாலியின் எல்லைப்புறப் பிரதேசமான ”கிடால்” ((Kidal) பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் யுரேனியமே பிரான்சின் 75 வீதமான மின்சக்தியைத் தோற்றுவிக்கும் அணு உலைகளுக்கான முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட இந்த ”கிடால்” பிரதேசத்திலே தான் பிரெஞ்சு ஆதரவைக் கொண்ட இராணுவத் துருப்புகளுக்கும் அல்குவைடாவின் படைகளுக்கும் இடையே இஸ்லாமிய மக்ரெக் பகுதியில் மிகவும் கடுமையான போர் நடைபெற்றுவருகின்றது.இத்தருணத்தில் தங்கத்தையும் நாம் மறந்துவிட முடியாது. ஆபிரிக்காவில் தங்கத்தை உற்பத்தி செய்யும் மூன்றாவது நாடாக மாலி விளங்குகிறது. றண்ட் கோல்ட் (Randgold) (ஐக்கிய இராச்சியம்),அங்லோ கோல்ட் அஷான்டி (Anglogold Ashanti) (தென்னாபிரிக்கா), பி2 கோல்ட்(B2Gold) (கனடா),றெசொலிய10ட் மைனிங் (Resolute Mining) (அவுஸ்திரேலியா), போன்ற பல்தேச நிறுவனங்கள் இப்பிரதேசத்திலே தமது பாரிய செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன.
போரில் ஈடுபடும் முக்கிய தரப்புகள்
மினுஸ்மா (MINUSMA) என அழைக்கப்படும ஐக்கிய நாடுகள் தாபனத்தின் அமைதிக்கான படையின் (UN Multidimensional Integrated Stabilization Mission) ஆதரவில் தங்கியிருக்கும் மாலி நாட்டின் இராணுவம், அத்துடன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா மற்றும் நட்பு நாடுகளின் மறைவான ஆதரவைக் கொண்டிருக்கும் பிரெஞ்சுப் படைகள் போன்ற பல முக்கிய தரப்புகள் மாலியில் நடைபெறும் போரில் பங்குபற்றுகின்றன.
மிக அண்மைக்காலம் வரை, அஸவாட் விடுதலைக்கான தேசிய அமைப்பு (National Movement for the Liberation of Azawad – MNLA) ) அன்சார் அல் டீன (Ansar Al Dine – AAD) போன்ற ஆயுதம் தாங்கிய அமைப்புகளுக்கு எதிராக மேற்குறிப்பிட்ட படைகள் போரிட்டுக்கொண்டிருந்தன. ஆனால் தற்போது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கும்(Jama’a Nusrat ul- Islam wa al-Muslimin – JNIM) என்ற பெயரில் இந்த ஆயுதக் குழுக்கள் ஒன்றிணைந்து போரிட்டு வருகின்றன.
இப்பிரதேசத்தில் பலம் மிக்க காலனீய தரப்பாக விளங்கும் பிரான்சுக்கு அமெரிக்காவின் மூன்று மறைமுக தளங்களிலிருந்தும் ஆதரவு கிடைக்கின்றது. ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளுக்கு உதவுவது போலவே,”உதவி” என்ற பெயரில் இங்கும் வானொலி ஒலிபரப்பு நிலையங்கள், தீவிரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகள் என்ற வகையில் ”இதயங்களும் மனங்களும்” (‘hearts and minds’ programs)எனப் பெயரிடப்பட்ட பல திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கிவருகிறது.
”சாதாரண மக்கள் நடுவில் உருமறைத்து வாழும் போராளிகளை தாக்கி அழித்தல்” என்ற பெயரில்; பிரான்சினால் இயக்கப்படும் ஆயுதந் தாங்கிய ஆளில்லா விமானங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தலை மாலி மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.
போரிலே ஈடுபடும் அனைத்துத் தரப்பினர் மீதும் போர்க்குற்றங்களுக்கான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. ”பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற பெயரில் உலகின் பல பாகங்களிலும் தொடரப்பட்டு மிகவும் மோசமான வன்முறைக்குழியினுள் தள்ளப்பட்ட பிரச்சினைகளுள் ஒன்றான இப்பிரச்சினையை விசாரணை செய்ய பக்கச்சார்பற்ற நம்பகத்தன்மை வாய்ந்த,வெளிப்படையான நீதிப்பொறி முறைகள் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை.
மாலி தனது அமைதியான கடந்த காலத்துக்குத் திரும்ப பேச்சுவார்த்தை வழிவகுக்க வேண்டும்.
பிரெஞ்சு நாட்டின் ஆதரவுடன் மாலியில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கலை எதிர்க்கும் குழுக்கள்.இஸ்லாம் மறையை அடிப்படையாகக் கொண்டு ”இஸ்லாம் சமயத்தை வெறுக்கும் பிரெஞ்சுக் காலனீயவாதிகளை விரட்ட வேண்டும்” என்ற காலனீயத்துக்கு எதிரான சுலோகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இப்பிரதேசத்தில் வெளிநாட்டவர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் துஷ்பிரயோகங்களையும்,போர்களையும் அத்துடன் மக்கள் கடுமையான வறுமையாலும் துன்பங்களாலும் அவதிப்படும் வேளையிலும்,அந்நாட்டு வளங்களை தொடர்ந்து கொள்ளையிடும் பல்தேசிய நிறுவனங்களின் செயற்பாடுகளையும் பார்க்கும் போது, இப்படிப்பட்ட சுலோகங்களின் பின்னணியைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
இச்செயற்பாடுகளை ஆதரிப்பதோ,ஏற்றுக்கொள்வதோ நோக்கமல்ல. மாறாக, இம் மக்கள் வெளிப்படுத்தும் சீற்றத்தையும் வன்முறையையும் உரிய முறையில் விளங்கிக் கொண்டால் மட்டுமே அமைதியையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தக்கூடிய சரியான பாதையை வரைய முடியும்.
இஸ்லாம் மறையை மழுங்கடிக்காது, பேரரசர்களான மூசா (Musa) மற்றும் போடியோ (Fodio) காலத்தில் இருந்தது போல இஸ்லாம் மறை செழித்து வளர வழிவிடுவதே இந்தப் பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான திறவுகோலாகும்.
நன்றி- TRT World