தேசியம், சுய நிர்ணயம் பேசி தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்திய அமிர்தலிங்கம், பிரபாகரனுக்கு நேர்ந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும், விக்கினேஸ்வரன் இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். விக்கினேஸ்வரனும் அதே தவறை செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் எச்சரிக்கை விடுத்தார். விக்கினேஸ்வரன் பிரபாகரனாக முடியாது, ஏனென்றால் அவருக்கு வயதாகிவிட்டது எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரச இடைக்கால கணக்கறிக்கை மீதான் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவற்றை கூறினார். அவர் மேலும் தெரிவித்ததானது.
விக்னேஸ்வரன், பொன்னம்பலம் போன்றவர்கள் இந்த சபையில் பூர்வீக உரிமைகள் குறித்து பேசியுள்ளனர். பூர்வீக பூமி குறித்து இந்த சபையில் பேசுவது எமக்கு செய்யும் அவமதிப்பு என்றே நாம் நினைக்கின்றோம். இந்த நாட்டில் தொன்மையான மொழி பேசுபவர்கள் தமிழர்கள் என அவர் கூறுவதன் மறுபக்கம் இந்த நாட்டில் இரண்டாம் பிரஜைகளாக சிங்களவர்கள் இருக்கின்றனர் என்பதே அர்த்தப்படுகின்றது. இந்த நாட்டில் சிங்களவர்களை தவறாக கணித்து, சிங்களவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடத்தை எவரும் தடுக்க நினைத்தால் அவர்களுக்கு நாம் தலைசாய்க்க மாட்டோம் என்பதை இவர்களுக்கு நினைவூட்ட நினைக்கிறோம்.
அதேபோல் கடந்தகாலத்தில் இவ்வாறான தவறான வழிநடத்தல் மூலமாக தனித்து பயணிக்க எடுத்ததன் விளைவுகள், குறிப்பாக அமிர்தலிங்கம் தமிழ் இளைஞர்களை சிங்களவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு செயற்பட்டதன் விளைவாக இறுதியாக தமிழ் இளைஞர்களின் துப்பாக்கி ரவைக்கு இலக்கானார். அதேபோல் பிரபாகரன் இந்த நாட்டில் தனி இராச்சியம் உருவாக்க நினைத்தார். இந்த நாட்டினுள் இன்னொரு தனி நாடு உருவாக்க வேண்டும் என நினைத்தார்.
இறுதியாக அவருக்கு என்ன நடந்தது என்பதும் தெரியும். துரதிர்ஷ்டவசமாக விக்கினேஸ்வரனுக்கு பிரபாகரனாக மாற முடியாது. ஏனென்றால் அவருக்கு வயதாகி விட்டது. புரட்சிகளை உருவாக்க அவருக்கு இனி நேரமிருக்காது. எனவே எக்காரணம் கொண்டும் சுய நிர்ணயம், இராச்சியம் குறித்து தவறான கருத்துக்களை முன்வைக்காது செயற்பட வேண்டும், அதனையும் மீறி தவறான வழிநடத்தலுக்கு சென்றால் , சிங்கள உரிமையை திருபுபடுத்த நினைத்தால் அவருக்கும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.