மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகவே பிறக்கின்றான். மனிதன் சுதந்திரமாக வாழவும், தேவைகளைத் தடையின்றிப் பெறவும் உரிமை பெற்றுள்ளான் வலிந்து வகையில் காணாமல் செய்யப்படுதல் என்பது மனித உரிமையினை மீறும்செயற்பாடாகும். அத்துடன் காணாமல் போனோரது குடும்பங்கள் உடல், உள, சமூக, தாக்கங்களிற்குட்பட்டு காணப்படுகின்றனர்.
மனிதன் மனிதனாகவும், மனித கௌரவத்துடனும், மனிதப் பண்புகள், மனித விழுமியங்களுடனும் வாழ்வதற்கு அவசியமான உரிமைகளே மனித உரிமைகள் என மிக எளிமையாக வரைவிலக் கணப்படுத்தப் பட்டுள்ளது. வேறுவகையில் கூறுவதாயின், மனிதனுக்குள்ள உரிமைகள்எனலாம். இன்னும் சரியாக கூறுவதாயின் மனிதர்களின் நிறம், சாதி, இனம், வகுப்பு, பால், பால்நிலை வேறுபாடுகள் ஆகியவற்றினை கருத்தில் கொள்ளாது அனைத்து மனிதர்களுக்கும் சமமாக உரித்தாகும் உரிமைகளே மனித உரிமைகள் எனலாம்.
தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கும், சமுதாய வாழ்விற்கும், அரசியல் வாழ்விற்கும், மனித உரிமைகள் அவசியமாகும். மறுபுறமாக அவை பொதுவானதாக அமைய வேண்டும். சகலராலும் சமமாக அனுபவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். யுத்தம் அதனுடன் தொடர்புடைய காணாமல் செய்யப்படுதல் என்பவையாவும் மனிதன் அனுபவித்த உரிமைகள் மீது தடைகளை ஏற்படுத்துகின்றது என்பதும் அறியத்தக்கது.
உலகநாடுகளில் பல்வேறுபட்ட காரணங்களுக்காக போர்கள் இடம்பெற்று வந்துள்ளன. அதிலும் குறிப்பாக காலத்திற்கு காலம் மன்னர் ஆட்சி முதல் ஜனநாயக ஆட்சி வரை அனைத்திலும் உள்ள முரண்பாடுகளும் போர்கள் உருவாகக்காரணமாக இருந்து வருவதும் அறியத்தக்கது. 1981 ஆம் ஆண்டு கொஸ்டாரிக்காவில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள் காணாமற்போன பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினம் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோடு,இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப் பட்டு வருகின்றது.
உரிமைக்கான போராட்டங்கள் முக்கியத்துவம் உடையவையாகும் இவை இனமுரண்பாடுகள், மத முரண்பாடுகள், மனித உரிமை மீறல்கள் என பல கருத்து முரண்பாடுகளின் காரணமாகத் தோற்றம் பெறுவதனை அவதானிக்க முடிகின்றது. இத்தகையபோராட்டங்களில்
உரிமைகளை மக்கள் வென்றெடுத்துள்ளதும் அறியத்தக்கது. சிலவேளைகளில் இப்போராட்டங்கள் பாரிய அழிவுகளுடன் ஆதிக்க வர்க்கத்திடம் அடங்கிப்போகின்றதையும் அறியலாம். சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் நடைபெற்ற நாடுகளில் ஒன்றாக இலங்கையும் காணப்படுகின்றது.
இலங்கையில் ஓர் போராட்டத்துக்கான தேவை ஒன்று உருவாக்கப்பட்ட பின்னணியில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அடக்குமுறைகளிற்கு எதிராக பல்வேறு போராட்டக் குழுக்கள் தோற்றம்பெற்றன எனினும் அப்போராட்ட இயக்கங்களையெல்லாம் ஒன்றிணைத்து இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட ஆகும்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது. இலங்கையில் வடக்கு-கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதி கொண்ட பின்னணியில் தோற்றம்பெற்றது.1976 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. உரிமைக்கான ஈழப் போர் இலங்கை ஆயுதப் படைகளுடன் மட்டுமல்ல இந்தியா, சீனா மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுடன் போராடினார்கள்.
ஈழப் போராட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியான பாதிப்புக்களினை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இதனுடைய தாக்கம் நாட்டின் சகல இடங்களிலும் காணப்பட்டது. யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக வடக்கு, கிழக்கு மாகாணங்களினைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுடன் யுத்தப் பிரதேசங்களினை அண்மித்து வாழ்ந்த சிங்கள மக்களும் உள்ளடங்குகின்றார்கள். யுத்தத்தரப்பினர்களுடன் சற்றேனும் தொடர்பில்லாத மக்கள் கூட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில்1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இலங்கையில் காணாமல் ஆக்கப் படுகின்ற சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக பேசப்படுகின்றது. 1956ம் ஆண்டிலிருந்து நடந்த நூற்றுக்கணக்கான படுகொலைகள் 1976 ஆம் ஆண்டு தொடர் 1983ஆம் ஆண்டு ஜுலாய் படுகொலைகள், தென் தமிழீழத்தில் தமிழ் கிராமங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டது, தமிழீழம் எங்கும் தமிழர் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகள் சித்திரவதைகள், தமிழ்பெண்கள் மேல் நடாத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், இன்றும் தொடரும் நில அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு எல்லாமே மானுடத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் ஆகும்.
1983 ஆம் ஆண்டு முதல் 1990ல் இருந்து தீவிரமடைந்த யுத்தத்தினால் நாட்டில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் குறிப்பாக இவ்யுத்தம் மூவின மக்களிடையேயும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 1996 ஐநா அறிக்கை ஒன்றின் படி 1980-96ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் 11,513 பேர் காணாமல் போய் உள்ளனர். இது உலகில் ஈராக்குக்கு அடுத்தபடியான இரண்டாம் நிலை ஆகும்.
1999 ஆம் ஆண்டு ஆசிய மனிதவுரிமை ஆணையத்தின் அறிக்கை ஒன்றின் படி, அப்போது 16,742 எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத வழக்குகள் இருந்தன. அதன் பிறகு நடத்தப்பட்ட ஆள்கடத்தல்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் ஒடுக்கப்பட்டதன் பின்னர் எழுந்துள்ள பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த பிரச்சினைகள் மிக முக்கியமான ஒன்றாகும். காணாமல் செய்யப்படுதல் என்பது ஒருவருடைய அடிப்படை உரிமையான வாழுதலுக்கான உரிமையினை பறித்தலாகும் என வரையறை செய்யப்படுகின்றது. ஒரு ஜனநாயகநாட்டில் காணாமல் செய்யப்படுதல் என்பது அந்நாட்டின் ஜனநாயகத்தின் மீது ஐயத்தினை ஏற்படுத்தும் ஒன்றாகவே அமையும். இலங்கையின் வட புலத்தில் அதாவது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து 2000 ஆண்டிற்குப்பிற்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 20000 பேர் காணாமல் போயுள்ளனர் என அறிக்கைகள் மூலம் அறியமுடிகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்களாக காணாமல் போகவில்லை. படையினரால் கைது செய்யப்பட்ட பின் காணாமல் போயுள்ளனர். பலரை உறவினர்களே படையினரிடம் நேரடியாகக் கையளித்தும் உள்ளனர். இதற்கு வலுவான சாட்சியங்களும் உண்டு. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் மதகுருமாருடன் இராணுவத்திடம் சரணடைந்த போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இவர்களில் 280 பேரின் பெயர் விபரங்களையும் அவர்களது புகைப்படங்களையும் International Truth and Justice Project என்ற இணையத்தளம் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வட புலத்தில் அதாவது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களில் 60,000 பேர் காணாமல் போயுள்ளனர் என அல் ஜசீரா ( Al Jazeera )ஆவணப்படம் ஒன்றின் மூலம் அதனை ஆவணமாக்கி உள்ளது.
2009ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறிலங்கா அரசின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். இராணுவ சோதனைச் சுற்றிவளைப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டார்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அதே வேளை இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வீடுகளில் வைத்து விசாரணை என அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் 2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் போதும் யுத்த ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்தும், கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், விசாரணை எனக் கூறி பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்; தடுப்புக் காவலின் கீழ் சித்திரவதை, சர்வாதிகாரத்தைச் செயல்முறையின் பின்னர் பெறப்பட்டிருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
புலிகளின் கட்டாய ஆள் இணைப்பு.
2007 முதல் 2008 -2009ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் கட்டாய ஆள் இணைப்பில் இணைக்கப்பட்டு போராளியாக இருந்தவர்கள் சிலர் தற்போது காணாமல் போய் உள்ளார்கள். இவர்களின் உறவுகள் கூறும் விடயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அவர்கள் தங்களுடைய உறவுகள் இறக்கவில்லை எனவும் இறந்திருப்பின் விடுதலைப் புலிகளின் மாவீரர் என்னும் கௌரவத்துடன் மாவீரர் பட்டியலில் தமது உறவுகள் இடம்பிடித்திருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அதே வேளை தங்களது பிள்ளைகளை, உறவுகளை இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்ததை கண்டதற்கான முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைச் சாட்சிகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டு காணாமல் செய்யப்படுதல்கள்.
இராணுவத்தினரினாலும் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்ட பலர் காணாமல் செய்யப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் The International Committee of the Red Cross (ICRC) முன்னிலையில் கையளிக்கப்பட்ட தமது உறவு காணாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ICRC இடம் தொடர்புகொண்டு கேட்டபோது சரியான விளக்கத்தினை ICRC தரவில்லை என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு இராணுவத்துக்கு போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமற்போன விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணையின் போதே முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் 2017ஜனவரி 02 இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகளின் விபரங்கள் தமது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இருப்பதாக முன்னர் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார். இதையடுத்து அந்தப் பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்ட போதும் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் சரணடைந்தவர்களின் பட்டியலுக்குப் பதிலாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டோரின் பட்டியலை இராணுவத் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் வேறு பட்டியல்கள் ஏதும் தம்மிடம் இல்லை என்றும் இராணுவத் தரப்பு கூறியிருந்தது. 2017ஜனவரி 2ம் திகதி நடந்த விசாரணையின் போது மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன சரணடைந்தவர்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். இந்த நிலையில், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகள் பற்றிய பட்டியலை இராணுவத் தலைமையகம் வரும் 2017 ஜனவரி 30ஆம் நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி இராணுவத்தினரிடம் சரணடைந்தோரது விபரத்தினை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டிருந்த போதிலும் இராணுவத்தினரால் அவ்விபரம் இதுவரையும் சமர்ப்பிக்கப்படவில்லை.
தமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.
வெள்ளை வான் படுகொலைகள் அல்லது கடத்தல்கள் என்பது இலங்கையில் வெள்ளை வான் வாகனம் ஒன்றில் வந்து நபர்களை கடத்திச் சென்று படுகொலை செய்தல் அல்லது காணாமல் போகச் செய்தல் ஆகும். ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் எனப் பல தரப்பட்டோர் இவ்வாறு படுகொலை செய்யப்படுகிறார்கள், அல்லது காணாமல் போகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்கள், அல்லது காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவார். இதுவரை இலங்கைக் காவல்துறை யாரையும் இக் குற்றங்களுக்காக கைது செய்யவில்லை. இதனை யார் செய்கின்றார்கள் என்பது தொடர்பில் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளப் போதும், இவை அநேகமாக அரசப் பகுதிகளில் நடைப்பெறுவதால் அரசே இதனை ஆயுததாரிகளை வைத்து செய்விப்பதான கருத்துக்கள் நிலவுகின்றன. அரசு இதனைச் செய்யவில்லை என்றால் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய ஒரு அரசுக்கே இதனை தடுத்து நிறுத்த வேண்டியப் பொறுப்பு இருக்கின்றது என்ற விமர்சனங்களும் எழுந்தவண்ணம் உள்ளன.
இலங்கையில் பரவலாக இடம்பெறும் மனிதவுரிமைக்கு எதிரான ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் அரசாங்கமே பொறுப்பு என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆசிய மனிதவுரிமை ஆணையம் போன்ற அமைப்புக்கள் 1980ஆம் ஆண்டில் இலிருந்து தொடரும் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்கு இலங்கை அரசத் துணை ஆயுதக் குழுக்களும் அரச துணைப் படைகளுமே பொறுப்பு எனவும் கூறி வருகின்றது.
இலங்கையில் பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. பெரும்பாலான சம்பவங்களில் இராணுவம், கடற்படை, காவல்த்துறை ஆகியவற்றின் பங்குபற்றுதல் இருப்பது புலனாகியுள்ளது. இதில் சில சம்பவங்களில் சிறப்பு இராணுவ பிரிவினராலேயே குறிப்பிட்ட நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சில வேளைகளில் சீருடை அணிந்த காவல்துறையினரும் குற்ற புலனாய்வுப் பிரிவு பொலிஸாரே குறித்த நபர்களை அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்கடத்தல் தொடர்பான புகார்கள்.
ஆள்கடத்தல்கள் தொடர்பாக முழுமையான விபரங்கள் சேகரிப்பது கடுமையானது. ஆள்கடத்தல்களை அரசு, அரசுடன் இணைந்து இயங்கும் அமைப்புக்கள், அல்லது பயங்கரவாத அமைப்புக்கள் மேற்கொள்வதாக பயம் நிகழ்வாதால் இது தொடர்பான வழக்குகள் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் கண்காணிப்புக் குழுவிற்கு 265 புகார்கள் கிடைத்துள்ளன. இவற்றில் சுமார் 77 பேர் விடுவிக்கப்பட்டதுடன், கடத்தப்பட்டவர்களில் இம்சிக்கப்பட்டு தூர இடங்களில் கண்கள், கட்டப்பட்டு வீதிகளில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.
மேலும் 21 பேர் கடத்தப்பட்டு தற்போது பூசா முகாமிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் இரகசியப் புலன் விசாரணைப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏனைய 165 பேர் தொடர்பாகத் தகவல் அறிய முடியாமல் உள்ளது.
2008 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற மொத்த கடத்தல் புகார்கள் 265இல், 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட 9 பேரின் புகார்களும் 2007 இல் கடத்தப்பட்ட 25 பேரின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் 2008ஆம் ஆண்டிலேயே குழுவிடம் காணாமல் போனது தொடர்பாக புகார்களை செய்துள்ளனர். 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் கடத்தல்கள் தொடர்கிறது.
மனித உரிமை பணியாளர்கள் காணாமல் போதல்கள்.
இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் வாழ் பகுதிகளில் யுத்த அனர்த்தங்களால் பொது மக்களிற்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் அடிக்கடி கடத்தப்பட்டு காணாமல் போவதும் கொலைச்செய்யப்படுவதும் இடம்பெற்றுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் மற்றும் மனிதவுரிமை பணியாளர்கள் 57 பேர் கடத்தப் பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளோர் விபரத்தையும் ஆசிய மனிதவுரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய மனிதவுரிமை ஆணையம் வெளியிட்டுள்ள இன்னும் பல ஆட் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்களின்விபரங்களை ஆசிய மனிதவுரிமை ஆணைய அதிகார பூர்வத் தளத்தில் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் அறிவித்தலைத் தொடர்ந்து தற்போதைய சூழ்நிலையில் மனிதவுரிமை அமைப்புக்கள் தமிழர் வாழ் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போவோர் எண்ணிக்கை இதைவிடப் பலமடங்காக இருக்கும் என அஞ்சப்படுகின்றது.இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை சுட்டிக்காட்டி நிற்கிறது.
காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள்.
இலங்கை தமிழர் தாயகத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் . வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் தமிழினக் குழந்தைகளே. போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் இடம் பெற்றுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகிலேயே எங்கும் நடந்திராத கொடூரம் இலங்கையில் நடந்தது. இலங்கை அரசாங்கமே எட்டு மாதக் குழந்தைகளைக் கூட வலிந்து காணாமல் செய்த ஒரே நாடாகத் தனித்து நிற்கிறது. இந்தத் தமிழ்க் குழந்தைகளில் பலரும் பத்தாண்டு முன்பு 2009ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் இலங்கை அரசு கூறிய உறுதிமொழிகளை நம்பி இலங்கை பாதுகாப்புப் படைகளிடம் பெற்றோர் தம் பிள்ளைகளோடு சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் 11 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்தக் குழந்தைகளைப் பற்றியோ அவர் தம் பெற்றோர் பற்றியோ அரசிடமிருந்து பதிலேதும் இல்லை. சில குழந்தைகள் இலங்கை பாதுகாப்புப் படைகளால் பெற்றோர் கடத்தப்பட்ட போது உடன்சென்று காணாமல் செய்யப்பட்டுள்ளார்கள்.குழந்தைகள் இவ்வாறு சரணடைந்து கடத்தப்பட்டதற்குக் கண்கண்ட சாட்சிகள் பலர் உள்ள போதிலும் அரசு பொறுப்புக் கூறலைத் தவிர்த்து வருகிறது. இலங்கையில் மட்டுமின்றி, ஐ.நா மனிதவுரிமைப் பேரவையிலும் கூட இலங்கை பாதுகாப்புப் படைகளும் இராணுவ உளவுத்துறையும் செய்யும் கேடுகள் உட்பட எத்தனையோ தடைகள் இருப்பினும் இந்தத் தேடல் தொடர்கிறது.
பல நூற்றுக்கணக்கான தமிழ்க் குழந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பினும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 29 தமிழ்க் குழந்தைகள் மற்றும் சிறார்கள் பற்றிய செய்திகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நேரத்தில் இக்குழந்தைகளின் படம், பெயர், வயது ஆகியவை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றினையும் தயாரித்து 01/10/2019 அன்று அரசிற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் மகஜர் ஒன்றின் மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் சங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
11ஆண்டுகளுக்கு முன்னர், போரின் கடைசி நாளில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் பெயர் விபரங்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பலரது விபரங்கள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், 29 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளனர். அவர்களில் பலரும் 5 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
இறுதிப்போரின் போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் குடும்பங்களுடன் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு என்ன நடந்தது? இராணுவத்தால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது? இலங்கை அரசப் படைகள் தங்களுடைய பாதுகாப்புக்கு உறுதியளித்ததை நம்பி பேர் மௌனிப்பின் இறுதியில் தாமாக முன்வந்து தம்மை ஒப்படைத்துக் கொண்டு குடும்பத்துடன் சென்று எண்ணற்ற குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் நிலை என்ன? விடை தெரியாத ஏக்கத்துடன் உறவுகள் நாளாந்தம் நடைபிணமாக வாழ்கின்றார்கள் .
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்.
இராணுவக் கட்டுப் பாட்டுக்குள் வரும் படியும். சரணடையும் படியும் அழைப்பினை நம்பி இழப்புக்களைச் சந்திக்க முடியாத நிலையில் மக்கள் அனைவரும் படையினரிடம் சரணடைந்தனர். வட்டுவாகல் பாலத்தினை மக்கள் கடந்து சென்ற சந்தர்ப்பத்தில் படையினரிடம் மக்களிலிருந்து போராளிகளைப் பிரித்தெடுத்தனர்.
எல்.ரீ.ரீ.யில் இருந்தவர்கள் ஒருபுறம் வருமாறு கூறி, அவர்கள் ஒரு சின்ன விசாரணைக்குப் பிறகு குடும்பத்துடன் போகலாம் என்று பலமுறை அறிவித்தார்கள். விசாரணையின் பின் மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் போராளிகள் பலர் படையினரிடம் சரணடைந்தனர்.
சரணடைந்தவர்களைப் படையினர் வாகனங்களில் ஏற்றும் சமயம் அங்கிருந்தவர்கள் அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களோடும் பெயர் தெரியாத சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள். அவர்களின் கண்களைக்கட்டி அழைத்து சென்ற இராணுவத்தினர், பின்னர் அவர்களின் ஆடைகளைக் களைந்து சித்திரவதை செய்த பின்னர் படுகொலை செய்தார்கள் என்ற செய்திகளை பார்க்க முடிகிறது.
மக்களில் கதறல்களோ கெஞ்சல்களோ இராணுவத்தினரின் மனங்களைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை. மீண்டும் அடிமை வாழ்வு தொடர்ந்தது. பல இடைத்தங்கல் முகாம்கள் பல நலன்புரி நிலையங்கள் பல தடுப்பு முகாம்களும் உருவெடுத்தது. பல்லாயிரக்கணக்கானோர் தம் உறவுகளைக் காணது அலைந்து திரிந்தார்கள். இன்னும் முடிவின்றி பதிலின்றி கண்ணீருடன் அலைந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் திரு எஸ். நடேசன் தலைமையில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற அபகீர்த்திமிக்க படுகொலை ஒருபுறமிருக்க வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தில் 110 பேரின் பெயர் விபரங்களை அண்மையில் ஐ.நா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபாய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்று வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருந்தமை குறிப்பிடத் தக்கது
காணாமல் போதல் பற்றிய விசாரணை ஆணைக்குழுக்கள்.
1994ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியன்று ஆட்கள் தன்னிச்சையில்லாமல் கடத்தப்படுவதை அல்லது காணாமல் போவதை விசாரணை செய்வதற்கு அப்போதிருந்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்தார். இதில் வடக்கு மாகாணம் ஒரு வலயமாக கொள்ளப்பட்டது. இந்த ஆணைக்குழுக்களிற்கு 1988ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் இடம்பெற்ற காணாமல் போதல்கள் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுக்களின் தொடர்பு நியதிகள் பின்வருமாறு இருந்தன: 1988ஆம் ஆண்டு ஜனவரி 1 மே திகதிக்குப்பின்னர் தங்களுடைய வதிவிடங்களிலிருந்து எந்த ஆட்களிற்கும் தன்னிச்சையில்லாமல் அகற்றப்பட்டனரா அல்லது காணாமல் செய்யப்பட்டனரா என்று ஆராய்தல். அத்தகைய குற்றம் சம்பந்தப்பட்ட அகற்றல்களை அல்லது காணாமல் போதல்களை நிலைநிறுத்துவதற்கு கிடைக்கக்கூடியதாகவுள்ள சான்றுகள். அவ்வண்ணம் காணாமற் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆட்களின் தற்போதைய இருப் பிடங்களை அறிதல்.
குற்றம் சாட்டப்பட்ட காணாமல் போதல்களிற்கு பொறுப்பான நபரை அல்லது நபர்களைச் சுட்டிக்காட்டக்கூடிய ஏதேனும் பொருட்கள் உள்ளனவா என்பதை அறிதல். இவற்றுக்குப் பொறுப்பாகவுள்ள ஆட்களுக்கெதிராக எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அத்தகைய குற்றம் சாட்டப்பட்ட செயற்பாடுகளின் நிகழ்வைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், காணாமல் போனதாக கூறப்படும் ஆட்களின் பெற்றோர்களிற்கு அல்லது வாழ்க்கைத்துணையிற்கு அல்லது தங்கியிருப்பவர்களிற்கு வழங்கப்படக்கூடிய நிவாரணம் ஏதாவதிருத்தல் இவற்றை கண்டறிவதாக இவ் அமைப்புக் காணப்பட்டது.
காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் பாதிப்புள்ளாக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மாவட்ட செயலகங்களிலும் மற்றும் பிரதேச செயலகங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாகச்சென்று தமது கருத்துக்களை முன்வைத்தனர். இது தமக்கு திருப்தி கரமானதாக அமையவில்லை என்று அமர்வுகளில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். எமது கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படாததுடன், தமது கவனத்தை திசைதிருப்பும் முனைப்பிலேயே அவர்கள் செயற்பட்டனர் என காணாமல்போன இளைஞனின் தாயொருவர் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான வலய செயலணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இந்நிலை காணப்பட்டதாக தாய் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிக்கமைய, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்பட்டபோதிலும் அலுவலகம் ஸ்தாபிக்கப்படவில்லை. பின்னர் 2017 ஜூன் 21ஆம் திகதி காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான திருத்த சட்டமூலத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
காணாமல் போனோரையும், காணாமல் ஆக்கப்பட்டோரையும் தேடி கண்டுபிடித்தல் மற்றும் அவர்கள் காணாமல் போனதற்கான சூழ்நிலையை கண்டறிதல் ஆகிய நோக்கத்தினைக் கொண்டு காணாமல் போனோரை கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் 2017ஆம் ஆண்டு அலுவலகம் திறக்கப்பட்டு, வடக்கில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை பகுதியிலும் ஓர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், குறித்த அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் மக்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்தம் முடிவிற்குகொண்டு வரப்பட்ட பின்னரான இந்த அரசாங்கத்தினாலும் காணாமல்போனவர்கள் தொடர்பான எந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கமாகவுள்ளது. விசாரணை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தபோதும் அவற்றின் செயற்பாடுகள் இப்பிரச்சினைக்கு தீர்வுவழங்குவதாக அமையவில்லை இவை பாதிப்புக்குள்ளான குடும்பத்திற்கு ஏமாற்றமாகவே காணப்படுகின்றது. குடும்பத்தலைவர்களை, பெற்றோரை, பிள்ளைகளை இழந்த பலர் அநாதையாக வாழ்ந்துவருகின்றனர்.
காணாமல் போனோர் அலுவலகம்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென 1994இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின் தம்மவர்கள் பலரைக் காணவில்லை என்பது தொடர்பிலும் இந்நிகழ்வுக்குப் பின்னர் முகாம்களில் வாழ்ந்து வந்த பலரும், வீடு திரும்பியவர்கள் பலரும் காணாமல் போயுள்ளார்கள் என்று அவர்களைத் தேடும் முயற்சி தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. இம்முயற்சிகளின் தீவிரத்தைத் தணிப்பதற்கென 2013 ஆகஸ்ட் மாதத்தில் ‘பரணகம ஆணைக்குழு’ என்று அழைக்கப்படும் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அவ்விசாரணைகளால் எந்தப் பயனும் கிட்டாததால் காணாமல்போனோரைத் தேடும் முயற்சி தொடர்ந்து, தீவிரமடைந்து வந்தது.
OMP விசாரணைகள் நடாத்துவதற்கான அதிகாரங்கள் பற்றிய விபரங்கள் குறித்த சட்டத்தில் 12ஆம் பிரிவில் உள்ளது. அப்பிரிவினால் வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் காணாமல் போனவர் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் இருந்தன.
இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பல அதிகாரங்கள் இச்சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் பின்வரும் அதாகாரங்கள் கோடிட்டு காட்டக்கூடயவை. ஏனைய நாடுகளில் தாபிக்கப்பட்ட இதுபோன்ற அமைப்புக்களுடன் ஒப்பிடும்போது, இலங்கை OMP மனிதாபிமான பொறிமுறைகளிற்கு மேலதிகமான அதிகாரங்களை கொண்டுள்ளது. இவை தொடர்பில், அரச நிர்வாக மட்டங்களுக்கு சிபாரிசுகளை ( Recommendations) வழங்குதல், அரச முகவர் நிறுவனங்களுடன் இணைந்து OMP கடமைகளை ஆற்றுவதற்கான அதிகாரம். காணாமல் ஆக்கப்பட்டோரை இடம் இடமாக சென்று தேடிக்கண்டுபிடித்தல், இது தொடர்பில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு விசேட ஐனாதிபதி ஆணைக்குழு போன்ற சேகரித்த தரவுகளையும் முடிவுகளையும் (Finding) பெற்றுக்கொள்ளுதல்
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களை பாதுகாக்கும் அதிகாரம். பாரதூரமான குற்றங்களை விசாரித்துஇ தண்டனை வழங்க ஏதுவாக, அதனை சட்ட அமுலாக்கும் நிறுவனத்திடம் அறிக்கையிடல் பாதிக்கப்பட்டோருக்கு சமூக உளவியல் நலன் போன்ற நிர்வாக உதவிகளை வழங்கல் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினரின் சம்மதத்துடன் சில வழக்குகளை மேற்கொண்டு செல்ல ஏதுவாக, அதனை சட்ட அமுலாக்கும் நிறுவனத்திடம் அறிக்கையிடல்.
நீதிமன்ற அனுமதி பெற்று, சந்தேகத்திற்கு இடமான கல்லறைகள் பிணக்கிடங்குள் என்பவற்றை தோண்டி எடுத்து, அதனை ஆய்வு செய்து மேற்பார்வை செய்தல்,அவ்வாறு கண்டு எடுக்கப்படும் இறந்த உடல் மனித எச்சங்களின் DNA மாதிரிகைகளையும் காணாமல் போனோரின் DNA மாதிரிகைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி அடையாளம் காண ஏதுவாக நெறிப்படுத்தல்களை வழங்கல். காணாமல் போனோர் ஒவ்வொருவர் தொடர்பிலும் இடைக்கால அறிக்கை முழு அறிக்கை வழங்கி அதன்மூலம் Certificate Of Missing அல்லது Certificate of Death வழங்குதல், இவ்வாறாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மனிதாபிமான பொறிமுறைக்கும் நீதிமன்ற பொறிமுறைக்கும் இடையிலான தூணாக பாலமாக செயற்படல், இருந்த போதும் அவற்றைப் பயன்படுத்த தவறி அரசின் அடிவருடிகளாக செயற்பட்டார்கள் என்றால் மிகையாகாது.
” OMP அலுவலகம் வேண்டாம்….அதனை உடனடியாக மூடு!”, ” மரணச் சான்றிதழ் வழங்கவும் கொலையாளிகளைப் பாதுகாக்கவுமா OMPஐ உருவாக்கினீர்கள்?”, “மரணச் சான்றிதழை ஏற்கோம்…நஷ்ட ஈடும் ஏற்கோம் எம் உறவுகள் உயிரோடு வேண்டும்”, “ஏன் சர்வதேச விசாரணையை உள்நாட்டு விசாரணையாக மாற்றினீர்கள்”, உங்கள் “ஏக்கிய ராஜ்யாவை” குப்பையில் எறியுங்கள் உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கியும், பல கோஷங்களை எழுப்பியும் கடும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போனோரிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மை ( Truth) கண்டறியப்பட வேண்டும் என்பதும் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நியாயம் ( Justice) கிடைக்க வேண்டும் என்பதும் இருவேறு விடயங்கள். உண்மை ( Truth) கண்டறியப்படுவதற்காக மட்டுமே, OMP ஸ்தாபிக்கப்படுள்ளது. நியாயம் ( Justice ) கிடைக்க வேண்டும் என்றால், அவை தொடர்பில் நீதிமன்ற பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டு, அதன்பின்னர்தான் நியாயம் கிடைக்க முடியும். நீதிமன்ற பொறிமுறை ஆரம்பிக்க இலங்கை அரசிற்கு 30/1 என்ற ஜெனிவா தீர்மானத்தின் மூலம் தொடர்ந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.
தமிழ் அரசியல் தலைமைகள்.
தமிழ் அரசியல் தலைமைகள் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரைக் காலமும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததன் உச்சக்கட்டமே இது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சுயலாபக் கட்சி அரசியலுக்கு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் மேடைப் பேச்சுக்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பேசி வாக்கு வேட்டைகளின் பின்னர் வாக்களித்தவர்களை கண்கொள்ளாமல் இருப்பவர்கள் எங்கள் மக்கள் தெரிவுத் தலைமைகள்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இவர்கள் யாரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வாய் திறப்பதில்லை. சிங்கள இராணுவத்தின், சிங்கள அரசுகளின் இனப்படுகொலைக் குற்றங்களைப் பாதுகாப்பதில் மிக கச்சிதமாக, மிக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், தந்தையர்கள் போராடுவது பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று சொன்னால் மிகையாகாது
கடந்த காலங்களில் தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிட்டது போல் இந்த வருடம் இல்லாது தேர்தலின் மக்களால் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிள்ளைகளையும், கணவனையும் பறிகொடுத்து நிற்கும் உறவுகளுக்கு ஒரு நிரந்தரமான ஒரு தீர்வைப் பெற்றுத்தர முயற்சித்து அரசிற்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். சர்வதேசத்தின் ஊடாகவோ அல்லது உள்ளூர் பொறிமுறைகளூடாகவோ பாதிக்கப்பட்டுள்ள உறவுகள் சார்பாக நின்று நீதிக்கான ஓர் நியாயமான தீர்வை பெற்றுத் தருவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்த உள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டும்.
மரணச்சான்றிதழ்களைத் திணிக்கும் முயற்சி.
வார்த்தையளவிலான தமிழ்த் தேசியம் என்கிற நிலைகளைக் கடந்து அர்ப்பணிப்பான போராட்டங்களை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதற்கு நீதிக் கோரிக்கைகளுக்கான அழுத்தங்களை வலுப்படுத்துவதற்கு, சிந்திப்பதற்கும் இயங்குவதற்குமான சூழலை நாம் உருவாக்க வேண்டும். மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் தொடர்ந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரித்துக் கொண்டு தேடுதல் நடத்துவோம் என மரணச்சான்றிதழ்களைத் திணிக்கும் முயற்சியில் ஆணைக்குழுவினர் ஈடுபட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருக்கிறது.
யுத்தம் முடிந்த பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டிற்கு வந்த போது இராணுவத்தின் கரங்களில் புனர்வாழ்விற்கு என ஒப்படைக்கப்பட்ட எங்களுடைய உறவுகளுக்கு நடந்தது என்ன? அவர்களின் முடிவு தெரியாமல் அவ்வாறு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளமாட்டோம் அவர்களுடைய மரணத்தின் ஊடாக எமக்குக் கிடைக்கும் உதவிகள் தேவையற்றவை எனச் சாட்சியமளிக்க வந்தவர்கள் ஆணைக்குழுவிடம் பல கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார்கள் .
அரசியல்வாதிகளின் சிறுபிள்ளைத்தனங்களுக்குக் கவனம் கொடுத்து, ஊடகங்களும், புலம்பெயர் அமைப்புக்களும் உண்மையான பிரச்சினையைத் திசைதிருப்பி ஒதுங்கிப் போகும் நிலை காணப்படுகிறது. எனினும், இவ்வாறான நிலையைத் தொடர்ந்தும் அனுமதிப்பது என்பது, உண்மையான உணர்ச்சியாளர்களுக்கு விடுதலை நோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கிறது.
உறவுகளைத் தேடும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என்கிற அடையாளத்துக்குள் பலரை நாளாந்தம் காண்கிறோம். உறவுகளைத் தேடி அலைந்து அவர்களது கால்கள் பலமிழந்து விட்டன. கண்களில் கண்ணீர் வற்றிவிட்டது. தமது பிள்ளைகளின் நிலை என்னவென்று அறியாமலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தேடி அலைந்து தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 72 பெற்றோர்கள் இறந்துள்ளார்கள். மேலும் பலர் மன அழுத்தங்கள் காரணமாக நோய்வாய்ப்பட்டு உள்ளனர்.
சகல பிரதேசங்களும் யுத்தப் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதுடன் யுத்தத்தில் ஈடுபட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், நீண்ட காலம் இரகசியத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாலும் பெண்கள் குடும்பப் பொறுப்பை ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிள்ளைகள், சகோதரர்கள், குடும்பத்தலைவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆற்றல் அவர்களுக்கு குறைவாக உள்ளமையாளும் அவர்கள் பல்வேறு பாதிப்புக்களை நாளாந்தம் எதிர்கொள்ளுகின்றார்கள்.
இரவு வேளைகளில் தனியாக நடமாடுதல், தொலைதூர நிகழ்வுகளில் பங்குகொள்ளுதல், வீடுகளில் தனியே இருத்தல் எனப் பல விடயங்களில் அஞ்ச வேண்டிய நிலையானது காணப்படுகின்றது. பலதரப்பட்ட இனந்தெரியாத குழுக்களினால் மிரட்டப்பட்டும், உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டும் தமது வாழ்க்கையை எந்நேரமும் பயந்தவண்ணமே மக்கள் கழித்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு தமது உறவுகளை காணாமல் இன்று வரையும் பல மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். தந்தை, சகோதரர்களை இழந்த பிள்ளைகளும் பிள்ளைகளை இழந்த பெற்றோரும் தமது காணாமற்போன உறவுகளால் தினமும் அல்லலுறும் நிலையும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது.
இராணுவத்திடம் சரணடைந்து, அல்லது அவர்களால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளுக்கு போதிய சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கோ அவர்களின் நாளாந்த வாழ்க்கையைத் தொடர அவர்களுக்கு வசதிகள் இல்லை. சமூகரீதியான சவால்கள், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, வாழ்விட வசதிகளின் பற்றாக்குறை ஒருபுறம் இருக்கத் தமது உறவு உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது தெரியாமையினால் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவினை எண்ணி உளவியல் ரீதியான பிரச்சினைகளினைக் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் எதிர்நோக்குகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பங்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்தவகையில் வேலை வாய்ப்பின்மை, வருமானம் போதாமை, கடன் வசதிகளின்மை போன்ற பிரச்சினைகள் அவர்களது பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன. கடந்தகால அசாதாரண நிலைமையின் போது, காணாமல் ஆக்கப் பட்டவர்களது உறவினர்களான தமிழ் பெண்களிடம் இராணுவம், அரசியல்வாதிகள், துணைக் குழுக்கள் பாலியல் லஞ்சம் கோரியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தம், கடத்தல், உயிரச்சுறுத்தல், அனர்த்தங்கள் வாழ்வின் நெருக்கீடுகளைத் தொடர்ந்து ஏற்படும் மனநலக் குறைபாடுகளில் மனச்சோர்வு மிக முக்கியமானது. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்தும் துயரங்கள் மற்றும் தாங்கொணாத் துன்பங்கள் ஒரு மனிதனில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் ஏற்படும் எதிர் மறையான சிந்தனைகள் அவரை மனச்சோர்வு என்னும் கடலில் மூழ்கடிக்கக் கூடியவை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் பலர் மனச்சோர்வு என்னும் மனநிலையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். நீண்ட கால மனச்சோர்வு பரிய உள நோய்களையும் தோற்றுவித்த வண்ணமே உள்ளது.
தீர்வு நோக்கிய மக்களின் அகிம்சைப் போராட்டங்கள்.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி தொடர்ந்து எமது உறவுகள்
- காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.
- காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும்.
- சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
- பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் .
என்ற கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் போராட்டமாகக் கவனயீர்ப்பு போராட்டம், கறுப்புப் பட்டிப் போராட்டம், உணவு தவிர்ப்பு போராட்டம், தேங்காய் உடைக்கும் போராட்டம், கற்பூர தீச்சட்டி ஏந்தும் போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டம்,வீதி மறியற் போராட்டம், எழுச்சிப் போராட்டம், மௌன போராட்டம், முற்றுகைப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம், பதாதைகள் தாங்கிய போராட்டம் எனப் பல போராட்டங்களைத் தீர்வின்றி முன்னெடுத்து வருகின்றார்கள். அதே வேளை தமிழ் அரசியல்க் கட்சிகள் இந்தப் போராட்டங்களை கண்டுகொள்ளாத நிலையும் காணப்படுகின்றது.
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களில் பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களும் தலைநகர் கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்கள் இந்தநிலையில் கடந்த 2017/02/20ம் திகதி முதல் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்று 1288 நாட்களைக் கடந்த நிலையில் வடகிழக்கு மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலும் 1260 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான போராட்டங்களில் அதிகளவானோர் கலந்து கொள்வதுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் படங்களை, அவர்களின் உறவினர்கள் ஏந்தியிருந்ததோடு, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் காட்சிப்படுத்தி வருகின்றமை பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும் . இன்று வரை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான எந்தவித தகவல்களும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை.
இலங்கை இராணுவத்தினரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுவினரும் தமது உறவுகளை கடத்தியும் கைது செய்தும் காணாமல் ஆக்கப்பட்டதாக அரசாங்கத்திடம் நீதி கோரி மகஜர்களைக் கையளித்து, பல போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துள்ள போதும், அதற்கு அரசாங்கம் செவி சாய்ப்பதாக தெரியவில்லை . வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தரவுகள் சரியான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்படாத நிலையும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்கள் சரியான முறையில் சென்றடையாத நிலையும் தொடர்கிறது .
‘காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தை, கணவன், உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்களா? காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே உள்ளனர் என்பது குறித்தும் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பிலும் அரசாங்கத்தால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாமை சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
ஆயுத முரண்பாடுகள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகள் கடந்த போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்பில் உரிய முறையில் கவனம் செலுத்தப்படவில்லை 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இவர்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. எனினும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்மை நிலை அறியாமல், நீதி மறுக்கப்பட்டவர்களாகக் காணப்படுவதாக உள்ளமை கவலையளிப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இறுதி யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இவ்யுத்தம் 2009.05.18ல் இலங்கை அரசினால் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் ராணுவத்தை நோக்கிச் சென்று சரணடைந்தவர்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர், அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாருடன் கையளிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய உறவுகளும் காணாமல் ஆக்கப்படுகிறார்கள். மெல்ல மெல்ல அவர்களும் இந்த மண்ணுக்குள் காணாமல் தொலைக்கப்படுகிறார்கள்.
வேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞன் 1989ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டார். இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி அலைந்த முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த வேலுப்பிள்ளை வியாழம்மா காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி கடந்த 30 வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மனித உரிமை ஆணைக்குழுக்கள், ஆணைக்குழுக்களில் தனது மகனைத் தேடி வாக்குமூலங்கள் வழங்கியிருந்தார் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது உறவுகளைத் தேடி கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் போராடிவந்த நிலையில் 860ஆவது நாள் அன்று முதுமை காரணமாக தனது மகனைக் காணாமலேயே 13/07/2019 உயிரிழந்துள்ளார்.
செல்வம் சிவபாக்கியம்- முகமாலையை பிறப்பிடமாகவும் மந்துவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாய் தனது மகளின் மகனான “அல்பிரட் தினு” என்ற தனது பேரப்பிள்ளை 2009 ஆம் ஆண்டு இறுதியுத்த பகுதியில் வட்டுவாகல் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் ஏக்கத்தோடு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மழை வெயில் பனி என்று எதையுமே பொருட்படுத்தாமல் முல்லைத்தீவில் தகரக் கொட்டில்களில் நோய் நொடிகளுக்கு மத்தியில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த சில மாதங்களாக மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
தனது மகளின் மகனாக பேரன் இருக்கின்ற போதிலும் தனது மகனாகவே தன்னுடன் பேரப்பிள்ளையை வளர்ந்துவந்த இவர் பேரன் காணாமல் ஆக்கப்பட்ட நாளிலிருந்தே அவரைத்தேடி பல்வேறு இடங்களுக்கும் முறையிட்டு தேடிவந்தார். தனது இரண்டு பிள்ளைகளை மாவீரர்களாக மண்ணுக்கு ஈர்த்த இந்த தாய் இறந்துபோன பிள்ளைகளை பற்றிய கவலை இருந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட தனது பேரன் வந்தால் தான் தனக்கு நிம்மதி எனவும் அடிக்கடி கூறிவந்தார் .
தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து காணாமலாக்கப்பட்ட தனது பேரப்பிள்ளைக்கு நீதிகோரி கடந்த மூன்றுவருடங்களாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த செல்வம் சிவபாக்கியம் என்ற தாய் 26/02/2020 அன்று பேரனைக் காணாமலே வலிகளோடு இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறார்.
2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான விக்னேஸ்வரன் என்பவரை தேடி வந்த செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது69) என்ற தந்தை காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வவுனியாவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த தந்தையும் 1222 நாட்கள் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தனது மகனை தேடி வந்த தந்தை 24/06/2020 அன்று மகனைக் காணாமலே சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நாகராசா நகுலேஸ்வரன் என்ற மதனைத் தேடி வந்த ஏழாம் வட்டாரம், சிவநகர், புதுகுடியிருப்பைச் சேர்ந்த மகனை தேடி வந்த தந்தை சுகயீனம் காரணமாக மரணமடைந்தார் உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டத்தை ஆரம்பித்த நாட்களில் இருந்து போராடிவந்த நிலையில் 922ஆவது நாள் 03/09/2019 அன்று சின்னையா நாகராசா என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ் உறவுகளுக்கு நீதி வேண்டிய போராட்டத்துக்குத் தார்மீக ஆதரவு வழங்கவேண்டியது மனிதத்துவத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் தார்மீகக் கடமையாகும். கடந்த அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், சுமார் 20,000 பேர் காணாமற்போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கடந்த அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கிய போதிலும் அவை நிறைவேற்றப்படாத நிலையில், அவர்களின் ஆட்சியும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் இல்லையென கூறிய பின்னர் மீண்டும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி திடீரென காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் அலுவலகத்திற்கு உறுப்பினர்களை நியமித்துள்ளார் காணாமல் போனோரென எவரும் இல்லையென ஜனாதிபதி கைவிரித்துள்ள நிலையில் இந்த அலுவலகத்தைஎதற்காக செயற்பட வைக்கின்றனர் என்பதை நன்கு ஆராய வேண்டும்.
தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்க வெளிநாட்டு விசாரணையாளர்களை நியமிக்க வேண்டும் இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வலையில் சர்வதேசம் விழுந்துவிடாது காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவுகள் மழை,வெயில்,பனி பாராது தமது உறவுகள்கிடைப்பார்கள் எனப் பதினொரு வருடமாக வீதியில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவுகள் உயிரிழப்பது கூட இந்த அரசுக்கும், ஐக்கியநாடுகள் சபைக்கும் தெரியவில்லையா?
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை வடக்கு – கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறவுள்ளது. வடக்கு கிழக்கில் இடம்பெறும் கவயீர்ப்பு போராட்டத்திற்கு மதகுருமார்கள், அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூகமட்டப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தர அணிதிரள வேண்டும்.
அதே வேளை புலம்பெயர் நாடுகளிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க வேண்டும். 2020ம் ஆண்டு 9தவது நாடாளு மன்றத்திற்கு தெரிவாகி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை, கண்ணீருக்கு காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்கக் கூடிய வழிமுறைகளை உலகத் தலைவர்களுக்கும் விரிவுபடுத்தி கூறக்கூடிய தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தார்மீகப் பொறுப்பை உணர்ந்தவர்களாகச் சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து இப்போராட்டம் வெற்றிபெற பங்களிப்பு வழங்கவேண்டும்.
நிலவன் .