2008-9 காலக்கட்டங்களில் தாய்த் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருந்த தமிழினம் ஓலமிட்டு ஒப்பாரி வைத்து கதறி துடித்துக்கொண்டிருந்தது முள்ளிவாய்க்காலில் நடந்துகொண்டிருந்த இனப்படுகொலையை செரிக்க முடியாமல். 2009-க்கு பிறகு தனக்கு வரப்போகிற ஜனாதிபதி பதவிக்காக கொழும்புக்கும் இந்திய தலைநகரமான டெல்லிக்கும் ஓடிஓடி சேவகம் செய்தவர் பெரியவர் பிரணாப் முகர்ஜி அவர்கள். எல்லாம் முடிந்ததும் அவருக்கு கிடைக்க வேண்டிய இந்திய ஒன்றியத்தின் முதல் குடிமகனாக பட்டம் சூட்டப்பட்டது.
ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்ற பின்பு சென்னையில் உள்ள எங்கள் லயோலா கல்லூரிக்கு பொருளாதார கட்டிடத்தை திறந்துவைக்க வருவதாக செய்தியறிந்து லயோலா கல்லூரி பிரிட்டோ உள்ளிட்ட மாணவர்களோடு சென்னையின் பிற கல்லூரி மாணவர்களுடன் இணைந்து எங்கள் புனிதமான லயோலா கல்லூரிக்கு ரத்தக்கரை படிந்த பிரணாப் முகர்ஜி அவர்களுடைய கால்கள் நுழைய வேக்கூடாது. மீறி வந்தால் ஜனாதிபதியாக இருந்தாலும் நாங்கள் ஜனநாயக வழியில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்போம் என்று பிரகடனப்படுத்தினோம்.
நாங்கள் அறிவித்த நாட்கள் கடந்து ஜனாதிபதி வரும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அவர் வருவதற்கு முதல் நாள் இரவு என் மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல். மாணவர்கள் அனைவரையும் தலைமறைவாக இருக்க சொல்லிவிட்டு நான் மட்டும் அன்று இரவு வீட்டில் இருந்தேன். இரவோடு இரவாக 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சூளைமேடு அம்மன் தெருவில் உள்ள எனது வீட்டை நடு இரவில் முற்றுகையிட்டு என்னை கைது செய்தார்கள்.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி வேறு எங்கோ அழைத்துச் சென்றார்கள். கேள்வி கேட்டதும் என்னிடமிருந்த அலைபேசியை பிடுங்கிக் கொண்டார்கள். எங்கெங்கோ சுற்றிய வாகனம் மீண்டும் நுங்கம்பாக்கத்தின் நடு சாலையில் நிறுத்தப்பட்டது. அங்கு இரண்டு வேன்கள் முழுக்க பார்வைதாசன் உட்பட லயோலா கல்லூரி தம்பிகள், மற்றும் சட்டக்கல்லூரி தம்பிகள் வரை கிட்டத்தட்ட 15 நபர்கள் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தனர். பின்பு எங்கள் அனைவரையும் ஒரே வாகனத்தில் ஏற்றி நெடுநேரம் மீண்டும் சென்னையை சுற்றியவர்கள் இரவு இரண்டு மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி தனியார் விடுதியில் அறைக்கு மூவராக அடைத்து ஐந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரோடு ஒவ்வொரு அறையிலும் நெருக்கியடித்து படுத்துக் கொண்டார்கள்.
அதன் பிறகு நடந்ததெல்லாம் பெரும் கொடுமை. தமிழினியன் என்கிற ஒரு தம்பி அவனது உள்ளாடைக்குள் அலைபேசி வைத்திருந்தான் என்று குற்றம் சொல்லி வீட்டிற்கு படுக்கச் சென்ற உயர்பொறுப்பில் உள்ள காவல் அதிகாரிகளுக்கெல்லாம் வயர்லெசில் செய்தி பரப்புகிறார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் எங்களை மூணாவது மாடியில் இருந்து தீப்பிடித்த வீட்டிலிருந்து ஓடுவதைப்போல அவசர அவசரமாக இறக்கி அதிகாலை மூன்றரை மணி இருக்கும் வேன்களில் ஏற்றுகிறார்கள். நாங்கள் இறங்குவதற்குள் வேக வேகமாக வந்து வாகனத்தில் இறங்கிய உயரதிகாரிகள் தமிழினியனை இழுத்துப்போட்டு ஆளாளுக்கு அடிக்கிறார்கள். ஆத்திரம் தீர துவட்டி எடுக்கிறார்கள். நான் கத்தி சண்டையிட்ட போது மரியாதைக் குறைவாகப் பேசினார்கள்.
நடக்க முடியாத நிலையில் தமிழினியனை வேனுக்குள் தூக்கி எறிந்து வாகனம் புறப்படுகிறது. மீண்டும் சென்னை முழுக்க சுற்றுகிறார்கள். அதற்கான காரணம் அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் முப்படைக்கும் தளபதி என்றும் அவருக்கு எங்களால் ஏதாவது தமிழ்நாட்டில் அவமானம் நேர்ந்தால் அது இந்திய ஒன்றியத்திற்கே அவமானம் என்று கூறி டெல்லி (அவர்கள் பயன்படுத்திய வார்த்தை டெபன்ஸ்) ராணுவ தலைமையிடத்திடமிருந்து தமிழ்நாட்டின் காவல் துறைக்கு உத்தரவு வந்ததாகவும் அந்த உத்தரவுக்கு அடிபணிந்துதான் எங்களை நடுஇரவில் கைது செய்து எங்கு வைத்திருக்கிறோம் என்று எங்கள் வீட்டிற்கும் கூட சொல்லாமல் ஊடகங்களுக்கும் தெரியாமல் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் லயோலா கல்லூரியின் சிறப்பு பொருளாதார கட்டிடத்தை திறந்து வைத்து பின்பு அவர் மீனம்பாக்கத்தின் விமானத்தில் ஏறியதை உறுதி செய்த பிறகுதான் விடுதலை என்றும் கூறி வாகனம் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
(அதாவது இவர்கள் அதிரடியாக எங்களை கைது செய்து மறைத்து வைத்திருப்பது எந்த சூழ்நிலையிலும் ஊடகத்திற்கு செய்தி போய்விடக்கூடாது. அதுவும் தமிழினியன் வைத்திருந்த அலைபேசி வழியாக ஒருவேளை சென்று விட்டால் அது அவர்களுக்கு படுதோல்வி என்று கற்பனை செய்த நிலையில்தான் இவ்வளவு கலவரமும் நடத்தப்பட்டது)
அதிகாலை ஐந்து மணியிருக்கும். இறுதியாக வேளச்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மாடியில் ஓரிடத்தில் அடைத்து வைத்தார்கள். எங்கள் அனைவரையும் மீண்டும் மீண்டும் சோதனை செய்கிறார்கள். சிறுநீர் கழிக்கச் சென்றால் கூட ஆயுதம் தாங்கிய நான்கு காவலர்கள் உடன் வந்தார்கள். கதவை சாத்தாமல் சிறுநீர் கழிக்க சொன்னார்கள். ஏதோ குண்டு வைக்க வந்த வேற்றுநாட்டு தீவிரவாதிகளை பிடித்த கடுமை எங்கள் மீது காட்டப்பட்டது. எங்களைப் பற்றிய எந்த செய்தியும் வெளியே கசிந்து விடக்கூடாது என்று தமிழ்நாடு காவல்துறை அவ்வளவு கவனம் எடுத்துக் கொண்டது.
எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டோம். விடிந்தது. எங்களுக்கு உணவு கொடுத்தார்கள். நாங்கள் உண்ண மறுத்து விட்டோம். எங்கள் ஈழ மக்களை ஈவு இரக்கமின்றி சிதைத்த காங்கிரஸ் அரசாங்கத்தில் வெளியுறவு துறை மந்திரியாக இருந்தவர் இன்று ஜனாதிபதியாக உயர்ந்து நின்றாலும் ரத்தக்கரை படிந்த அவரை நாங்கள் நாளையும் எதிர்ப்போம். நேர்மையற்ற முறையில் சட்ட விதிமுறைகளை மீறி கைது செய்த உங்கள் கைகளால் கொடுக்கும் உணவை ஒருபோதும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்று பதினைந்து பேரும் உண்ணாவிரதம் இருந்தோம். அவர்கள் திட்டமிட்டபடியே மதியம் ஒன்றரை மணிக்கு பிரணாப் முகர்ஜி அவர்கள் விமானத்தில் ஏறியதும் உணவு உண்ணாத எங்களை- பயந்த நிலையில் விடுதலை செய்தார்கள்.
அப்பொழுதும் கூட நாங்கள் ஊடகத்தை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக காவல்துறை எடுத்துக்கொண்ட முயற்சி படு பயங்கரமானது. அத்தனையையும் முறியடித்து வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை குறுக்கே நின்று தடுக்க தடுக்க ஊடகத்தினார் முன்பு பிரகடனப்படுத்தினோம். அறமற்ற முறையில் சட்டத்தை மீறி எங்களை கைது செய்து அடைத்து வைத்த காவல்துறையினரை சட்டரீதியாக நாங்கள் தண்டிக்காமல் விட மாட்டோம் என்று கூறி டெல்லி மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தோம். டெல்லியிலிருந்து அடுத்த ஒரே வாரத்தில் “சச்சார்” என்கிற நேர்மை மிக்க மனித உரிமை தலைவர் சென்னைக்கு வந்தார்.
ஏ.சி. ஞானசேகரன், சூளைமேடு எஸ்ஐ ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சென்னை விருந்தினர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டு நேர்மையோடு விசாரணை நடத்தப்பட்டது. திரு. சச்சார் காவலர்களிடம் நடுநடுங்க கேள்விகளை அடுக்கினார். நேர்மையான பதில்கள் எதுவும் காவல்துறையினரிடம் இல்லை. எங்களையும் அழைத்து விசாரணை செய்தார். எங்கள் இனத்திற்கு எதிரானவர்கள் எவராக இருந்தாலும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு காட்ட எங்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். சட்டத்தில் இடமில்லை என்று அவர்கள் கைது செய்து சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள சட்ட விதிமுறைகளுக்கு மாறாக எங்களை அவர்கள் இரவில் அடைத்து வைத்தார்கள் என்று நேர்மையோடு முறையிட்டோம். ஆனால் காவல்துறை தந்த வாக்குமூலத்தில் எங்களை அவர்கள் அடைத்து வைக்கவேயில்லை என்றும் தமிழினியன் என்கிற இளைஞனை அடிக்கவேயில்லை என்றும் பொய் சொன்னார்கள்.
எங்களை அடைத்து வைத்த தேனாம்பேட்டை விடுதிக்கு விசாரணை அதிகாரிகளை அழைத்துச் சென்றோம். விடுதி உரிமையாளர் அப்படி யாரையும் எங்கள் விடுதியில் கொண்டுவந்து அடைக்கவில்லை என்றார். நாங்கள் உடனே சிசிடி கேமராவை போட சொன்னோம். அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் இரண்டு மாதங்களாக பழுதாக உள்ளது என்று பயந்த நிலையில் விடுதி உரிமையாளர் வாக்குமூலம் தந்தார். விசாரணை அதிகாரி எங்களைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்தார்.
காவல்துறை அவ்வளவு தூரம் அவர்களை பயமுறுத்தி வைத்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. இறுதியாக எங்களிடம் விசாரனை நடத்திய மேன்மைமிகு. சச்சார் அவர்களிடம் “உங்களை நேர்மை மிக்க அதிகாரியாக பார்க்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாளையும் நாங்கள் மதிப்போம். காரணம் விரைவில் எங்கள் மண்ணை நாங்கள் ஆளக்கூடிய அரசியலை கையில் எடுக்கப் போகிறோம். அப்படிப்பட்ட சட்டத்தை நாங்கள் தொடர்ந்து மதிக்க வேண்டும் என்றால் நேர்மையற்ற முறையில் நடந்துகொண்ட இந்த காவல்துறையினரை நீங்கள் தண்டிக்க வேண்டும.
இல்லையேல் சட்டத்தின் மீது எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை முற்றுமுழுதாக மதிப்பிழந்து போய்விடும் என்றேன். சிரித்தவர் என்னைத் தட்டிக் கொடுத்து (ஆங்கிலத்தில்) மிகவும் வேகமாக இருக்கிறீர்கள் இன்னும் விவேகத்தோடு போராடுங்கள். நிச்சயம் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்றார். அவர் சொன்னது போலவே ஒரு மாதம் கடந்த நிலையில் தீர்ப்பு வந்தது. சூளைமேடு எஸ்.ஐ.ஸ்ரீகாந்த் பதவி இறக்கம் செய்யப்பட்டார். எல்லாவற்றையும்விட மோசமாக நடந்துகொண்ட ஏசி ஞானசேகரன் அவர்கள் இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்புதான் பதவி ஓய்வு பெற்றுக்கொண்டார். இல்லையேல் அவருக்கான தண்டனை கடுமையானதாக இருந்திருக்கும். பின்பு ஸ்ரீகாந்த் அவர்கள் பலமுறை என்னை கேட்டுக்கொண்டதற்கிணங்க நாங்கள் எதுவும் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி என்னவெல்லாமோ வலிகள் மிகுந்த நிகழ்வுகள் நடந்தது அப்போது …
காலம் இன்று மரியாதைக்குரிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களை தன்னோடு அழைத்திருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில் தனது பதவிக்காக பல உயிர்களை பலி கொடுத்துதான் அதனை பெற வேண்டும் என்பது அறமற்ற ஒரு இழி செயல். ஒரு போதும் இது முன்னாள் ஜனாதிபதியை அசிங்கப்படுத்தும் நோக்கமன்று. இன்றும் பதவியில் இருக்கும் எத்தனையோ மிருகங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு.
எவ்வளவு கொடூரமானவராக இருந்தாலும் இறந்தால் அவர்களை புகழ வேண்டுமென்று எந்த காட்டுமிராண்டி சொன்னான் என்று தெரியவில்லை. இறந்தாலும் சம்பந்தப்பட்டவர் தவறு செய்திருந்தால் உலகம் தன் சமாதியில காரி உமிழும் என்று தெரிந்தால்தான் வாழ்கின்ற காலத்தில் மிருகங்கள் கூட ஒருவேளை மனம் மாறக்கூடும். துள்ளத் துடிக்க செத்த எம் ஈழ உறவுகளும், எம் பிஞ்சின் கதறல்களும் இப்பொழுது கூட என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. கூடவே தேனாம்பேட்டையில் கதறிய என் அன்புத்தம்பி தமிழினியனின் கதறலும் கூட…
அனைத்தையும் நினைத்து பார்க்க
தண்ணீரிலிருந்து கரையில் தூக்கி எறியப்பட்ட மீனைப்போல என் மனசு என்னவோ இன்னும் இன்னும் பெருவலியோடு துடிதுடித்துக் கொண்டருக்கிறது…
ஆதலினால்…
குற்றவாளி என்றுமே
குற்றவாளிதான்…
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி.
“சோழன் குடில்”
31.08.2020