தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
“விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்காரவே முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ,அது எமது கட்சியின் நிலைப்பாடு கிடையாது. அது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.
இருப்பினும், தொடர்ந்தும் நாங்கள் விக்னேஸ்வரனின் கருத்தை பற்றியே கொண்டிருக்க விரும்பவில்லை. ஆயினும் இது தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் நாட்டுக்கு தெரியப்படுத்துவோம்.
ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கே அதிகளவான ஆதரவைக் கொடுத்திருந்தனர். பொதுத் தேர்தலின் முடிவுகளின் போதும் கணிசமான தமிழ் மக்கள் எமது கட்சிக்கு ஆதரவைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் எமது கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளதால், எமது கட்சிக்கு தமிழ் மக்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று நான் எண்ணவில்லை.
இந்த விமர்சனங்கள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகளாகும் , அது எங்கள் கட்சியின் நிலைப்பாடு கிடையாது. ஜனநாயகக் கொள்கைக்கமைய செயற்படும் நாட்டுக்குள் யாரும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பான எமது நிலைப்பாட்டை நாங்கள் நாட்டுக்கு விரைவில் தெரியப்படுத்துவோம்” என்றார்.