ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும் பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும் மாணவர்களின் அயராத முயற்சிகளினூடும் எம்மவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் பயனாக உருவாகிவரும் எமது இளம் தலைமுறையினரின் திறனையும் ஆளுமையையும் தமது குடும்பம், மொழி, கலை, கலாசாரம் மற்றும் நற்பண்புகள் என்பவற்றில் அவர்களுக்கு இருக்கும் பற்றுறுதியை மேம்படுத்துவதற்கு செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக பலருடன் கலந்துரையாடல்களை தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டுவருகின்றது. இதன் பயனாகச் செயற்படுத்தப்பட வேண்டிய பத்து விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.
1. மாணவர்களின் உண்மையான ஆர்வமும் திறனும் அடையாளப்படுத்தப்படல் தொடர்பாக பயிற்சியளித்தல்.
2. மாணவர்களினுடைய கற்றல் சம்பந்தமான தெரிவுகளுக்கு முன்னுரிமை வழங்குவதும் கற்பித்தல் சம்பந்தமாக அவர்களின் அபிப்பிராயங்கள் உள்வாங்கப்படுவதற்கான பொறிமுறைகளை மேம்படுத்துவதற்கும் பயிற்சியளித்தல்.
3. நல்ல பழக்கங்களையும் செயல்களையும் மாணவர்கள் பழகுவதற்கும் செய்வதற்கும் ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை பொறிமுறைகளுடன் நடைமுறைப்படுத்தல்
4. மாணவர்களுக்குக் கற்றல் செயற்பாடுகளில் ஆர்வமூட்டும் நடைமுறைகளை அறிமுகம் செய்தலும் தன்னார்வ கற்றல் செயற்பாடுகளை ஊக்குவித்தலும்
5. குடும்பம், ஆசிரியர்கள், மொழி, கலை, கலாசாரம், தன்னிறைவு என்பவற்றில் மாணவர்களுக்கு இருக்கும் மதிப்பையும் பற்றுறுதியையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிமுகம் செய்தல்
6. சவால்களை எதிர்கொள்ளும் திறனையும், வெற்றி நோக்கி முயற்சிக்கும் மனப்பாங்கையும், தோல்விகளை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வளர்க்க முயற்சி எடுத்தல்
7. நட்புறவு, சகோதரத்துவம், நம்பிக்கை உணர்வுகளை வளர்த்து பிறரின் மனம் நோகாத சிநேகபூர்வ தொடர்பாடல்களுக்கான பயிற்சி வழங்குதல்.
8. நேரத்தையும் வாழ்க்கையையும் திட்டமிடுவதற்கான பயிற்சியளித்தல்.
9. நல்ல அடிப்படை குணாதிசயங்களை கற்கும், கற்பிக்கும் உபாயங்களை அறிமுகப்படுத்தல்
10. மற்றவர்களின் உரிமைகளையும் மன உணர்வுகளையும் புரிந்துகொள்ள பயிற்சியளித்தல்.
இவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பல விடயங்களையும் நடைமுறைப்படுத்தி முன்னெடுக்க பல்வேறு தரப்பினருடனும் இணைந்து பணியாற்றும் முயற்சிகளை தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்திருக்கிறது. இதற்கான தொடர் திட்டமிடல் செயலமர்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் அமைப்புகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் [email protected]என்ற மின்னஞ்சல் ஊடாக தமிழ் மக்கள் பேரவையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழ் மக்கள் பேரவை.
01.09.2020.