எங்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீர்த்த ஓர் உயர்ந்த உத்தமனை மாவீரன் திலீபனை நினைவு கூருவதற்கு எங்களுக்கு சகல உரிமைகளும் இருக்கின்றன. அதனைச் தடை செய்ய அரசுக்கும் அரச படைகளுக்கும் பொலிஸுக்கும் எந்த உரிமையும் கிடையாது.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: –
“எங்களுடைய தேசத்தில் எங்களின் உரிமைக்காக உயிர் நீர்த்த உத்தமன் மாவீரன் திலீபனின் நினைவுதினம் எதிர்வரும் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதற்குரிய அனுமதியைத் தர முடியாது என வவுனியா பொலிஸ் தலைமையகம் தடைவிதித்துள்ளது. நினைவேந்தலை மீறிச் செய்தால் கைது செய்வோம்எனவும் வவுனியாப் பொலிஸார் மிரட்டியுள்ளனர்.
எங்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீர்த்த ஓர் உயர்ந்த உத்தமனை நினைவுகூருவதற்கு எங்களுக்கு சகலஉரிமைகளும் இருக்கின்றன. அதனைத் தடை செய்ய அரசுக்கும் அரச படைகளுக்கும் பொலிஸுக்கும் எந்த உரிமையும் கிடையாது.
எங்கள் மீது இனப்படுகொலை செய்து விட்டு இங்கே வந்து அபிவிருத்தி பற்றியும் நாட்டைக் கட்டியயழுப்புவது பற்றியும் கதைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். 30 ஆண்டுகளாக அழிக்கப்பட்ட எங்கள் மக்களின் உரிமை பற்றியோ, அவர்களின் மறுவாழ்வு பற்றியோ, முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு பற்றியோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதி என்ன என்பது பற்றியோ, தமிழ் அரசியல் கைதிகளின் நிலை பற்றியோ நீங்கள் எதுவும் பேசுவதற்குத் தயாராக இல்லை.
இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் இந்த நாட்டை உங்களால் ஒருபோதும் கட்டியயழுப்ப முடியாது. ஓர் அரசு இந்தியாவுக்குச் சார்பாகவும், இன்னோர் அரசு சீனாவுக்குச் சார்பாகவும் செயற்பட்டு உங்களை நீங்களே அடித்துக்கொள்ளும் நிலைதான் வளர்ந்து வருகின்றது” என்றார்.