பெரும் சர்ச்சைகளுடன் நோக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. எதிர்க் கட்சியைச் சேர்ந்த எட்டுப் பேரின் ஆதரவு கிடைத்ததால் 156 வாக்குகளைப் பெற்று, திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கின்றது.
கட்சிகளின் ஏழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டிருந்தால், அரசாங்கத்தின் நிலைப்பாடு தடுமாற்றமானதாகவே இருந்திருக்கும். ஆக, இந்த தனிச் சிங்கள – பௌத்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் சிறுபான்மையினக் கட்சிகளும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளன. ஆனால், இதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகின்றது?
ஜெயவர்த்தன புதிய அரசியலமைப்பை 1978இல் கொண்டுவந்த போதுதான், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயவர்த்தன அதிகாரங்கள் அனைத்தையும் தன்னிடம் குவித்துக்கொள்வதை இலக்காகக் கொண்டே இந்த புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்தார். அதன் மூலமாக தன்னை ஒரு சர்வாதிகாரியின் நிலைக்கு அவர் உயர்த்தினார். இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தன, 1989இல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற போது, மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக விரும்பியிருந்தாலும், நாட்டில் காணப்பட்ட கொதி நிலையால், கட்சித் தலைமையை பிரேமதாசவிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
வடக்கு கிழக்கில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்தமையும், தெற்கின் பல பகுதிகள் ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் இருந்தமையும் ஜெயவர்த்தன ஒதுங்கிக் கொண்டமைக்குக் காரணமாகச் சொல்லலாம். ஆனால், பிரேமதாஸ இந்த இரண்டு பிரச்சினைகளையும் சமாளிப்பதற்கு அவருக்கு இருந்த நிறைவேற்று அதிகாரம் காணரமாக இருந்தது என்பது உண்மையாக இருக்கலாம். பிரேமதாஸவும் ஒரு சர்வாதிகாரியாகவே ஆட்சி நடத்தினார். கட்சிக்குள்ளும், வெளியேயிருந்தும் வரக்கூடிய எதிர்ப்புக்களை முறியடிப்பதற்கு தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
சந்திரிகா சொன்னது
ஜனாதிபதியிடம் இருக்கக்கூடிய சர்வாதிகாரம் நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில்தான் 1994இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதித் தேர்தலில் குதித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை இல்லாதொழிப்பது என்பது அவரது பிரதான வாக்குறுதியாக இருந்த போதிலும், அவர் அதனைச் செய்யவில்லை.
விடுதலைப்புலிகளுடனான போரை மீண்டும் ஆரம்பித்த அவர், நிறைவேற்று அதிகாரத்தை நியாயப்படுத்திக்கொண்டே, மேலும் ஒரு தவணைக்கு ஜனாதிபதிப் பதவியை வகித்தார். இறுதியில், 2005இல் ஜனாதிபதி ஒருவர் மூன்றாவது தவணைக்கும் பதவி வகிக்கலாம் என்ற மாற்றத்தைக் கொண்டுவர அவர் முற்பட்ட போதிலும், மகிந்த ராஜபக்ஷவின் கடுமையான அழுத்தங்களால் அதனைச் செய்ய முடியவில்லை.
2005இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை இல்லாதொழிப்பது என்ற வாக்குறுதியுடனேயே மகிந்தவும் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார். ஆனால், அதிகாரத்தைச் சுவைத்த அவரால் அதனை மாற்ற முடியவில்லை. ஏற்கனவே இருந்த நிறைவேற்று அதிகாரங்களை மேலும் பலப்படுத்தும் வகையில்தான் 18 ஆவது திருத்தத்தை அவர் கொண்டு வந்தார்.
ஜனாதிபதி ஒருவர் மூன்று தவணைக்குப் பதவி வகிக்கலாம் என்பதும், பாராளுமன்றத்தை அதன் ஒரு வருட பதவிக்காலத்திலேயே கலைக்கலாம் என்பதும் இந்த 18ஆவது திருத்தத்தில் முக்கியமானவை. இதன் மூலம் தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருக்க முடியும் என அவர் நம்பினார். ஆனால், ராஜபக்ஷக்களில் அதிருப்தியடைந்திருந்த மைத்திரிபால சிறிசேனவை கட்சியிலிருந்து வெளியே எடுத்து ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியதன் மூலம், மகிந்தவின் இந்தத் திட்டத்தை சந்திரிகா – ரணில் இணைந்து சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் முறியடித்தனர்.
19 ஆவது திருத்தம்
ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதை இலக்காக வைத்துத்தான் 19 ஆவது திருத்தம் மைத்திரி – ரணிலால் கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதியின் பதவிக்காலம் இரண்டு தவணை மட்டும்தான் எனக் குறிப்பிடப்பட்டிருந்தமை மகிந்தவைக் கட்டிப்போட்டது. இரட்டைப் பிரஜாவுரிமை கோட்டாவையும், பசிலையும் இலக்காகக் கொண்டு கொண்டுவரப்பட்ட போதிலும், கோட்டா அந்தத் தடையைத் தாண்டினார். எப்படியிருந்தாலும், 19 ஆவது திருத்தம்தான் கோட்டா ஜனாதிபதியாக வழிவகுத்தது. இல்லையெனில் மகிந்தவே மீண்டும் ஜனாதிபதியாகியிருப்பார்.
2015 ஆட்சி மாற்றமும், 19 ஆவது திருத்தமும் ராஜபக்ஷக்களைத் தோற்கடிக்கும் ஒரேயோர் இலக்கை மட்டுமே கொண்டிருந்தது. 19ஆவது திருத்தச் சட்டமானது, ராஜபக்ஷக்கள் எதிர்காலத்தில் கூட, அதிகாரத்திற்கு வந்து விடக் கூடாது என்னும் நோக்கில் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்தும் நோக்கில் இது முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் கூட, அடிப்படையில் ராஜபக்ஷ குடும்பமே இலக்கு வைக்கப்பட்டது. ஆனால், இன்று அனைத்தும் தலைகீழாகிவிட்டது.
ராஜபக்ஷக்களை அகற்றுவதற்கு திட்டம் தீட்டியவர்கள், இன்று கோட்டாபய ராஜபக்ஷவை பெருமபான்மை ஆதரவுடன் அரியணையில் அமர்த்தியிருக்கின்றனர். ஒருவர் ஜனாதிபதி, பிறிதொருவர் பிரதமர், மற்றொரு சகோதரர் பாதுகாப்பு அமைச்சர் என்னும் நிலை உருவாகியிருக்கின்றது. இனி பஸிலும் பாராளுமன்றம் வந்து அமைச்சராகலாம். அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காக போடப்பட்ட திட்டங்கள் அனைத்தும், இறுதியில் ராஜபக்ஷக்களை முன்னரைவிடவும் பலமான நிலையில் மீளவும் அதிகாரத்திலல்லவா அமர்த்தியிருக்கின்றது.
அடுத்தது என்ன?
அடுத்து வரவுள்ள ஐந்து வருடங்களுக்கு இலங்கையின் தலைவிதியை ராஜபக்ஷக்களே தீர்மானிக்கவுள்ளனர். சில சமயம் அது 10, 15 வருடங்களுக்கும் தொடரலாம். எதிர்க்கட்சிகளின் பலத்திலேயே அது தங்கியிருக்கின்றது. அதற்கான வலுவான அடித்தளத்தை அவர்கள் போட்டுவிட்டனர். இனி எவர் விரும்பினாலும் இதை மாற்றியமைக்க முடியாது என்பதே உண்மை. சிறுபான்மையனக் கட்சிகளான முஸ்லிம் கட்சிகளின் ஆறு பிரதிநிதிகள் இப்போது அரசின் பக்கம் தாவிவிட்டார்கள். அதனால், அரசு மீதான நெருக்கடிகள் குறையலாம்.
கோட்டாபய அரசாங்கம் சர்வதேச உறவுகளை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதைக்ண்டு, இலங்கை மீதான தலையீடுகள் இடம்பெறும். குறிப்பாக ஜெனீவா விவகாரத்தைக் கையாள்வதற்கான சில உபாயங்களை அவர்கள் கையாளலாம். தொடரும் கொரோனா தொற்றும். அதனால் உருவாகியிருக்கும் பொருளாதார நேருக்கடிகளும் அவர்களுக்கு உதவலாம். ஆக, ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் உருவாகக்கூடிய நெருக்கடிகளை சமாளித்து பலமான ஒரு சர்வாதிகார ஆட்சியைத் தொடர்வதற்கான வாய்ப்பு 20 ஆவது திருத்தத்தின் மூலம் ராஜபக்ஷக்களுக்குக் கிடைத்துள்ளது.