திராவிடர் விடுதலைக் கழக தலைவரும், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவருமான கொளத்தூர் மணி அவர்கள் எமது ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேகமான நேர்காணலை இங்கு தருகின்றோம்.
கேள்வி
காந்தி தேசம், காந்தியை விட உறுதியுடன் போராடிய போராளிகளின் வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் போனது ஏன்?
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சூழ்ச்சிக்கு ராஜீவ் காந்தி பலியாகியிருந்தார் என்று தான் சொல்ல முடியும். ஒப்பரேஷன் பூமாலை என்ற உணவுப் பொட்டலங்களைப் போட்டது. மற்றும் மில்லரின் கரும்புலித் தாக்குதல் நடைபெற்றது. இவற்றிற்கிடையான காலப்பகுதியில் ஜே.ஆர். ராஜீவ் காந்தியை வசப்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ராஜீவ் காந்திக்கு முன்னால் இருந்த ஆட்சியாளர்கள் தங்கள் வெளிநாட்டுக் கொள்கையில் தாங்களே தீர்மானிக்கக் கூடிய அனுபவம் உள்ளவர்களாக இருந்தார்கள்.
முதல்முறையாக அயலவர்களின் அதிகாரிகள் இவரை வழிநடத்தும் அளவிற்கு இவருக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லாததை பயன்படுத்தி ஜெயவர்த்தன அவரை விழுத்தி விட்டார் என்று தான் கூற வேண்டும். அதற்குப் பின்னர் நடைபெற்ற ஒப்பந்தமும், திலீபனின் பட்டினிப் போராட்டம் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டதும் இதன் காரணமாகத் தான் பார்க்கிறேன்.
இதற்கு முன்னர் 1986 நவம்பரில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது நடைபெற்ற இரண்டு அசம்பாவிதங்களைக் கொண்டு, அதாவது சூழைமேட்டில் ஈ.பி.ஆர்.எல்.எப் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், மற்றும் ஒரத்தநாட்டில் புளொட் உறுப்பினர்கள் மதுபோதையில் நடத்திய அசம்பாவிதம் ஆகிய இரண்டையும் வைத்து, அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரன், இக்குழுக்களின் ஆயுதங்களை களைய வேண்டும் என்று கூறிய ஆலோசனையை தப்பாக கணித்து அவர்கள் பிரபாகரனிடமிருந்த ஆயுதங்களையும் பறித்த சம்பவம் அப்போது நடந்தது. அதில் மோகன்தாஸ் என்ற பொலிஸ் அதிகாரி செயற்பட்டிருந்தார். பின்னர் தான் வேறு நபர்களின் தூண்டுதலால் தான் தான் இதை செய்திருந்தார் என்பது அவருக்குத் தெரிந்தது.
இதற்காக தலைவர் பிரபாகரன் அவர்கள் 4 நாட்கள் நீராகாரம் அருந்தாது பட்டினிப் போராட்டத்தை நடத்தினார். இதன் பின்னர் முதலமைச்சர் வந்து பிரபாகரனின் ஆயுதங்களை பெற்றுக் கொடுத்திருந்தார்.
அதோடு சேர்த்துத் தான் திலீபனின் நிகழ்ச்சியையும் பார்க்கிறேன். ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்ததால், அந்தப் போராட்டத்தை எம்.ஜி.ஆர். அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தமிழர்களை ஒரு பொருட்டாக கருதாதவர்களாயிருக்கிற மனப்பான்மை கொண்ட ராஜீவ் காந்தி அரசால் அது போதியளவு கருதப்படவில்லை என்று தான் நான் கருதுகிறேன்.
கேள்வி
தமிழ் நாட்டில் திலீபனின் நினைவுப்பதிவுகள் நீர்த்துப்போகிறதா?
அப்படித் தான் சொல்ல வேண்டும். 2009இற்குப் பிற்பாடு மாவீரர் நாள் ஈழ ஆதரவு அமைப்புகள், தமிழ்த் தேசிய இயக்கங்களால் நடத்தப்படுகின்றது. திலீபனின் நினைவு நாள் என்பது சில பொதுக் கூட்டங்களாகத் தான் நடந்து கொண்டிருந்தது. எங்களைப் போன்ற அமைப்புகள் அதை பொதுக் கூட்டங்களாகத் தான் நடத்தி, அதில் அப்போதைய சிக்கல்களைப் பேசுவது வழக்கம். கடந்த ஆண்டு வேறு சிக்கல்களால் தள்ளிப் போய்விட்டது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக நிகழ்வை நடத்த முடியவில்லை.
கேள்வி
தமிழ் நாட்டில் தமிழ் தேசிய எழுச்சியை மேம்படுத்த தமிழ் தேசிய போராட்ட அமைப்புகள் ஒன்றிணையும் வாய்ப்புகள் உள்ளனவா?
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது தான். அரசியல் ஈடுபாடு காரணமாக ஏற்கனவே பேசப்பட்டு வந்த தமிழ்த் தேசிய எழுச்சி என்பது மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஈழவிடுதலைப் போராட்டம் தமிழக இளைஞர்கள் மத்தியில் மீண்டும் உருவாக்கி வைத்திருந்தது. தற்போதைய சூழலில் இரண்டு வகையான தமிழ்த் தேசிய அமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
- இந்த இலட்சியங்களைப் பேசுகின்றவை. அதில் ஈழ விடுதலையை விட தமிழ்நாட்டில் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எனவே தமிழ் நாட்டிற்கான அதிகாரங்கள் வேண்டும் என்பதைப் பற்றி பேசுபவை.
- அரசியலில் ஈடுபட்டு ஆட்சியைப் பிடிப்பதன் ஊடாக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று நினைப்பவர்கள்.
என்று இரண்டு வகைப் போக்குடையவர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றனர். தற்போது ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு என்ற பெயரால் சில இயக்கங்கள் இணைந்து செயற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றோம். நாங்கள் திராவிடர் விடுதலைக் கழகம், கோவை இராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடக் கழகம், மே 17 இயக்கம், மணியரசன் தலைமையிலுள்ள தமிழ்த் தேசியப் பேரியக்கம், தியாகுவின் இயக்கம். தமிழ்ப் புலிகள் என்னும் அமைப்பு, இவை போன்ற அமைப்புகள் என இவை அனைத்தும் இணைந்து தான் இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இருந்தாலும் இங்கு மத்திய அரசு அதாவது பாஜக அமைந்த பின்னால், அவர்களால் பறிக்கப்படுகின்ற உரிமையும், மக்கள் மீதான பல கல்வித் தடைகள், வணிகத் தடைகள், வேளாண்மைக்கான இடையூறுகள் போன்றவை பற்றி போராடுவதில் கூர்மைப்பட்டு நிற்கிறோமே தவிர இதில் போதியளவில் இல்லை. ஈழத்தில் ஒரு சில சிக்கல்களுக்காக காணாமல் போனோர், பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சூட்டுச் சம்பவம் பற்றி வரும் போது அதற்கு ஆதரவான போராட்டம் மட்டும் தான் இங்கு சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இணைந்திருக்கின்ற இயக்கங்கள் தங்களுக்கான செயற்திட்டங்களை ஒருபக்கம் வைத்துக் கொண்டும் இன்னொரு பக்கம் கூட்டமைப்பு அழைக்கும் போது அங்கு வந்து செயற்படுகின்ற தன்மை கொண்டவாறே இப்போது நடக்கின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த கூட்டமைப்பு முன்னெடுப்புகள் தற்போது இல்லை என்று தான் கூற வேண்டும்.
கேள்வி
தமிழ் தேசிய விடுதலைக்கான அமைப்புக்கள் ஈழத்தமிழ் அகதிகளின் மேம்பாட்டிலும் அவர்களின் விடுதலை வேட்கையை தக்க வைப்பதிலும் ஏதாவது முயற்சிகளை மேற்கொண்டுள்ளனவா?
ஐ.நா.வின் அகதிகள் பற்றிய சட்டத்தை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு நாங்கள் சில முன்னெடுப்புக்களை நடத்திக் கொண்டிருக்கின்றோம். அதில்லாமல் சிறப்பு முகாமில் அவதிப்படுகின்ற அந்தத் தோழர்களைப் பற்றி அங்கு ஏதாவது பட்டினிப் போராட்டம் எடுக்கப்பட்டால், அதற்கு ஆதரவான குரல்களும், சுவரொட்டிப் பரப்புரைகளும் தான் நடக்கின்றது. முழு ஈடுபாட்டோடு நடைபெறுகின்றது என்று சொல்வதற்கில்லை.
கேள்வி
தமிழ் நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் தமிழ் தேசிய விடுதலைக்கான வரமா? சாபமா?
முகாம்களில் வாழ்கின்ற மக்களின் துயரங்கள் ஒருபக்கம், சிறப்பு முகாமில் அல்லல்படுகின்ற மக்களின் துயரங்கள் ஒருபக்கம். இதில் சிறப்பு முகாமில் இருக்கின்றவர்கள் பற்றித் தான் அக்கறை காட்டப்படுகின்றது. அதற்கான சில முன்னெடுப்புகளும், போராட்டங்களும், அதிகாரிகளை அணுகுவதும், அரசை அணுகுவதுமான செயற்பாடுகள் நடக்கின்றனவே தவிர, வெளியில் வாழ்கின்ற முகாம்களைப் பற்றி போதிய அக்கறை இப்போது காட்டப்படவில்லை என்பது உண்மை தான்.
கேள்வி
ஈழத்தமிழ் அகதிகளின் துயரை ஓய்வுபெற்ற இந்திய உயர்நீதிமன்ற நீதியரசர்களை கொண்ட சுயாதீன ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்து இந்திய அரசுக்கும் ஐக்கிய நாடுகள் அவைக்கும் சிபாரிசுகளை வழங்க முடியும் எனும் கருத்துக்கு எப்படி செயல்வடிவம் கொடுக்கலாம் என நினைக்கிறீர்கள்?
இங்கிருக்கும் சட்டச் சிக்கல்கள் அதில் இணைந்திருக்கின்றன. இப்போது இந்தியாவிலிருக்கின்ற சட்டங்களின்படி வங்கதேசத்திலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும், இலங்கையிலிருந்தும் வந்திருக்கின்ற அகதிகளை சட்டவிரோதக் குடியேறிகள் என்ற அடையாளத்தோடு தான் வைத்திருக்கிறார்கள். திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களை மட்டும் தான் அகதிகள் அந்தஸ்தோடு வைத்திருக்கின்றார்கள். இந்த 3 சட்டவிரோதக் குடியேறிகள் என்ற நிலைப்பாட்டிலிருந்து மாற்றி அவர்களும் அகதிகள் என்று எடுத்தாலே ஒழிய இப்படிப்பட்ட குழுக்கள் எவ்வித பயனையும் ஏற்படுத்தாது.
தற்போது வங்கதேசத்திலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் வந்தவர்களைப் பற்றி தனியான கணக்கெடுப்பு, குடியுரிமையை இரத்துச் செய்வது பற்றி சட்டங்கள் அதிக கவனத்தை ஈர்த்தவையாக உள்ளன. இப்போது அதற்கெதிரான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இவர்களால் தான் ஈழத் தமிழ் அகதிகளும் சட்டவிரோதக் குடியேறிகள் என்ற நிலைப்பாட்டில் தான் வைத்திருக்கிறார்கள். அது ஒரு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, இந்தமுறை சட்டமன்றத்திற்குச் சென்றிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழியாக குரல் எழுப்பப்படுகின்றது. ஈழ அகதிகளை சட்டவிரோதக் குடியேறிகள் என்ற நிலைப்பாட்டிலிருந்து எடுத்துவிட வேண்டும். இவர்களையும் அகதிகளாக கருத வேண்டும் என்றும் கோரப்படுகின்றது. அதற்குப் பின்னால் தான் நாங்கள் அது பற்றி போராட வேண்டும். தற்போது சட்டத் தடை ஒன்று இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குரிய செயல்வடிவம் கொடுப்பது என்பது இந்த வகைப்பாடு மாற்றத்திற்கு பின்னால் தான் செய்ய முடியும்.
நன்றி – இலக்கு