யாழ்.மேல் நீதிமன்றின் இன்றைய கட்டளை மூலம் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை என மனு தாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு நீதிப் பேராணை மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.
”எம்மால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக அரச சட்டத்தரணிகளின் விசேட அணி ஒன்று கொழும்பில் இருந்து வந்து முன்னிலையாகி இருந்தனர்
எங்களுடைய விண்ணப்பம் தொடர்பில் அவர்கள் பூர்வாங்க ஆட்சேபனையை தெரிவித்தனர். அதாவது வடமாகாண மேல் நீதிமன்றில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை என்று.
இந்த வழக்கானது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டது எனவும், இவ்வாறான வழக்குகளை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றிலையே தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறி இந்த வழக்கினை இந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ள முடியாது என அவர்களால் தெரிவிக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையின் அடிப்படையிலையே இந்த வழக்கு விளகப்பட்டது. அது தொடர்பில் மாத்திரமே மன்றினால் கட்டளை ஆக்கப்பட்டு இருந்தது.
அந்த கட்டளையில் மன்று தெரிவித்திருப்பது, இந்த வழக்கின் விடயப் பொருள் தேசிய பாதுகாப்புடன் தொடர்பு உடையது என்பதனால் தமக்கு அதிகாரம் இல்லை என சொல்லியிருக்கிறது. அதனை தவிர வேறு எந்த விடயமும் கட்டளையாக்கப்படவில்லை.
சிலர் கருத கூடும் இந்த கட்டளையானது நினைவேந்தலுக்கு தடையாக உள்ளது என அவ்வாறு எந்த தடையையும் மேல் நீதிமன்று விதிக்கவில்லை.
எமது மனுவில் எதிர் மனு தாரர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எமக்கு தடை விதிக்க கூடாது என்றே கோரி இருந்தோம். எமது மனு மீதான விசாரணை எதிர் மனு தாரர்களின் பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டதே தவிர நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை ”என்றார்.
அதேவேளை மேல் நீதிமன்றினால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில், இது ஒரு வரலாற்று தீர்ப்பு எனவும், புலிகளை நினைவு கூறும் எந்தவொரு நிகழ்வையும் பொலிசார் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.