நாம் வாழும் புவி இயற்கையாக தோன்றிய ஒரு கோள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அக்கோளும், அதனைச் சூழந்துள்ள இயற்கையான காரணிகளும் மனித வாழ்வுக்கு உதவுகின்றது என்று சொல்லமுடியும். எனினும் மனிதனின் செயற்கைத்தனமான, நான் வாழவேண்டும் என்ற தவறான எண்ணக்கருத்துடனான செயல்பாடுகள் பிறமனிதர்களை சிக்கலான வாழ்வுக்குள் தள்ளிவிடுகின்றது. எனது நிலம், எங்களது உரிமை, இவர்கள் எதிரிகள் என்ற ஒரு சிலரின் திட்டமிட்ட கருத்தூட்டல்கள் உலகில் பல குழப்பங்களை உருவாக்குகின்றன. அக்கருத்துகளும் ஒருவன் தான் வாழ அல்லது தன்னைச் சுற்றியுள்ள குறித்த குழுமம் வாழக் கண்டுபிடித்த வழியாகவே இருக்கின்றது. இதற்காக ஏனையவர்களுக்கு எந்தத் துன்பத்தையும் விளைவிக்க அவர்கள் தயாராக இருப்பார்கள்.
இதேவேளை இயற்கையும் ஒரு நியதியை வைத்திருக்கின்றது. துன்பங்களை விளைவிக்கும் மனிதர்களையும் உருவாக்கி அவர்களிடம் மக்கள் படும் துன்பத்திலிருந்து விடுவிக்க புதிய தலைவனை உருவாக்கும். இதற்கு உதாரணமாக புவியில் தோன்றி மக்களை வழிநடத்திய இயேசுபிரான், ஞானிகள், யோகிகள், மன்னர்கள், போன்றவர்களைக் குறிப்பிடலாம். ஆனால் அது காலத்தின் கட்டாயம் அல்லது மக்களின் வாழவுத் தேவை என்ற அடிப்படையில் மாறியிருக்கின்றது. அமைதிவழிகள் பொய்த்துப்போக மாற்றுவழிகள் தேடப்பட்டுள்ளன. கையாளப்பட்டுள்ளன. போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. புரட்சிகள் மலர்ந்துள்ளன. மன்னர் ஆட்சிகள் போய் மக்களாட்சி, சமவுடமை அல்லது இரண்டும் கலந்த ஆட்சிகள் தோன்றியுள்ளன. அனைத்து மன்னர்களும் கொடிய ஆட்சி புரிந்தவர்களும் அல்ல, அதேபோல புரட்சிகளால் விளைந்த மக்களாட்சியும் முற்றுமுழுதாக மக்களுக்கு நன்மை கொடுத்தது எனச் சொல்லமுடியாது. நடைமுறையில் இன்னல் படும் மக்கள் அதிலிருந்து தங்களை விடுவிக்க தங்களுக்கு ஆதரவாக நிற்பவர்களின் பின் அணி திரள்வார்கள். இதனைப் பயன்படுத்தி தங்களை வளர்த்தவர்களும் உண்டு. மக்கள் வாழ வழி வகுத்தவரும் உண்டு. ஈழத்தமிழினம் இடர்படுவதை உணர்ந்து அவர்களைக் கரைசேர்க்க என்று பலர் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் இறுதி இலக்குவரை தங்களை நகர்தினார்களா அல்லது தமிழ்மக்களைப் பயன்படுத்தி தாங்கள் நன்மை கண்டார்களா என்பதும் இங்கு சிந்திக்கப்படவேண்டியது.
மேலைநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பின்பு ஈழத்தமிழினம் மத்தியில் தோன்றி, மக்களின் நெருக்கடிகளை உணர்ந்து, அவர்கள் பட்ட துன்பங்களை நேரடியாக கண்டு, அவர்களுக்கான இலக்கினை உறுதிசெய்து, இறுதிவரை அந்த இலக்கிலிருந்து மாறாது விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், தன்னை நம்பிய தமிழ் மக்களையும் வழிநடத்திய மாபெரும் தலைவராக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைக் குறிப்பிடலாம். இவரை விரும்புவோரும் உண்டு. விரும்பாதவரும் உண்டு. ஆனால் இவரை ஏற்றுக்கொண்டவர்களை விட இவரை எதிர்க்கின்றோம் என்று தங்களை இனம்காட்டியவர்கள் ‘பிரபாகரன்’ என்ற பெயரின் மூலம் பெற்ற நன்மைகள் அதிகம் எனலாம். ஒரு இனம் சிறப்புடன் வாழ உழைத்தவர்களை உலக எதிரிகளாக இனம்காட்டி ‘எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம்’ என்று பயன்பெற்றவர்கள் பலர். மேலும் தன்னை ஒரு உயர் மனிதனாக அல்லது தலைவனாக காட்டுவதற்காக செயற்படுகிறார் என்று சொன்னவர்களும் உண்டு. ஒரு இனத்தின் தேவைகளை புரிந்து கொள்ளாது, தான் வாழும் முனைப்புடன், பிறருக்காக அல்லது ஆட்சியாளருக்காக பயன்பாட்டு நோக்கில் முதுகு தடவல் கருத்துச் சொல்வோர் முன்னே, வாழந்தாலும் வீழந்தாலும் அது என்மக்களுக்காக என்று தன்னை வெளிக்காட்டிய தனித்தன்மையான ஒரு தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். தமிழின வரலாற்றில் பல மன்னர்கள் பெயர்கள் உண்டு. இருப்பினும் இராச இராச சோழனுக்கு தனித்த இடமுண்டு. காரணம் அவரின் ஆற்றலால் செய்துமுடித்த செயல்கள். அதேபோன்று விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்கள் தமிழ்இனம், தமிழ்மக்கள், எங்களின் தனித்துவம், எங்கள் நாடு என்பவை மக்கள் மனதில் உறுதியாகப் படிய உழைத்தவர் என்பது மட்டுமல்ல உண்மையான விடுதலை விரும்பிகள் மத்தியில் என்றும் மறக்கமுடியாத பெயர் என்பதற்கு மாற்றுக்கருத்துகள் இருக்கமுடியாது.
ஈழத்தமிழினம் அதிலும் யாழ்ப்பாண சமூகம், கல்வியால் உயர்ந்த சமூகம், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம், கல்வியே கண் என்று வாழும் சமூகம் என்ற மாபெரும் மாயைக்குள் சிக்கியுள்ள ஒரு குழுமம். மேலும் அதனைப்பொய் என உணராது எல்லோரையும் நம்பவைக்கும் சமூகம் என்று உறுதியாகச் சொல்லலாம். காரணம் ஒருவன் கற்ற கல்வி அவனின் சமூகத்துக்கு பயன்படவேண்டும். தான் கற்ற கல்விமூலம் தன் சமூகத்துக்கு உதவவேண்டும். அந்த சமூகத்தின் வாழக்கைநிலை உயர்த்தப்பட்டிருக்கவேண்டும். ஈழத்தமிழினம் தான் கற்ற கல்வியால் இதுவரை சமூகத்துக்காக சாதித்தது என்னவென யோசித்துப் பார்க்கவேண்டும். தனி மனிதனின் வாழ்வை சிறப்பிக்கத்தான் கல்வி எனின் அந்தக் கல்வியால் பயன் எது?. அந்த மனிதனின் சமூகப்பயன்பாடுதான் என்ன?. நாங்கள் மனிதப் பிறப்பெடுத்தது படித்து வேலைக்குச் சென்று யாருக்கோ அடிமையாக வேலை செய்யவா?
தேசியத் தலைவர் அவர்கள் பள்ளிக்கல்வியில் சிறக்கவில்லை அல்லது அதனில் அக்கறை செலுத்தவில்லை. ஆனால் உலகியல் அனுபவங்களை கூறும் நூல்களை விரும்பி ஆழ்ந்து கற்றிருக்கின்றார். மக்களுக்காக போராடியவர்களின் வரலாறுகளை தேடி அறிந்திருக்கின்றார். அருகிலுள்ள நாடான இந்தியாவில் உதயமான தலைவர்கள் மகாத்மா காந்தி, சுபாசு சந்திரபோசு, பவகத் சிங் ஆகியோரையும், தமிழ் மன்னர்கள் வரலாறுகள் என்பவற்றுடன் மகாபாரதம் நூலையும் தெளிவாகப் படித்திருக்கின்றார் என்று போரும் சமாதானமும் என்னும் நூலில் (பக்கம் 48) அன்டன் பாலசிங்கம் அவர்கள குறிப்பிடுகின்றார். இந்த அடிப்படையில் எமக்குப் பொருத்தமான வழி என்ன என்பதை தெரிவு செய்திருக்கின்றார். போராட்டத்தில் கொண்ட நாட்டம் அவரை வீட்டில் வாழமுடியாத சூழ்நிலைக்கு தள்ளியிருக்கின்றது. தனித்திருத்தல், ஒளித்திருத்தல், பட்டினியாய் இருத்தல் என்பன அவரது வாழ்வியலாகியது. இக்கட்டுரை எழுதும் நான் அவரைக் கண்டதும் இல்லை, பேசியதும் இல்லை, விடுதலைப்புலிகள் தலைவர் என்பதற்கு அப்பால் எதுவும் தெரியாது. ஆனால் அவருடன் நெருங்கிப் பழகிய பலரைக் கண்டிருக்கின்றேன். பேசியிருகின்றேன். ஒருமுறை விசுவமடுப் பகுதியில் ஒருவரின் தோட்டத்திற்குள் சென்றிருந்தேன். பலசேதிகள் சொன்ன அவர் முக்கியமாக சொன்ன செய்தி இது. தலைவர் மிதித்த மண் தனது காணி என்பதுதான். இது இந்திய இராணுவம் வடபகுதியில் இருந்த காலத்தில் (1987 – 1990) நடந்த ஒன்று.
எப்போது வருகிறார். எப்போது போகிறார் என்பதெல்லாம் தெரியாது. உணவுகூட கேட்க மாட்டார். அவரும் சமைப்பதில்லை. காரணம் புகையைக் கண்டால் இராணுவம் மோப்பம் பிடிப்பார்கள். பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டு பசியைப் போக்கிக்கொள்வார். எந்நேரமும் கையில் ஒரு புத்தகம் வைத்துப் படிப்பார். தன்னை முன்பே தெரிந்தமையால் தனது தோட்டத்துள் வந்து இருப்பார். சிலவேளைகளில் தேவையானவை எதனையும் கேட்டால் செய்து கொடுப்பேன் என்றார். எனவே தன்னையும், விடுதலைப் புலிப்போராளிகளையும் எதிரிகளிடம் சிக்காது காப்பதில் மிகவும் சிரத்தை எடுத்த அல்லது சிரத்தை எடுத்து வாழவேண்டிய நிலையில் இருந்த ஒரு தலைவர் விடுதலைப்புலிகளின் தலைவர் எனலாம். மேலும் தலைவரின் நம்பிக்கைக்கு உரித்தான அதே நபர் கூறிய இன்னொரு செய்தியும் உண்டு. வன்னிப்பிரதேசம் முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் பூரணமான வழிநடத்தலில் இருந்த காலத்தில் மேற்கூறிய மனிதர் ஏதோ சிக்கலில் மாட்டிக்கொண்டார். இதனால் விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினர் அவரை மாறிமாறி விசாரணைக்கு அழைப்பதும் ஒரு நாள் முழுக்க காக்க வைப்பதுமாக துன்பப்படுத்தினார்கள். அந்த வேளையில் ஒருமுறை நான் அவரிடம் கேட்டேன், உங்களுக்குத்தான் தலைவரைத் தெரியுமே, அவருக்கு ஒரு கடிதம் எழுதி உங்கள் நிலையை சொல்லலாமே என்றேன். அதற்கு அவர் கூறிய பதில் “அவர் எவ்வளவு சிக்கல்களை கடந்து வந்தவர் என்றதை நான் நேரிலேயே தெரிஞ்சவன். மக்களுக்காக அவர் போராடினார், நானும் உதவினன். மக்களுக்காக வேலை செய்யிற ஒருவரிட்டைப் போய் என்னுடைய சொந்த நன்மைக்காக உதவி கேக்கிறது கேவலம் எண்டு நான் நினைக்கிறன். அதைவிட இது எனக்கு வந்த தனிப்பட்ட சிக்கல். நானே முகம் கொடுத்து வெற்றி காணவேணும் அதுதானே சரி. அவருக்கு இருக்கிற பிரச்சினையளுக்கை நாங்களும் எங்கட அற்பத்தனங்களோட அங்கை போறது அறிவுகெட்ட தனம் எல்லோ. என்னுடைய பிரச்சினையை நானே முடிப்பன்” என்றார். போராட்டத்துக்காக செய்த உதவியை ஒருபோதும் தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தக்கூடாது என்ற உறுதி அவரிடம் இருந்தது.
ஈழத்தின் வரலாற்று வழியில் தமிழீழத் தேசியத்தலைவர் போன்ற ஒரு தலைவர் முன்னர் இருந்ததாக இல்லை இனியும் எக்காலத்தும் தோன்றுவது ஐயமே. நாலு புத்தகம் வாசிக்கத்தெரிந்தவர்கள், அதன்மூலம் கொஞ்சம் எழுதத் தெரிந்தவர்கள் அவரை விமர்சிக்கத் தவறவில்லை. உலக ஓட்டத்தைப் புகழ்ந்து, விடுதலைப் புலிகளை இகழ்ந்து கருத்துகளை அடுக்கியுள்ளனர். நாம் ஒரு இனத்தின் பங்காளிகள். எங்கள் இனத்தை இகழக்கூடாது என்ற எண்ணம் கூட அவர்களிடம் இல்லை. தனித்த ஒருவனாகத் தோன்றி நீண்ட வரலாறு கொண்ட ஒரு இனத்தினை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்ற ஒரு மாபெரும் மனிதரை சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்வது கடினம்தான். ஈழத்து அரசையும், அயல் நாடுகளையும், உலகப் போக்கினையும் புகழுவோர் விடுதலைப்புலிகளின் அரசியல் மாறியபின் ஏறத்தாழ பத்தாண்டுகள் கடந்த நிலையில் அரசிடமிருந்தும், உலக நாடுகளிடமிருந்தும் கிடைத்த நன்மைகளை பட்டியலிட்டுப் பார்க்கலாம். தமிழ் மக்களிடையே தேவையற்ற விரோதங்கள் பெருகியுள்ளன. ஆளையாள் அடித்துக்கொல்லும் அல்லது வெட்டிக்கொல்லும் நிலை வளர்ந்துவிட்டது. போதை பெருகுகின்றது. உழைத்து வாழ்ந்த காலம் போய் பிறர் பணத்தில் தங்கி வாழும் நிலை வளர்ந்துவிட்டது. ஒரு இனத்தின் வீழ்ச்சிக்கு இதனைவிட என்ன நுட்பங்களை உட்புகுத்தவேண்டும்.
தனித்து ஒருவனாய் போராடப் புறப்பட்டு, கொள்கையால் போராளிகளை இணைத்து, பிறரிடம் சிக்காமல் அமைதியாய் விடுதலை இயக்கமாக வளர்த்து எடுத்து, கொரில்லா முறையில் ஆரம்பித்து பல்வேறுபடைகள் கொண்ட அணியாக உருவாக்கிய ஒரு தலைவன். அத்துடன் நிற்கவில்லை போராட்ட காலத்தில் மக்களையும் ஊக்குவித்து இயற்கையை பேணும் வழிமுறைகளுடன், மக்கள் சிக்கல்கள் இன்றி வாழ அரசியல், காவல் கட்டமைப்புகள். நிர்வாக ஒழுங்கமைப்புகள், கலை, கலாசார, பண்பாடு பேணும் அமைப்புகள், இசை, நாடக, எழுத்தாற்றல் வளர்ச்சிகள், விவசாய ஊக்குவிப்புகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று ஒரு இனத்தின் வளமான நிலைப்புக்குத் தேவையான பன்முக வளர்ச்சிகளையும் போர்க்காலத்தில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திய ஒரு தலைவன் இவரைவிட வேறு யாரும் இருக்க முடியாது.
ஒரு இனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவனை அவரை எதிர்க்கும் அரசும், அதனுடன் இணைந்த அரசுகளும் பயங்கரவாதி என்று சொல்வது எந்தவகையில் சரியானது. அத்துடன் மக்களின் விடுதலை பெற்ற வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்தவர்களை எப்படி பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க முடியும். இந்தக்கேள்வியை யாரும் கேட்கமாட்டார்கள். காரணம் எங்கள் சுயநன்மை ஒன்றே குறிக்கோளாக நாம் வாழ்கின்றோம். ஒரு நாட்டில் உயிரச்சம் இன்றி வாழமுடியுமெனில் அந்த நாட்டிலிருந்து ஏன் மக்கள் ஓடவேண்டும். எங்களுக்காக வந்த தலைவனை இந்த உலகம் திட்டமிட்டு அழித்துவிட்டது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தை காக்க பல அரசுகள் ஒன்று சேரமுடியுமெனின் ஒரு இனத்தைக்காக்க ஏன் பலர் ஒன்று சேர முடியாது. அதனை கட்டிக்காக்க ஏன் ஒரு தலைவன் இருக்க முடியாது.எங்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டாம் என்றே மாவீரர்கள் போராடினார்கள். இலக்கின்றி யாரும் போராடவில்லை. இலக்கின்றி பயனிதால் அது ஒருவேளை பயங்கரவாதமாக இருக்கலாம். எமக்குப் பக்கபலமாக யாரும் இன்மையால் எப்போதும் எமது நிலை இரண்டாமிடம் தான். இன்று தமிழர்களுக்காக உயிர் தந்து சென்ற மாவீரர்களையும் நினைக்கத்தடை வந்துவிட்டது.
ஆட்சியாளர்கள் புத்தனின் தத்துவத்தைக் கடைப்பிடித்திருந்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தியிருக்கவேண்டிய தேவை இருந்திருக்கமுடியாது என்று தலைவர் அவர்களே கூறியிருக்கின்றார். உலகில் வாழும் பறவைகள் தமது பசி தீர்க்க பழங்களை உண்ணுகின்றது. அவை உண்டு கழித்த எச்சம் அதிக தாவரங்கள் தோன்ற, பரம்ப உதவுகின்றது. தமிழர்களுக்காக தலைவரும், மாவீரர்களும் தமிழர்களுக்காக உறுதியாக விதைகளை நட்டவர்கள். அந்த விதைகளும் பரம்பிச் செழிக்கும்
- பரமபுத்திரன்