எம் வாழ்வு பொய்யாகி போனதே
ஈழ குழியொன்று கண்ணீரோடு பாடுதே
ஈர குலைநடுக்கமொன்று மனசோடு வாழுதே
இறந்த பின்னும் துடிக்கும் இதயம் என் நாடு தேடுதே
துடிக்கும் இதயம் எழுந்து அண்மாவை தேடுதே
அம்மிக்கல்லும் அருந்ததி பெண்ணுமெங்கே
அப்பு ஆச்சி தந்த ஆசி மறைந்ததெங்கே
ஒடியல் கூழும் ஒழுக்க நெறியும் தொலைந்து போனதே
ஓட்டுவீடும் திண்ணை புரமும் அழிந்து போனதே
ஊமையாகி பாடும் இயக்கமில்லா புதைகுழிதான்
கனவோடு தேடும் உறக்கமில்லா சவக்குழிதான்
கிடுகிடுக்கும்இரும்பு பறவை எங்கள் தோழியா
குறையில்லா குண்டுமழை எங்கள் சொந்தமா
ஆர்ப்பரிக்கும் வான்வல்லூறு அடியில் உள்ளம் நடுக்குதே
எண்ணிடா மரண ஓலம் நெஞ்சை உருக்குதே
நெருஞ்சிக் காட்டிடை நடக்கும் பாதம் வலிக்குதே
நெடுஞ்சாலை ஒரத்தில் கண்கள் பனிக்குதே
நெஞ்சில் சுமை தாங்கி நாமும் நடந்தோம்
நெடுந்தூர வீதியிலே படுத்தே கிடந்தோம்
நெஞ்சம் பதை பதைக்க பதுங்கியிருந்தோம்
களைத்த நடைபிணமாய் இன்றும் வாழ்கின்றோம்
கஞ்சியின்றி உண்டி ஒட்டி காத்து கிடந்தோம்
கண்கள் வற்றி கண்ணீர் இழந்து சிலுவை சுமந்தோம்
கார்மேகம் மழைபொழிய வெள்ளத்தில் மிதந்தோம்
கருவண்டு எச்சம் கொட்ட உணவாகக் கொண்டோம்
காப்பழிகளில் சிதைந்த உயிர் எங்கள் சொந்தமா
காணமல் போன அங்கம் எங்கு கிடைக்குமோ
தமிழர் வாழ்வும் கிலியானதோ ஈழத்தில்
ஐயோ எமனின் வரவே உறவானது சோகத்தில்
ஊனள்ள உறவில்லா நிலையானதே பாவம்
இழவுச்சொல்லா சாவீடே எமதானதே துரோகம்
சுண்ணம் இடிச்சு கொள்ளி போட மகனில்லா சாபம்
ஈழமண்ணின் சொத்தானதே இதுவென்ன நியாயம்
எங்கள் நிலை மாற ஒரு வழியுமில்லையா
என் தாய்மடியில் நான் உறங்க உரிமையில்லையா
உயிர்பிரிந்தும் கண்ணீரில் பூக்கள் பூக்கும்தான்
எம்நிலையெழுதி ஈழத்தில் புதுயுகம் பிறக்கும்தான்
-நிலவன்