தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினை தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என பொத்துவில் முதல் பொலிகண்டி பேரியக்கம் அழைப்புவிடுத்துள்ளது.
தமிழர் தேசம் ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக சிங்கள தேசத்தின் இனவழிப்பிற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகிக்கொண்டே வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக 2006ம் ஆண்டு ஆரம்பித்த ஆக்கிரமிப்பு 2009ம் ஆண்டு அதியுச்சம் பெற்றது. இந்த இறுதியுத்தத்தின் போது 1,47,679 பொது மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை மறைந்த ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அவர்கள் புள்ளிவிபரங்கள் மூலம் ஆதர பூர்வமாக நிறுவினார். இறுதி ஆறு மாதங்களில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக்குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவித்துள்ளார். கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். மனிதகுல மாண்புகளின்றி குழந்தைகள் கூட பிடித்து சுட்டு கொன்றும், பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் கொலைசெய்யப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ITJP), தமிழ்ப்பெண்கள் “பாலியல் அடிமைகளாக” கையாளப்பட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட “பாலியல் வன்முறை முகங்கள்” பற்றிய விபரங்களை ஐ.நா.விடம் கையளித்தது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, தமிழர் தாயகத்தில் 90,000க்கும் மேற்பட்ட யுத்தமூல விதவைகள் உள்ளனர். மிகப்பெரும் மனித பேரவலத்துடனும், மனித உயிரிழப்புகளுடனும் யுத்தம் மௌனிக்கப்பட்டாலும், தமிழினத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்ந்த வண்ணமே உள்ளது. இவ்வாறு நீண்ட நெடிய காலமாக இனவழிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் எமதினதிற்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனித பேரவலம், தமிழினத்தின் மீதான இனவழிப்பின் ஆரம்பமோ முடிவுமோ அல்ல. நீண்ட தொடரான இனவழிப்பின் ஓர் அங்கமே. இத்தொடரான இனவழிப்பிலிருந்து எமதினத்தை பாதுகாக்க சர்வதேச நீதி பொறிமுறையின் மூலம் நீதி வழங்கப்படுவதுடன், மீள நிகழாது இருப்பதை உறுதி செய்ய சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் வடக்கு கிழக்கு தழுவிய சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும். இதற்கான ஆரம்ப புள்ளியாகவே தமிழ் மக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ஐஊஊ) விசாரணையை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். தமிழினத்தின் விடுதலைக்கான திறவுகோல் முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்தே மீண்டெழும் எனும் பொதுத் தளத்தில் ஒன்றிணைத்து பயணிக்க தமிழினம் இந்நாளில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.