புலம்பதிந்த தமிழர்களின் ஒருங்கிணைந்த பொதுவேலைத் திட்டத்தாலேயே இதனை முடிவுக்குக் கொண்டு வரலாம்
இலங்கைத்தீவில் பன்னிரு ஆண்டுகளாக, சிறீலங்கா முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனோநிலையை மாற்றாது, தனது அரசாங்கங்களின் மாறாத அரசியல் கொள்கையாகவும், ஈழத் தமிழர்களைப் பல வழிகளில் இனஅழிப்புச் செய்யும் திட்டங்களைச் சிறீலங்கா தனது அரசாங்கத்தின் செயற் திட்டங்களாகவும் தொடர்ந்து வருகிறது.
முள்ளிவாய்க்கால் உலக இனப்படுகொலை நினைவேந்தல் நாளான மே18இல், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவேந்தல் செய்யும் அடிப்படை மனித உரிமை, ஒன்று கூடுதலுக்கான அடிப்படை மனித உரிமை, மத வழிபாட்டு உரிமை என்பவற்றைச் சிறீலங்கா மறுத்துள்ளது. இதன்படி மனித உரிமைகள் வன்முறையைத் தொடரும் சிறீலங்காவின் இனஅழிப்பு மனோநிலை மாறாது தொடர்வதை உலகு தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
வெசாக்கையொட்டி வடக்கில் பௌத்த விகாரைகள் இருந்தனவென வவுனியா சபுமல்கஸ்கட விகாரை, கழடுகந்த விகாரை, யாழ்ப்பாணம் கதறுகொட விகாரை என மூன்று விகாரைகளுக்கு நினைவு முத்திரை வெளியிட்டு, நயினாதீவு ரஜ விகாரையை மையமாகக் கொண்டு வெசாக்தினக் கொண்டாட்டங்களை தமிழர் தாயகப் பகுதிகளில் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்து, ஒருநாடு அது சிங்கள நாடு, ஒரு மொழி அது சிங்கள மொழி என்னும் தனது சிங்கள இன வெறியையும், ஒரு மதம் அது பௌத்த மதம் என்னும் தனது பௌத்த மத வெறியையும் வளர்க்க முனையும் சிறீலங்கா, ஈழத் தமிழர்களின் அடிப்படை மனித உரிமையான காலமானவர்களுக்குக் கல்நட்டு வழிபாடியற்றும் அடிப்படை மனித உரிமையைக் கொரோனாப் பரவலைக் காரணம் காட்டி மறுத்து வருகிறது.
உண்மையில் சிறீலங்கா கொரேனா அச்சத்திற்காக அல்ல, தனது அரச அதிபர் மேலும் அவரது முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப் படுகொலைகளைச் செய்த படைக் குழுவினர் மேலும் அனைத்துலக சட்டங்கள் வழி விசாரணைகள் நடத்தி முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதி வழங்குமாறு ஈழத்தமிழ் மக்கள் உலக மக்களை நோக்கி எழுப்பும் சனநாயகக் குரலை, எழுப்பாதவாறு தடுத்து, அனைத்துலகக் குற்றங்களை இழைத்த அரச அதிபரையும், படையினரையும் பாதுகாப்பதே சிறீலங்காவின் நோக்காகவும், போக்காகவும் உள்ளது.
இதன் ஒரு அலகுதான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குரிய சின்னங்களைச் சிலைகளைச் சிதைத்தல் என்னும் சிறீலங்காவின் படைகளின் திட்டம். யாழ்.பல்கலைக்கழக போர் நினைவேந்தல் சின்னத்தை இவ்வருட ஆரம்பத்தில் சிதைத்து மகிழ்ந்த சிங்களப் படைகள் தற்போது முள்ளிவாய்க்கால் பொதுச் சின்னத்தைத் சிதைத்து அகற்றித், தங்கள் இன வெறியை வெளிப்படுத்தியுள்ளனர். கூடவே புதிதாக நடுவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த நடுகல்லையும் களவாடிச் சென்று எந்தச் சட்டத்தையும் மீறிச் சிங்கள பௌத்த இன மத வெறியை நிறைவு செய்வோம் எனவும் மீண்டும் உலகுக்கு நிரூபித்துள்ளனர்.
போர் நினைவுச் சின்னங்களைச் சிதைப்பதும், அழிப்பதும் அனைத்துலகக் குற்றம். இன அழிப்புக்குச் சமானமான முறையிலே தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். ஆனால் தனது ஈழத் தமிழின அழிப்பைத் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் தான் நிகழ்த்துவதை ஏற்றுக் கொண்டு வரும் உலகம், இதனையும் அவ்வாறே தனது இராணுவ சந்தை நலன்களுக்காக ஏற்றுத் தன்னைத் தண்டியாது அல்லது தண்டிப்பது போல கால இழுத்தடிப்புச் செய்யும் என்பது சிறீலங்காவுக்கு நன்கு தெரியும்.
ஆயினும் இத்தகைய செயல்கள் ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் மனதையே உறுதியின் உறைவிடமாக்குகிறது என்பதை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அறிக்கை தெளிவாக்கியுள்ளது.
அவர் தன்னுடைய அறிக்கையில் “உண்மையிலேயே தமிழர்களுடைய உணர்வுகளை, நீங்கள், இவ்வாறான நினைவுச் சின்னங்களை இடித்து அழிக்க முடியாது. நீங்கள் இடிக்கும் ஒவ்வொரு நினைவுச் சின்னமும் தமிழர்களுடைய மனங்களில் ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தும் சம்பவமாகத் தான் நான் பார்க்கிறேன். நீங்கள் எவ்வாறு தான் எங்களுடைய உணர்வுகளைத் தடுக்க முயற்சித்தாலும், நாங்கள் நடந்த எந்த விடயத்தினையும் மறக்க மாட்டோம். இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்த அநீதியையும் நாங்கள் மறக்க மாட்டோம். விசேடமாக இந்த வாரம் 2009ஆம் ஆண்டு எத்தனையோ ஆயிரக் கணக்கான உறவுகளை நாங்கள் இழந்திருந்தோம். அந்த உறவுகள், உயிரிழந்த திகதியோ உயிரிழந்த இடமோ எங்களுக்குத் தெரியாத நிலையிலே கூட அனைவரையும் நினைவு கூருகின்ற இடமாக அந்த நினைவுச் சின்னத்தினை நாங்கள் கடந்த வருடங்களில் பயன்படுத்தி இருந்தோம். நீங்கள் தமிழர்களுடைய உணர்வுகளை அழிப்பதற்கு வேறு புதிய வழிகளைத் தேட வேண்டும். ஏனென்றால், எங்களுடைய உணர்வுகளை உங்களால் அழிக்க முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் பார்க்கின்ற பொழுது, வட அயர்லாந்தில் 1974இல் பிரித்தானிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்துப் பேரினதும் மரணம் கொலையென இவ்வாரத்தில் பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, பிரித்தானிய இன்றையப் பிரதமர் பொரிஸ் யோண்சன் அவர்கள் வட அயர்லாந்து மாநிலச் சட்டசபைத் தலைவரிடமும், துணைத் தலைவரிடமும் மன்னிப்புக் கோரிய போது, தாங்கள் வரலாற்றில் நடந்தது எதையும் மறக்க மாட்டோம் என வட அயர்லாந்துக்கான செயலாளர் கூறியது நினைவுக்கு வருகிறது.
வரலாற்றை யாராலும் மறக்க வைக்க முடியாது. கடந்தகால வரலாற்றை அனுபவமாகக் கொண்டு, நிகழ்காலத்தை அந்த அனுபவத்தின் அடிப்படையில் பலப்படுத்தி, எதிர்காலத்தைப் புதுமையுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதே வாழ்க்கை. எனவே ஈழத் தமிழர்களின் போர்க்கால நினைவுச் சின்னங்களை அழித்தல் என்பது அவர்களின் வரலாற்றை அழிக்கும் பண்பாட்டு இன அழிப்பாகவும் அமைகிறது.
மேலும் சிறீலங்காவின் இத்தகைய நினைவுச் சின்னங்களையே அழிக்கும் இன அழிப்பை தமிழர் பிரதிநிதிகள் என நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் கண்டிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மிக உருக்கமான வேண்டுகோளையும் விடுத்துள்ளார். தமிழ் மக்களே அவர்களையும் தெரிவு செய்தார்கள் எனவும், அந்தத் தமிழ் மக்களின் உறவுகள், நண்பர்கள் தான் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள் எனவும், அவர்களின் நினைவுத் தூபிகளை முழு அளவில் பாதுகாப்பது பிரதிநிதிகளின் கடமை. எனவே தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் தொகுதிக்கான பிரதிநிதித்துவக் கடமையாக சிறீலங்காவைக் கண்டிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேலும் கோரியுள்ளார்.
அத்துடன் இன்றைய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடத்திற்குள்ளேயே தனது இறுதி ஊர்வலத்திற்கான பயணத்தைத் தொடங்கி விட்டது எனச் சாணக்கியன் மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் இந்த உறுதிக்குப் பக்கபலமாக உலக நீதியைத் துணை நிறுத்த வேண்டிய பொறுப்பு புலம்பதிந்த தமிழர்களுடையதாகிறது.
உலகம் சிறீலங்காவின் இந்த மாறாத முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு மனோநிலையை இனங் கண்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்கப் புலம்பதிந்த தமிழர்கள் ஒரு பொது வேலைத் திட்டத்தில் கால தாமதமின்றி இணைந்து, அழுத்தங்களை உருவாக்கினாலே சிறீலங்காவின் இன்றைய அரசின் இந்த இனஅழிப்பு மனோ நிலையை முடிவுக்குக் கொண்டு வரலாம். இதற்கான சரியான சனநாயகச் செயற்பாடுகளைச் சரியாகச் செய்தலை ஒவ்வொரு புலம்பதிந்த தமிழனும் தனது தாயகக் கடமையாக ஏற்றுத், தானும் பங்கேற்று தன் இளைய தலைமுறையையும் பங்கேற்ற வைக்க வேண்டும்.