முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில், இடதுகை மற்றும் மார்புகளை இழந்த கர்ப்பிணி மெனிக்பாம் முகாமில் குழந்தையை பெற்றபின் பாடிய தாலாட்டு..
கண்மணியை நோக்கி கண்ணீருடன்
கருவறையின் வேலிக்குள்ளிருந்து
கம்பி வேலிக்குள்
கண்மலர்ந்த கண்மணியே..
மனையான்று தானின்றி
மாதா இவள் தவிக்கையிலே
மழைவெள்ளக் கூட்டமது
மடைதிறந்து பாய்கையிலே
நலன்புரி நிலையமெனும்
அனல்சூழ் அரங்கத்திலே
வந்து பிறந்தாயே
வைர மணியே..
இருகைகள் இல்லையடா
என்னவனே உனைத்தூக்க
இடதுகை இழந்தேனடா
எறிகணை எனைத்தாக்க..
கருதந்த உன்னப்பா
காணாமல் போனதெங்கே?
ஒருதுணை தானின்றி
உயிர்வாழும் தாயிங்கே..
தோட்டத்துக் காவலென
சொல்லிபெருமை கொண்டவர்கள்
வேட்டுவைத்துக் கொன்றனரே
விழுதே உன் மூத்தோனை..
துக்கமும் கண்ணீரும்தவிர
சொல்லிட சொந்தமில்லை.
சுந்தரம் உனக்கு பாலூட்ட
என்னிடம் மார்பு இல்லை.
வன்னிப்போர் காலமதில்
மார்பிழந்த மங்கையருள்
மாதா இவளும்…
புட்டிப்பால் ஊட்டுகிறேன்
புதுமலரே சுவைத்திடடா
புதுக்காலம் பூக்குமடா
அதுவரையும் பொறுத்திடடா..
^^^^^^^^^^
யோ.புரட்சி,
மதியம் 02.05,
04.10.2009.