1956, 1958, 1975, 1977, 1983 எனத் தொடர்ந்த தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்று ராஜபக்சக்களின் பயங்கரவாத ஆட்சியில் இனச்சுத்திகரிப்பாக (கொரோனா பேரிடர் போன்று) வேகம் கொண்டுள்ளது.
தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற முக்கோட்பாட்டுடன் முப்பதாண்டுகள் தொடர்ந்த தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் உறைநிலை கண்டு பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
தமிழ் மக்களின் மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணசுத்தியான போராட்டம் முறிக்கப்பட்டதா அல்லது நிறுத்தம்கண்டதா என்ற கேள்விக்கு சில மேதாவிகள் இப்போது பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்காக மக்களால் முன்னெடுக்கப்பட்ட எந்தப் போராட்டமும் தோற்றுப் போனதாக வரலாறு இல்லை. 180 நாடுகளுடன் இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவம் கடந்த இரண்டு தசாப்தங்களில் 192க்கு வந்தது, எந்த நாடும் குட்டி போட்டதால் ஏற்பட்டதன்று. இனக்குழுமங்களின் இடைவிடாத விடுதலைப் போராட்டமே புதிய நாடுகள் உருவாகக் காரணமானது.
சனத்தொகையால் கூடுதலான ஓர் இனம், எண்ணிக்கையில் குறைவானவர்களை அடக்கி ஒடுக்க முனைந்ததன் விளைவை கடந்த எழுபது ஆண்டுகளாக இலங்கையில் காணமுடிகிறது. முதலில் தமிழர், பின்னர் இஸ்லாமியர், அடுத்து கிறிஸ்தவர்கள் என்று சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களை இன – மத ரீதியாக நசுக்கி ஒதுக்கும் பேரினவாத எதேச்சாதிகாரப் போக்கு முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் மேலோங்கி வருகிறது.
பிரித்தானியர்களிடமிருந்து இலங்கை விடுவிக்கப்பட்ட பின்னர் (இதற்கு சுதந்திரம் என்று பெயர்) முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனநாயக்க தூவிய விச விதை இன முறுகலுக்கு வழிவகுத்தது. காணி விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் தமது அரசில் சிங்கள இனத்தைக் காக்கும் கபட நோக்கத்துடன் தமது மகனான டட்லி சேனநாயக்கவை முதலாவது காணி அமைச்சராக நியமித்தார்.
பராக்கிரம சமுத்திரத்தை கிழக்கு நோக்கி திசைதிருப்பி கல்லோயாவில் தமிழருக்கு எதிரான முதலாவது நிலப்பறிப்பை இவரது அரசு அன்று ஆரம்பித்தது. பின்னர் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு மாதுறு ஓயா திட்டம் ஊடாக மட்டக்களப்பை அபகரித்தது. இன்று மகாவலி வலயம் என்ற பெயரில் வன்னியில் பெருநிலப்பரப்பு சூறையாட எத்தனிப்பு இடம்பெறுகிறது.
முல்லைத்தீவில் குருந்தூரில் ஆதிசிவன் கோவில் இருந்த பூர்வீக இடத்தை தொல்லியல் பிரதேசமாக்கி ராணுவம் புடைசூழ இங்கு பௌத்த வழிபாட்டுத் தலம் சில நாட்களுக்கு முன்னர் அத்துமீறி உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் பல விகாரைகளை அமைப்பதற்கு சீனா வழங்கிய பல நுர்று புத்தர் சிலைகள் கொழும்பு கிட்டங்கி ஒன்றில் காத்துக் கிடக்கின்றன.
டி.எஸ்.சேனநாயக்க, சேர்.ஜோன் கொத்தலாவல, எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, டட்லி சேனநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபாலசிறிசேன, கோதபாய ராஜபக்ச ஆகியோர் நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளாக வெவ்வேறு அரசியல் கட்சிகள் வழியால் நாட்டில் தலைமைப் பதவியை வகித்தார்களாயினும், முழு நாட்டையும் சிங்கள பௌத்தமாக மாற்றும் விடயத்தில் இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இருக்கவில்லை.
நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் முக்கிய அமைச்சராகவிருந்த சஜித் பிரேமதாச, வடக்கு கிழக்கில் நூற்றுக்கணக்கான பௌத்த விகாரைகளும் தம்ம பாடசாலைகள் எனப்படும் பௌத்த மதபோதனைக் கூடங்களும் அமைக்கப்படுமென்றார்.
கடந்த தேர்தலில் ஆட்சி மாறியதாயினும் சஜித் பிரேமதாசவின் திட்டம் ராஜபக்சக்களினால் செம்மையாக நிறைவேற்றப்படுகிறது. முள்ளிவாய்க்கால் என்று எண்ணும்போது, தமிழர் நில அதிகரிப்பு முதன்மை பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. நிலம் என்பது வெறுமனே உள்நாடு என்பதாகவின்றி அதனோடு இணைந்த கடற்பரப்பும் கொள்ளையிடப்படுகிறது.
இலங்கை ராணுவத்தின் எண்பது வீதமானவர்களும் முள்ளிவாய்க்கால் உறைநிலைக்குப் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் குடியேற்றப்பட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கென அபகரிக்கப்பட்ட தமிழர் காணிகள் படையினரின் குடும்பங்கள் வாழும் இடமாகவும், தமிழரின் விவசாய உற்பத்திப் பொருட்களை சூறையாடும் களமாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
2009ல் ஆரம்பமான ஜெனிவா தீர்மானங்கள் வெறும் தீர்மானங்களாகவே இழுத்தடிக்கப்படுகின்றன. காலத்தை ஓடச்செய்து அவற்றை நீர்த்துப் போகச் செய்யலாமென்ற தந்திரோபாயம் தெரிந்த சிங்கள தேசம், தீர்மானங்களை காலத்துள் கரைத்துவிட முயற்சிக்கிறது.
ஜெனிவா போர்க்குற்றச்சாட்டிலும் பொறுப்புக்கூறலிலும் அகப்பட்டுவிடக் கூடாதென்பதில் கோதபாய ஆட்சி மிகக்கவனமாக உள்ளது. ஜெனிவா குத்திக்காட்டும் போர்க்குற்றவாளிகள் தாங்களே என்பதை இவர் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர்.
தமது கைககள் நந்தி;க்கடலில் இரத்தம் தோய்ந்தவையென வெற்றி இறுமாப்புடன் கூறும் கோதபாய, அதனையே தமது தேர்தல் வெற்றிக்கான அடையாளமாக சிங்கள பௌத்தர்களுக்குக் காட்டி பெருமைப்படுகிறார். தம்மை எதிர்க்கும் சிங்கள அரசியல்வாதிகளை பயமுறுத்தவும் அந்த செந்நிறக் கைகளையே பயன்படுத்துகிறார்.
முள்ளிவாய்க்கால் உறைநிலை கண்;ட போர்க்காலத்தில், ஜனாதிபதியாக மகிந்தவும் பாதுகாப்புச் செயலாளராக கோதபாயவும் ஆட்சிபுரிந்த பத்தாண்டுகள் தமிழினப் படுகொலையின் உச்சக்காலம்.
செகுவேரா என்ற ஜே.வி.பி.யின் ஆயுதப்புரட்சி இடம்பெற்ற 1971 ஏப்ரலில் இலங்கை ராணுவத்தில் இணைந்த கோதபாய ராஜபக்ச, வடமராட்சி ஒபறேசனில் பிரதான பங்கு வகித்தவர். மணலாறு என்ற தமிழ் மண்ணை வெலிஓயா எனப் பெயர் மாற்றியபின் இங்கு ராணுவ இணைப்பதிகாரியாகவிருந்து சிங்களவர்களை குடும்பம் குடும்பமாக குடியேற்றியவர். 1987 – 1989 ஜே.வி.பி.யின் இரண்டாவது தாக்குதல் காலத்தில் அவர்களில் பலரை கொலை செய்துவிட்டு 1991ல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா சென்றவர்.
இவரது இந்தப் பின்புலத்தை நோக்கின் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இன்று இவர் வகிக்கும் பதவிகளின் வழியாக மேற்கொள்ளப்படும் அனைத்து அத்துமீறல்களையும் புரிந்து கொள்ள முடியும்.
மொத்தத்தில், தாமும் தமது சகோதரர் மகிந்தவும் போர்க்குற்றங்கள் என்ற வளையத்துக்குள் அகப்பட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளார். அதற்கு ஏதுவாக, முள்ளிவாய்க்காலில் பொதுமக்களை அள்ளுகொள்ளையாக ஈன இரக்கமின்றி கொன்று குவித்த சவேந்திர சில்வா, கமால் குணரட்ன உட்பட முப்பதுக்கும் அதிகமான படைத்தரப்பினருக்கு உயர் பதவிகளை வழங்கி, சன்மானங்களை அள்ளிக் கொடுத்து அவர்களை ராஜபக்சக்களுக்கு அரணாக அமர்த்தியுள்ளார்.
இவர்களில் எவராவது ஜெனிவா விசாரணையில் அப்ரூவர்களாக (ஜெனிவா தரப்புச் சாட்சிகளாக) சென்றுவிடக்கூடாது என்பதில் முன்னெச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் வழங்கப்பட்ட பதவிகளே போர்க்குற்றம் புரிந்த படையினருக்கானது.
கோதபாய பிறந்த 1949ம் ஆண்டுக் காலத்திலேயே தமிழருக்கு எதிரான செயற்பாடுகளை சிங்கள ஆட்சிபீடங்கள் ஆரம்பித்தன. 1958ல் தமிழினவதை காலத்தில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அரசாங்கத்தில் கோதபாயவின் தந்தை டி.ஏ. ராஜபக்ச, பிரதிகாணி அமைச்சராகவும், பின்னர் காணி அமைச்சராகவும் பதவி வகித்து புதிய சிங்கள குடியேற்றங்களை தாம் விரும்பியவாறு மேற்கொண்டவர். அந்த மரபணுவில் வந்தவர் அதே பாதையில் பயணிக்கிறார்.
1956, 1958, 1975, 1977, 1983 எனத் தொடர்ந்த தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் – இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்று, ராஜபக்சக்களின் இன்றைய ஆட்சியில் இனச்சுத்திகரிப்பாக (கொரோனா பேரிடர் போன்று) வேகம் கொண்டுள்ளது.
தமிழர்களை அவர்களின் பூர்வீக வாழ்விடமான வடக்கு கிழக்கில்கூட வாழவிடாது – கொலைகள், கொள்ளைகள், சொத்தழிப்புகள், காணி பறிப்புகள், கலை – இலக்கிய பாரம்பரியங்களை அழித்தொழித்தல், பண்பாட்டு விழுமியங்களை நாசமாக்குதல் மூலம் பிறப்பால் உரிமையுள்ள ஓர் இனத்தை முழுமையாக அழிப்பதே இனச்சுத்திகரிப்பு (நுவாniஉ ஊடநயளெiபெ).
இறந்தவர்களை நினைவு கூருவது என்பது மத அனு~;டானங்களையும், பண்பாட்டு வழிமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டது. போர்களின்போது மரணித்தவர்களுக்கு நடுகல் நாட்டி தீபம் ஏற்றி வழிபாடு செய்வதென்பது காலந்தோறும் இடம்பெறும் மனித பண்பாடு. இதனை செய்வதற்கு மறுப்பவர்கள் நாகரிகமற்ற சமூகத்தினராகவே பார்க்கப்பட வேண்டியவர்கள்.
முள்ளிவாய்க்காலில் காணாமற்போன 146,000 மேலானவர்களுக்கு என்ன நடைபெற்றதென மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை எழுப்பிய கேள்விக்கு அவர் மரணித்த பின்னரும் பதிலளிக்க முடியாதவர்கள், மாவீரர் துயிலும் இல்லங்களை இடிப்பதாலும், அவர்கள் நினைவிடங்களில் தீபம் ஏற்ற தடைவிதிப்பதாலும் அவர்களை மக்கள் மனதிலிருந்து நீக்கிவிட முடியாது.
ஒற்றை நடுகல்லைக் கண்டு அஞ்சுபவர்கள் அதனை இரவோடிரவாக கடத்திச் செல்கின்றனர். சிலவேளை அந்த நடுகல் ஜெனிவா சாட்சியாகி விடுமென அச்சமாக இருக்கலாம். தங்களை ஆதிக்கவாசிகளாக மாற்றி மற்றையோரை அடக்கப்பட்டவர்களாக மதிப்பதன் பெறுபேறே இத்தகைய செயற்பாடுகள்.
தமிழின சுத்திகரிப்பும் தமிழ் மண் அபகரிப்பும் சிங்கள பௌத்த தரப்பின் ஆயுட்கால செல்நெறி. இதன் முக்கிய கட்டத்தில் ராஜபக்சக்களின் கைவரிசை ஓங்கி நிற்கிறது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் போர்க்குற்றவாளிகளான இவர்கள், நீதியையும் நியாயத்தையும் அதன் வழியான உண்மையையும் கால்களுக்குள் இட்டு நசுக்க முனைகின்றனர்.
உலகின் எங்காவது ஒரு மூலையில் ஒற்றைத் தமிழன் இருக்கும்வரை முள்ளிவாய்க்கால் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அதுவே ஈழத்தமிழரின் உரிமைக்கான அடையாளம்!