சர்வதேச அரசியலில் உயிரியல் ஆயுதத்தின் வருகை (Biological Weapon) அதிகம் நிலைத்திருப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்வு கூறல்கள் 2020க்கு பின்னர் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முன்னாள் சோவியத் யூனியனின் தலைமை நாடான ரஷ்யா தொடர்ச்சியாக 2020-21 களில் எதிரிகளை அச்சுறுத்தும் பாரிய ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தகைய ஆயுத பெருக்கம் எதிரி நாடுகளுக்கு மட்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது, உலகத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆயுதமொன்றை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் பிற்பகுதியில்;(30.04.2021) கருங்கடலில் பரிசோதித்திருந்தது. இது உலக யுத்தத்திற்கான முனைப்பினை ஏற்படுத்தும் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் , அடிப்படையில் உலக அதிகார சமநிலை ஆயுதங்களாலும் படைநகர்வினாலும் உறுதிப்படுத்தப்படுகின்றது என்பதை காணமுடிகின்றது. சர்வதேச அரசியல் கோட்பாட்டாளர்கள் முன்வைத்த யதார்த்தவாத கோட்பாட்டின் பரிமாணங்கள் தொடர்ச்சியான உலக அரசியல் போக்கை நிர்ணயிப்பதாக விளங்குகின்றது. இக்கட்டுயைம் ரஷ்யா தயாரித்த Super Weapon என அழைக்கப்படும் சுனாமி ஆயுதம் பற்றிய தேடலாக உள்ளது .
ரஷ்யா அண்மையில் பரிசோதித்த அணுவாயுத சுனாமி என்று அழைக்கப்படும் ‘super-weapon’ or Nuclear Tsunami or Poseidon giant torpedo’ எனும் ஆயுதத்தை வெற்றிகரமாக இராணுவத்தில் இணைப்பதற்கான நகர்வை ரஷ்யா ஜனாதிபதி புடின் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது. இவ்வாயுதம் கடலின் அடிப்பகுதியில் வெடிக்கவைப்பதனூடாக ரேடியோ அக்டிவ் சுனாமியை ஏற்படுத்தி ஏறக்குறைய 1000 மைல்களுக்கு அண்மித்த கரையோர பிரதேசங்களை சுனாமி அலைகள் மூலம் 500 மீற்றருக்கு மேலெழுச் செய்து அப்பிரதேசங்களை அழிவுக்குள்ளாக்கும் திறனுடைய ஆயுதமாக உள்ளது. ரஷ்யாவின் எதிரி நாடுகளின் கரையோர நகரங்கள் இராணுவ அரண்கள் , கடற்படை முகாம்கள் மற்றும் ஆயுத தளபாட உற்பத்தி மையங்கள் என பல்வேறுபட்ட பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளமுடியும் எனவும், இவை அணுக்கதிர்களினால் பாதிப்புக்குள்ளாக்க கூடிய நகர்வையும் ஏற்படுத்தும் ஆயுதம் என்றும் போரியல் வல்லுனர்கள் மதிப்பிடுகின்றனர்.
2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் உருவான சுனாமி ஏறக்குறைய 30 தொடக்கம் 40 மீற்றர் அலையின் உயர்வுகள் பாரிய அழிவை ஆசிய நாடுகளில் ஏற்படுத்தியது. அதனோடு ஒப்பிடும் போது ரஷ்யா தயாரித்த சுனாமி ஆயுதம் ஏறக்குறைய 500 மீற்றருக்கு எழுச்சிப்பெறும் என்று குறிப்பிடுவதன் ஊடாக இதன் அழிவை விளங்கிக்கொள்ளமுடியும். ஏறக்குறைய 2004 சுனாமியை விட 16 மடங்கு அலையின் உயர்ச்சியையும் விளைவையும் ஏற்படுத்தவல்லது என போரியல் வல்லுநர்களால் குறிப்பிடப்படுகின்றனர். இதனால் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளின் கரையோரமக்களும் அவற்றின் இராணுவ, பொருளாதார இலக்குகளும் ஆபத்துக்குள்ளாகின்றது. வெகுவேகமாக அணுக்கதிரியல் தாக்கமும் ஏற்படுத்தவல்ல ஆயுதம் என குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய ஆயுதத்தின் பதிலீடு பற்றியும் எதிர் நடவடிக்கை பொறிமுறையும் உலகத்தில் இன்னுமே எத்தகைய நகர்வையும் மேற்கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது, அணுவாயுதங்களையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ஏனைய அழிவுகளை உள்ளாக்கும் ஆயுதங்களை தடுக்கும் வழிமுறை உலகத்திடம் இருந்தபோது சுனாமி ஆயுதத்தை உலகத்தால் தடுக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நிச்சயமாக இத்தகைய ஆயுததினால் ரஷ்யாவின் இருப்பு மட்டுமன்றி உலகளாவிய ரீதியான போரியல் உபாயங்கள் மேலும் ஒரு கட்டத்தை நோக்கி நகர்வதற்கான நெருக்கடியை எதிர்க்கொள்ள ஆரம்பித்துள்ளது. இதனால் கடலின் நடுப்பகுதியில் இருந்து எழுந்து வரும் அலைகளை தடுப்பதற்கான பொறிமுறை ஒன்றை உலகம் தேடுவதென்பதும் கடினமானதொன்று. இதனால் ரஷ்யாவின் இவ்வாயுதம் உலகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை எற்படுத்தும் என போரியல் வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர் இதனால் உகக அரசியலில் எற்படுத்தபோகும் மாற்றங்களை இருதய நிலமாகிய ரஷ்யாவின் இருப்பையும் அளவிடுதல் அவசியமாகும் .
முதலாவது, ரஷ்யாவின் இராணுவ சமநிலை என்பது இத்தகைய சுப்பர் வெப்பன் ஊடாக முதன்மை நிலையை அடைந்துள்ளது. ரஷ்யாவின் போட்டியாளர்களால் அமெரிக்காவிடமோ, சீனாவிடமோ இத்தகைய வலுவான ஆயுதமின்மை மட்டுமன்றி அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் இன்மையினால், ரஷ்யா முதல்தர ஆயுத தேசமாக தன்னை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய இராணுவ வல்லமையும், அரசியல் ஆதிக்கமும் ரஷ்யாவின் கட்டுபாட்டுக்குள் வருவதற்கான சூழல் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இதை எதிரி நாடுகளும் இராணுவ ரீதியான உபாயங்களை முடிவுக்கு கொண்டுவந்ததோடு, இதற்கான பதிலீடுகளை தேடவேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளியுள்ளது.
இரண்டாவது, உலகளாவிய அதிகார சமநிலையில் சீனா, அமெரிக்கா, ரஷ்யா என்ற மூன்று நாடுகளும் அதிக போட்டியை கொண்டிருப்பதோடு, இதற்கான விளைவுகளை உலக நாடுகள் எதிர்நோக்கவேண்டிய நிலைக்குள் சுனாமி ஆயுதம் ஏற்படுத்தியுள்ளது. இது ரஷ்ய, சீன அணிகளுக்கிடையிலான ஒருங்கிசைவையும் மேற்குக்கு எதிரான வலுவான போட்டி தன்மையையும் எதிர்காலத்தில் ஏற்பட வழிவகுத்துள்ளது. இதனால் உலகம் பலதுருவ அரசியல் கட்டமைப்பினால் பனிப்போருக்கு பின் பின்னான காலப்பகுதியை கையாளும் பொறிமுறையொன்று உருவாகியுள்ளது. அவ்வகை பொறிமுறையில் ரஷ்யாவின் இராணுவ ரீதியான வளர்ச்சி பிராந்திய நகர்வை கடந்து உலகளாவிய வலுவை அடையக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது .
மூன்றாவது, சீனா பின்பற்றி வரும் மென்னதிகார கொள்கையும், உயிரியல் ஆயுதத்தின் பரவலும், ரஷ்யாவின் சுனாமி ஆயுதத்தின் மூலம் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலையை கட்டியெழுப்பும் , ஏறக்குறைய மேற்கு நாடுகளில் மென் அதிகாரம் பற்றிய வாதங்கள் முன்வைக்கப்பட்டபோது, அதனை நிராகரித்துக்கொண்ட அமெரிக்க ஆட்சியாளர்கள் சிமாட் பவர் (Smart Power) என அழைக்கப்படும் . வன்னதிகாரம், மென் அதிகாரம் இணைந்த ஒரு பொறிமுறையே உலக இருப்பிற்கு அவசியமானது என்ற ஒரு வாதம் ரஷ்யாவின் நகர்வினால் நிறுவகூடியதாக மாறியுள்ளது.
நான்கு, ரஷ்யா இருதயநிலம் என்ற அடிப்படையில் உலக அரசியல் தனது கட்டுபாட்டிலும் ஆதிக்கத்திற்குள்ளும் வைத்துக்கொள்ள தொடர்ச்சியாக முனைகின்றது. அதற்காகவே கடந்த காலங்களில் S 400 , கைப்பர்சோனிக் ஏவுகணை மற்றும் ஐந்தாம் தலைமுறை விமானங்களின் பரிசோதனை என பல பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தது. விளாடிமீர் புடின் ஆட்சிக்கு வந்தபிற்பாடு ரஷ்யாவின் இருப்பு மேற்குக்கு எதிராகவும், குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிராகவும் பலமான ஒரு இராணுவ சமநிலையை பிராந்தியங்களுக்கு அப்பால் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளவும் முனைகின்றது. விளாடிமீர் புடின் முன்னாள் கே.ஜீ.பி யின் தலைவர் என்பதனாலும், முன்னாள் சோவியத் யூனியன் காலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்தவர் என்ற அடிப்படையிலும் பலமான தலைவராக உள்ளார். அதேநேரம் ஒரு சர்வாதிகார தலைவராகவும் தன்னை வெளிப்படுத்தி வருகின்றார். ஆனாலும் ரஷ்ய வரலாற்றில் இத்தகைய தலைமைகளுக்கான வாய்ப்புகளும் நிலைத்திருத்தல்களும் தொடர்ச்சியான ஒன்றாகவே காணப்படுகிறது. புடின் ஒரு மகா பீட்டர் போன்றும், ஜார் மன்னன் போன்றும், ஜோசப் ஸ்டாலின் போன்றும் தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் என்று குறிப்பிட முடியும். இதனால் சுனாமி ஆயுதம் ரஷ்யா இருதயநிலத்தை மீளவும் உத்தரவாதப்படுத்த வழிவகுத்துள்ளது.
ஐந்தாவது இவையனைத்தும் இராணுவ ரீதியிலான அரசியல் ரீதியான பரிமாணங்களை குறிப்பிட்ட போதும் சுற்றுச்சூழலை அல்லது இயற்கையின் சமநிலையை முற்றாகவே பாதிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. கடலில் ஏற்படும் தாக்கம் என்பது அதிலும் குறிப்பாக அணுத்தாக்கம் என்பது அது பிரயோகிக்கப்படும் கடலை மையப்படுத்தி அதன் இயற்கை சமநிலையை உடைத்து அதனை சரிசெய்வது என்பதும் மீளமைத்தல் என்பதும் சாத்தியமற்ற பொறிமுறை இதன் பரிசோதனையே பாரிய அழிவை ஏற்படுத்திருக்கிறது.
எனவே, ரஷ்யாவில் சுனாமி ஆயுதம் உக்ரைன் போரைமட்டுமல்ல உலகத்தில் நிகழ இருக்கும் அனைத்து போரினை நெருக்கடிக்குள்ளாக்கும் உபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோவும் , அமெரிக்காவும், ஜீ 7 நாடுகளும், குவாட் நாடுகளும் சீனாவை பற்றி சிந்தித்திக்கொண்டிருக்க ரஷ்யா உலகத்தின் அச்சுறுத்தலை ஏற்படுத்த வல்ல தருணத்தை உருவாக்கியுள்ளது. மேற்குலகத்தின் அனைத்து போரியல் உத்திகளும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. எனவே சுப்பர் வெப்பனின் உலக வருகை போரியல் களத்தை புதிய திசைக்குள் நகர்த்த ஆரம்பித்துள்ளது. ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு உலகளாவிய இராணுவ சமநிலை அகப்பட்டுள்ளது.
பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்