தடை உடைப்போம், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீளக்கட்டுவோம், நினைவேந்தலை திட்டமிட்டவாறு நிகழ்த்துவோம் என்று வீரமுழக்கமிட்டவர்கள் மே 18 அன்று தாமாகவே தங்களை காணாமலாக்கி விட்டார்கள். வீடுகளுக்குள்ளும், வளவுகளுக்குள்ளும், கட்சி விறாந்தைகளிலும், நாடாளுமன்ற அறைகளுக்குள்ளும், சூம் வழியாகவும் தமிழின அழிப்பை நினைவேந்திய தமிழ்த் தேசிய தலைவர்களை முள்ளிவாய்க்கால் மண் எவ்வாறு மன்னிக்கும்?
தமிழினப் படுகொலையின் மூல அடையாளமாக இன்றுவரை நிலைத்து நிற்கும் முள்ளிவாய்க்காலின் பன்னிரண்டாவது ஆண்டு நினைவேந்தல், மிக மோசமான பின்னடைவுடன் – வாய்ப்பந்தல் போடும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் இயலாமையை வெளிப்படுத்தியவாறு கழிந்துள்ளது.
மே 18ம் நாளன்று தமிழர் தாயகத்தில் சட்டமறுப்பாக அல்லது தடை உடைப்பாக ஆகக்குறைந்தது ஒரு நிகழ்வைத்தானும் செயற்படுத்த முடியாத பெட்டிப் பாம்புகளாக தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் மாறி, தங்கள் சுயரூபத்தை வெளிப்படுத்திய நாளாக இது கடந்து போயிற்று. எண்ணெயும் திரியுமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தம் உறவுகளுக்கு தீபம் ஏற்றி வணங்கக் காத்திருந்த அப்பாவி மக்களை இவர்கள் ஏமாற்றி விட்டனர்.
இலங்கை என்பது சிங்கள தேசம், பௌத்த நாடு என்ற கோட்பாட்டு அரசியலில் அராஜக ஆட்சி செய்யும் கோதபாய அரசு, முற்றுமுழுதாக படைத்தரப்பை ஏவி விட்டு தமிழரின் அனைத்து உரிமைகளையும் பறித்து இனச்சுத்திகரிப்பு மேற்கொண்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய கோதபாய, தாம் எதையாவது எங்காவது சொன்னால் அது எழுத்தில் வழங்கப்படும் உத்தரவுக்குச் சமமானது என்றும், அதனை மீறுபவர்கள் தண்டிப்படுவர் என்றும் தெரிவித்த கருத்து, இலங்கையில் சர்வாதிகார – இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது என்பதை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, கைதானபின்னர் எங்கே என்று தெரியாமலாக்கப்பட்ட 1,46,000 தமிழருக்கு, வருடத்துக்கு ஒரு தடவை உற்றாரும் உறவுகளும் தீபமேற்றி கண்ணீர் சிந்தி நினைவு கொள்ளும் நாள் மே பதினெட்டு.
இந்த நாள் யாரால், எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது? போரில் இலங்கை அரசு வெற்றி கொண்டது என்று சிறிலங்கா அரசு பகிரங்கமாக பிரகடனம் செய்தது மே பதினெட்டு. இந்த நாளிலேயே போர் வெற்றி நாள் கொண்டாடி படையினருக்கு பட்டங்களும் பதவி உயர்வுகளும் பரிசுகளும் வழங்கி அரசு மதிப்பளிக்கிறது. இந்த வருடம் மே மாதம் 18ம் திகதி சிங்கள ராணுவத்தில் 452 அதிகாரிகளுக்கும் 4289 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. கடற்படையில் 64 அதிகாரிகளும், 1904 சிப்பாய்களும் பதவி உயர்வு பெற்றனர்.
இந்தப் பதவி உயர்வுகளுக்கு மே 18 எதற்காகத் தெரிவு செய்யப்பட்டது? தமிழ் மக்களை வகைதொகையின்றி கொன்று குவித்ததற்காக அவர்களைக் கொலை செய்தவர்களை மதிப்பளிக்கும் வகையில் அரசு தரப்பு செயற்படுகிறது. ஆனால், அவர்களால் கொல்லப்பட்டவர்களை நினைவேந்தி தீபம் ஏற்றி வணங்க வருடத்தில் ஒரு நாளுக்கான உரிமையைக்கூட அந்த அரசு மறுக்கிறது.
முள்ளிவாய்க்காலில் போர் உறைநிலை கண்டதையடுத்து படிப்படியாக அதற்கான அடையாளங்களை அழிப்பதை அரசு தரப்பு ஆரம்பித்தது. மாவீரர் கல்லறைகள் தகர்க்கப்பட்டன. அவர்களின் துயிலும் இல்லங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. அவற்றின்மேல் ராணுவ முகாம்களும் பௌத்த விகாரைகளும் ராணுவக் குடும்பத்தினருக்கான மனைகளும் விளையாட்டுத் திடல்களும் நிறுவப்பட்டன.
இப்போது ஒற்றை அடையாளமாக எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் தியாக பூமி மட்டுமே. தமிழரின் இரத்தமும் சதையும் எலும்புகளும், அவர்களின் பாரம்பரிய இருப்பிடங்களும் சொத்துகளும், கலை – கலாசார – பாரம்பரிய விழுமியங்களும் புதையுண்ட புனித நிலம் இது.
இந்த நிலத்தைப் பாதுகாக்கவென ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், அதற்கென 2019ல் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பும் தமிழினத்திலுள்ள பிளவுகளாலும் போட்டி மனப்பான்மையாலும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் தலா இரண்டு உறுப்பினர்களாக மொத்தம் 16 பேரைக் கொண்ட பொதுக்கட்டமைப்பை, பிரிந்து நிற்கும் தமிழ் தேசிய அரசியற்கட்சிகளும் அவர்களின் தொண்டர் அடியார்களும் விழுங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதே நிலைமை தொடருமானால், கோதபாய ஆட்சிக்காலத்துள் முள்ளிவாய்க்கால் நிலத்தில் புதிய புத்தர் குடியேறி விடுவார். அவருக்கு அருகே பௌத்த பிக்குகளின் அலங்கார மாளிகைகள் உருவாகிவிடும். இவர்களுக்குப் பாதுகாப்பாக படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுவிடும். அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் எங்கே என்று தேடும் நிலையே ஏற்படும்.
இந்தப் பின்னணியில், இந்த வருட நினைவேந்தல் ஆரம்பத்தில் தந்த நம்பிக்கையும், பின்னர் துவண்டுபோன செயற்பாடும் வரலாற்றுப் பதிவுக்குரியது. கொரோனா பேரிடர் ஆரம்பமாகி ஒன்றரை வருடமாகப் போகிறது. போக்குவரத்து முடக்கம், ஒன்றுகூடல் தடை, ஆறடி இடைவெளி, கட்டாய முகக்கவசம் போன்றவைகளுடன் மக்கள் வாழப் பழகிவிட்ட நாட்கள் இன்றையது.
ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்க கோதபாயவின் பினாமியான சவேந்திரசில்வா தமது எண்ணப்படி தடைகளைப் போடுவாரென்பது எதிர்பார்க்கப்பட்டது. தமது உத்தரவை மீறி இங்கு ஒன்று கூடுபவர்கள் கூண்டோடு கைது செய்யப்படுவர் என்றும் முற்கூட்டியே அறிவித்தார்.
இவ்வாறான நிலையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை நிகழ்த்த மனதார விரும்பியிருந்தால் தமிழ்த் தேசிய தலைவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? எந்தத் திட்டத்தையும் முற்கூட்டி அறிவிக்காது திடுதிப்பென நினைவேந்தலை நிகழ்த்தியிருக்க வேண்டும்.
ஆனால், நடந்தது எதிர்மாறானது! கைது எச்சரிக்கையை ராணுவத்தளபதி விடுத்ததையடுத்து, வெளியான தமிழ்த் தலைவர்களின் அறிக்கைகளும் அவர்களின் நெருப்புக் கிளப்பிய ஆரவாரங்களும் இம்முறை எவ்வாறாவது முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை நடத்தியே தீருவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையிலேயே தமிழ் ஊடகங்களும் தாராளமாக இடமளித்து செய்திகளை சுடச்சுட வெளிப்படுத்தின.
உடனடியாக முள்ளிவாய்க்காலில் அமைந்திருந்த நினைவுத்தூபியின் ஒரு பகுதியை உடைத்தெறிந்த படைத்தரப்பினர், அங்கு நிறுவவென கத்தோலிக்க மதகுருமாரால் முதல் நாளிரவு எடுத்துச் செல்லப்பட்ட நினைவுக் கல்லையும் காணாமல் ஆக்கிவிட்டனர். (காணாமல் ஆக்குவது இவர்களுக்குக் கை வந்த கலை).
முதலில் வெளியானது தமிழ் அரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவின் அறிக்கை. அழிக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை மீளமைத்து இனவிடுதலையை நிலைநாட்டுவோம் என்றிருந்தது இவரது வீர முழக்கம். அடுத்து வந்தது கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரனின் அட்டகாச அறிக்கை. தடுக்கவே முடியாதவாறு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலைச் செய்வோம் என்று அறைகூவினார்.
அடுத்தடுத்து கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எல்லோரும் படையினரின் செயலைக் கண்டித்து பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பினர். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், கொழும்பிலிருந்து மனோ கணேசன் ஆகியோரும் அறிக்கைகளை விளாசினர்.
தமிழினப் படுகொலையின் உச்சமான மே 18ஐ ஒன்றிணைந்து நினைவேந்துவோம் என்ற விக்னேஸ்வரன் அணியின் பிரமுகர் அருந்தவபாலனின் அறிக்கை, பொத்துவில் முதல் பொலிகண்டிவரை என்ற அனைத்தும் இணைந்த நினைவேந்தல் இடம்பெறப் போகின்றதென்ற உற்சாகத்தை அளித்தது. ஆனால், அது வெறும் எதிர்பார்ப்பாகவே கலைந்து போனது. கஜேந்திரகுமார் தரப்பு முற்கூட்டி எதனையும் அறிவிக்காது திடுதிப்பென எங்காவது ஒரு பொது இடத்தில் நினைவேந்தலை நிறைவேற்றுவர் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தது. அதுவும் புஸ்வாணம்தான்!
கொரோனாவைக் காரணம் காட்டி அனைத்து முடக்கத்தையும் எச்சரிக்கையையும் அடுத்தடுத்து ராணுவம் விடுத்ததைத் தொடர்ந்து தமிழ் தலைவர்களின் அறிக்கைகள் படபடவென வந்தன. இது, ராணுவத்தின் தடை அறிவிப்பை இவர்கள் எதிர்பார்த்திருந்ததை (தங்களுக்குச் சாதகமாக்க) அப்பட்டமாகத் தெரியத்தந்தது.
முள்ளிவாய்க்கால் படுகொலையை வீடுகளிலிருந்தே நினைவேந்தலாமென குத்துக்கரண அறிக்கை விட்டார் மாவை சேனாதிராஜா. இணையத் தளங்களில் சூம் வழியாக நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார். தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் சொல்லாமல் கொள்ளாமல் வளவுக்குள் தீபமேற்றி காரியத்தை நிறைவேற்றினார்.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் முன்விறாந்தையில் மாவையும் குழுவினரும் தீபமேற்றி ஒளிப்படம் எடுத்தனர். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அறைக்குள் அரைவட்டத்தில் கறுப்பு உடையில் நின்று தீபமேற்றி ஒருவாறு நினைவேந்தலை முடித்துக் கொண்டனர். நீதிமன்றத்துக்கு அணியும் கறுப்பு கோட்டும் சூட்டும் இங்கு கறுப்பு உடையென பெயர் சூட்டப்பட்டது விந்தையானது. மொத்தத்தில் தமிழ்த் தேசியத்தை தேர்தல் காலங்களில் மறவாது வேதமாக ஓதுபவர்கள், அதன் சின்னமாகவிருக்கும் முள்ளிவாய்க்கால் மக்களையும் போராளிகளையும் அவமானப்படுத்தியதோடு மட்டுமன்றி கேவலமாக்கியும் விட்டனர்.
மே 18 – முள்ளிவாய்க்காலா அல்லது நாடாளுமன்ற அமர்வா முக்கியமானது? ஒரு நாள் அமர்வுக்குக் கிடைக்கும் சன்மானத்தை முள்ளிவாய்க்கால் எனப்படும் தாயக நிலத்திலும் உயர்ந்ததாக கருதுபவர்களுக்கு, முப்பதாண்டு தாயக விடுதலைப் போரின் தாற்பரியம் தெரிந்திருக்கவில்லை.
நந்திக்கடலின் ஓர் இடத்தில் சிவாஜிலிங்கத்தினால் தீபம் ஏற்ற முடியுமென்றால், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தனித்து நின்று வேலன் சுவாமிகளால் தீபம் ஏற்ற முடியுமென்றால், நந்திக்கடலின் கரையோரத்திலே யாரோ ஒருவரால் நினைவேந்தல் பதாதை நாட்டப்பட்டு தீபத்தை மிதக்கவிட முடியுமானால்……. தமிழரசு, கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினரால் ஏன் இயலாமல் போனது?
இதே நாட்களில் துறைமுக அதிகாரசபை சட்டத்தை எதிர்த்து ஜே.வி.பி.யினரால் நாடாளுமன்ற முன்றலில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடியுமென்றால், கறுப்பு உடை கூட்டமைப்பினரால் அவ்வாறு ஏன் செய்ய முடியாது போனது?
ஜெனிவாத் தீர்மானம் போன்று ஆண்டாண்டு தோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் சிதறடிக்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம் புகட்ட, ஒரு வேலன் சுவாமிகளும், ஒரு சிவாஜிலிங்கமும் மட்டும் போதாது!
நன்றி- பதிவு