தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்திய சதையும், இரத்தமும் கலந்ததாகவே இருந்து வந்தது. இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்களை தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். இன்று அபிவிருத்தி பற்றி பேசும் தமிழர்கள், இந்த இழப்புகள் எதற்காக இடம் பெற்றன என்பது பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழ் மக்கள் பல இழப்புகளை தொடர்ச்சியாக அனுபவித்தாலும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மிகவும் மறக்கமுடியாத அல்லது இழப்பின் உச்சமாக அமைந்தது முள்ளிவாய்க்கால் அவலம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.
கிழக்கு மாகாணம் 90களில் பல்வேறு படுகொலைகளை சந்தித்திருந்தது. இச் சம்பவங்கள் விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் சந்தித்த இழப்புகளின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதேபோன்று வடக்கில் 2009 இன அழிப்பின் உச்சமாக முள்ளிவாய்க்கால் சம்பங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று சர்வதேசம் வரை இது பேசப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் மௌனிக்கப்படும் காலப் பகுதியில் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் கொல்லப்படும் போது இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் தமிழர்களின் மனநிலையில் ஏற்பட்ட தாக்கம் என்பது இன்று வரை சொல்லமுடியாத வலியாகவே இருந்து வருகின்றது.
இந்த வலியானது தமிழ் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் வரையில் தொடர வேண்டியது மிகமுக்கியமாகும். இன்று உள்ள இளம் தமிழ் சமூகத்தின் மத்தியில் எமது போராட்டத்தினை வேறு திசைக்கு திருப்பும் செயற்பாடுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன. தமிழர்கள் எதிர்கொண்ட இழப்புகள் மறைக்கப்படுகின்றன. அனைத்தையும் வெறுமனே அதிகாரப் போட்டியில் இடம்பெற்ற இழப்புகள் என்ற வகையில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை திசை திருப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இழப்புகளானது வரலாற்று ரீதியான விடயங்களாக இளம் சமூகங்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதுடன், தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் இளம் சமூகத்தின் மத்தியில் சரியான விடயங்கள் கொண்டுசெல்லப்பட வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடைபெற்ற போது, தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள் இன்றும் பேசுபொருளாக உள்ள நிலையில், அந்த இன்னல்களை வடக்கு மக்கள் எதிர்கொண்ட வேளையில் கிழக்கில் அதன் மீதான அதிர்வலைகள் என்பது பெருமளவில் இருந்தது.
இறுதி யுத்த காலப் பகுதியில் எந்த நாடாவது வந்து தமக்கு உதவி செய்யாதா? என்ற ஏக்கம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது. மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்ட போது, தமிழ் உறவுகள் சொல்லொணா துயரங்களை அனுபவித்தனர்.
தமது உறவுகள் கொத்துக் கொத்தாக உயிரிழக்கும் போதும் உறவுகள் கொத்துக் கொத்தாக காயமடைந்து குவியல் குவியலாக மருத்துவமனைகளில் குவிக்கப்படும் போதும் கிழக்கு வாழ் உறவுகள் இரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலையினை அன்றைய காலத்தில் உணர முடிந்தது.
நாங்கள் அந்த யுத்த நேரத்தில் மட்டக்களப்பில் பல நெருக்குவாரத்தில் இருந்தோம். எங்களை எங்கும் நகர விடாமல் பாதுகாப்பு படையினர் பல தடைகளை விதித்திருந்தனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு ஏற்பட்ட அழிவுகள் தொடர்பான தகவல்கள் எங்கள் கண்முன்பாக வந்து சென்றன. நாங்கள் இங்குள்ள சில சமூக தொண்டர்களை அழைத்துக்கொண்டு திருகோணமலைக்கு சென்றோம். அங்கு யுத்தத்தில் காயமடைந்த பலர் படகுகளில் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் செயற்பாடுகளை செய்தோம். அந்தவேளையில் அப்பகுதியில் நின்ற சில ஒட்டுக்குழு உறுப்பினர்கள் எங்களை துருவித் துருவி விசாரணை செய்தனர். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தக்காலப் பகுதியில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய மட்டக்களப்பினை சேர்ந்த கே.ராஜேந்திரன் என்பவர் கருத்துத் தெரிவிக்கும் போது, அன்றைய காலத்தில் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கும் போது நாங்கள் எங்கள் உயிரைப்பற்றி கவலைப்படவில்லையென தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றைய தினம் எங்களுக்கு அழுவதற்கு கூட கண்களில் கண்ணீர் இல்லாத நிலையே இருந்தது. திருகோணமலை வைத்தியசாலையில் குவிக்கப்பட்டிருந்த நோயாளர்கள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்தல் என பல்வேறு செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்திருந்தோம்; அப்போது எங்களது உணர்வுகள் மரத்துப் போயிருந்தன. இந்த நாட்டில் நாங்கள் யார் என்ற கேள்வி அன்றைய பொழுதில் என்மனதில் எழுந்திருந்தது. நாங்கள் இந்த மண்ணில் வாழ தகுதியற்றவர்களா என்ற கேள்வியும் அன்று எழுந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவியான திருமதி மேரி கிறிஸ்டினா கருத்துத் தெரிவிக்கையில், பல்குழல் எறிகணைகள், வானூர்தித் தாக்குதல்கள் எங்களுக்கு புதிதல்லை. ஆனால் வன்னி மீது இறுதியாக நடாத்தப்பட்ட அந்த தாக்குதலின் போது நாங்கள் கேள்விப்பட்ட விடயங்கள் எங்களை நிலைகுலைய வைத்தன. அன்று வன்னிக்கு செல்வதற்கான வழி கிடைத்திருந்தால் நாங்கள் சென்று அந்த மக்களுடன் போராடியிருப்போம். எங்களது உறவுகளை அநியாயமாக கொன்று குவித்தனர். நான் இந்தப் போராட்டத்தில் எனது கணவனை பறிகொடுத்தவள் ஆனாலும், அன்று என்னைப் பற்றியோ எனது குடும்பம் பற்றியோ எனது கணவன் பற்றியோ நான் சிந்திக்கவில்லை. முள்ளிவாய்க்கால் என்பது எமது இனத்திற்கு வைக்கப்பட்ட மரணப் பொறியாகவே நான் உணர்கின்றேன். முள்ளிவாய்க்காலில் யுத்தம் ஆரம்பித்த காலம் தொடக்கம் அது மௌனிக்கப்பட்ட பின்னரும்கூட அந்த நிலைமையினை மறக்க முடியாமல் இருந்தது. இன்றுகூட அது நீங்காத இடத்தினை எனது மனதில் கொண்டுள்ளது என தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நீண்ட காலமாக வாடகை வாகனங்கள் செலுத்திவரும் பெயர் குறிப்பிட விரும்பாத சாரதியொருவர் தனது கருத்தைத் தெரிவித்த போது, வடக்கில் முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்ற போது கிழக்கில் அதன் தாக்கம் குறித்து எந்தவித உணர்வலைகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற வகையில் ஒட்டுக்குழுக்களும் இராணுவத்தினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெருளவானோர் வவுனியா மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு சென்று, இறுதி யுத்ததின்போது விழுப்புண் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர். அந்தவேளையில் பல இடர்ப்பாடுகளை நாங்கள் சந்தித்தபோதும், எங்களுக்கு அவையெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. ஒரு பக்கத்தில் மரண ஓலங்கள், இன்னுமொரு பக்கத்தில் தமது உறவுகளை இழந்தவர்கள், இன்னுமொரு பக்கத்தில் தமது உறவுகளுக்கு என்ன நடந்ததோ என்று அறியாமல் அங்குமிங்கும் அலைந்து திரியும் கூட்டத்தினர், இதற்கு மத்தியில் பாதுகாப்பாக அழைத்து வந்த தமது உறவுகளை படையினர் பிடித்துச் சென்றபோது அவர்களை மீட்க வேண்டும் என்று அலையும் ஒரு பகுதியினர் இவ்வாறு பல தரப்பட்டவர்களின் மரண ஓலங்கள் எங்களுக்குள் பலவிதமான தாக்கத்தினை ஏற்படுத்தியது. நாங்கள் இதன் காரணமாக பலநாட்களாக உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளானோம் என தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு படுகொலை களம் அல்ல தமிழர்களின் போராட்டத்தின் மற்றுமொரு வடிவத்திற்கான ஆரம்பம். இதனை உணர்ந்து எதிர் காலத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் தேசிய நலன் விரும்பிகளும் செயற்பட வேண்டும். நாங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளோம்.