அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டுமே இருக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தமிழ் மக்களுடைய தேசிய அரசியலில், நேர்கோட்டில் சந்திக்க முடியாத மூன்று தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து, அரசியல் கைதிகளுடைய விடயம் தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் கலந்துரையாடியிருக்கின்ற விடயம் வரவேற்கத் தக்கது. இதை அரசியல் கைதிகளுக்கான ஒரு கௌரவமாக தான் நாங்கள் கருதுகின்றோம்.
அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாக இக் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளின் விபரம் இதுவரை தெரியவரவில்லை என்ற போதும், இந்த விபரத்திலே இவர்கள் அரசியல் கைதிகளுடைய தண்டனை கைதிகள் யார், அதேபோல தண்டனை பெற்ற கைதிகள் யார், விசாரணையில் உள்ளவர்கள் யார், போன்ற விபரங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், தண்டனை கைதிகளை விடுதலை செய்யுங்கள், வழக்குகளை துரிதப்படுத்துங்கள் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருக்கலாம். இது எங்களுக்கு தேவையில்லை.
இந்த அரசியல் கைதிகளை நாங்கள் அரசியல் கைதிகளாக மட்டும் தான் பார்க்க வேண்டும். இவர்களை எந்த வகையிலும் பிரிக்க கூடாது. என்பது தான் எங்களுடைய வேண்டுகோளாக இருக்கின்றது.
ஜெனிவாவுக்கு முன்னர் கட்சிகள் ஒன்று கூடியிருந்தார்கள். ஆனால் தனித்தனியாக அவர்கள் பிரிந்து விட்டார்கள். இதனால் கொள்கை ரீதியாக ஒன்றுசேர முடியாமல் போய்விட்டது. தற்போது அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாக ஒன்று சேர்ந்திருக்கின்ற இந்த கட்சிகள், மீண்டும் அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பிலே வேறுபட்ட கருத்துக்கள் காரணமாக பிரிந்து போய் விடுவது என்பது தமிழ் மக்களை, தமிழ் மக்களுடைய அரசியலை, அரசியல் கைதிகளின் விடுதலையை பாதிக்கின்ற ஒரு செயலாக அமைந்து விடும். எனவே இதற்கு எந்த வகையிலும் இடம் கொடுக்கக் கூடாது என்பது அரசியல் கைதிகளின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
அரசியல் கைதிகளுடைய விடுதலைக்காக தான் இந்த கட்சிகள் கூட்டாக செயல்பட வேண்டும். வேறு கட்சிகளும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, ஏற்கனவே கடிதங்களை கையளித்து இருக்கின்றன. ஆனால், அரசியல் கைதிகள் இல்லை என்று, நாடாளுமன்றத்திலே கூறியிருக்கின்றார்கள் ஆட்சிதரப்பினர்.
இந்த சந்தர்ப்பத்திலே, அரசியல் கைதிகள் நாட்டில் இருக்கின்றார்கள் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி, இவர்கள் அரசியல் ரீதியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்கு இந்த கட்சிகள் ஒன்றித்து செயல்பட வேண்டும். அதில் மட்டுமே தமிழ் மக்களுடைய அரசியல் வெற்றி தங்கியிருக்கின்றது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்” என்றார்.