ஏழாலை Five Star விளையாட்டுக்கழகமும், இளைஞர் கழகமும் இணைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் இரத்த தான முகாமை நடத்தியுள்ளனது.
குறித்த இரத்த தான முகாம் நேற்று(21) யாழ். ஏழாலை நட்சத்திரத் திண்ணைப் பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றது.
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் க.அபராசுதன் தலைமையில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 01 மணி வரை நடைபெற்ற இரத்த முகாமில் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் க.அபராசுதன் கருத்து தெரிவிக்கையில்,
எங்களுடைய Five Star விளையாட்டுக் கழகமும், இளைஞர் கழகமும் இந்த இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்துகின்றோம்.
கடந்த காலங்களில் எங்களுடைய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து இந்த இரத்ததான நிகழ்வில் பங்கெடுத்திருந்தோம்.
ஆனால், இந்த வருடம் முதல் எங்களுடைய விளையாட்டுக் கழகத்திற்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மண்டபத்தில் வருடா வருடம் தொடர்ச்சியான இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.
தற்போது அதிகரித்து வரும் இரத்தத்தின் தேவை கருதி நாங்கள் இந்த குருதிக் கொடை நிகழ்வை முன்னெடுத்துள்ளோம்.
இவ்வாறான குருதிக் கொடை நிகழ்வுகளை எங்களுடைய சமூக அமைப்புக்களான சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள் என்பன ஒன்றிணைந்து மேற்கொள்வது காலத்தின் தேவை எனவும் நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.