அங்கும் இங்குமாக தஞ்சம் புகுந்து அரசியல் நடத்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி கிடைக்காததாலேயே பஸில் ராஜபக்சவை விமர்சிக்கும் அரசியலை முன்னெடுத்துவருகின்றார். இணைந்து பயணிப்பதானால் கூட்டு பொறுப்பு என்னவென்பதை அவரின் கட்சி உணரவேண்டும்.
இவ்வாறு கடும் சீற்றத்துடன் பதிலடி கொடுத்துள்ளது அரச கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
பஸில் ராஜபக்ச மற்றும் பிபீ ஜயசுந்திர ஆகியோரின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தற்போதைய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவை அல்ல. சட்டிமுட்டி, பத்திக் என நகைச்சுவைத்தனமாக இராஜாங்க அமைச்சுகளைக்கூட பஸிலே உருவாக்கினார். அவர் நாடாளுமன்றம் வருவதால் மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை. – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மொட்டு கட்சி விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரோகித அபேகுணவர்தன மேற்கண்டவாறு விளாசித்தள்ளினார். அவர் கூறியவை வருமாறு,
பஸில் ராஜபக்சதான் அமைச்சரவையை உருவாக்கினார் என்பது உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகளை தயாசிறி ஜயசேகர முன்வைத்துள்ளார். தயாசிறி ஜயசேகர என்பவர் கடந்த ஆட்சியின்போது அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை வகித்தவர். இதன்போது விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கும், தவறான திசையில் பயணித்த அரசை நல்வழிப்படுத்துவதற்கும் அவர் முன்னெடுத்த திட்டங்கள் எவை என கேட்க விரும்புகின்றோம். அப்போது எதுவும் செய்யாமல் – முடியாமல் மௌனமாக இருந்தவரே இன்று அறிவிப்புகளை விடுக்கின்றார்.
2015 ஜனவரி 08 ஆம் திகதிவரை மஹிந்த ராஜபக்சவின் பக்கம் இருந்தார். 2015 ஜனவரி 09 ஆம் திகதி காலை மைத்திரிபக்கம் சென்றுவிட்டார். அமைச்சர் பீரிஸின் செயலாளராக இருந்த தயாசிறி அதன்பின்னர் சுதந்திரக்கட்சியில் இணைந்தார். ஐக்கிய தேசியக்கட்சிக்கு சென்றார். மீண்டும் சுதந்திரக்கட்சிக்கு வந்தார். இவ்வாறானவர்களின் அரசியல் என்னவென்பது மக்களுக்கு தெரியும். தமது இயலாமையை மூடிமறைக்கவே பிறர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
கடந்த பொதுத்தேர்தலில் களுத்துறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டது. களுத்துறை மாவட்டத்தில் 10,977 வாக்குகளும், நுவரெலியா மாவட்டத்தில் 6,277 வாக்குகளுமே கிடைக்கப்பெற்றன. சிலவேளை அனைத்து மாவட்டங்களிலும் அக்கட்சி தனித்து போட்டியிட்டிருந்தால் தேசியப்பட்டியல் ஊடாக மட்டுமே ஐ.தே.கவுக்குபோன்று ஒரு ஆசனம் கிடைத்திருக்கும்.
சுதந்திரக்கட்சிக்குள் பிரச்சினையெனில் அரசுக்குள் இருப்பதாக இருந்தால் பிரச்சினையை உள்ளே பேசி தீர்க்கலாம். அதனை விடுத்து வெளியில் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. சிலருக்கு குணப்படுத்த முடியாத நோய் உள்ளது. அதில் ஒருவர்தான் விஜயதாச ராஜபக்ச. அமைச்சு பதவி இல்லாவிட்டால் அவரால் இருக்கமுடியாது. 2ஆவது நபர்தான் தயாசிறி.
பஸில் ராஜபக்சவென்பவர் இந்நாட்டில் பலம்பொருந்திய கட்சியைக் கட்டியெழுப்பியவர். பொருளாதாரப்போரை வென்றவர். அவரின் வருகை நிச்சயம் மாற்றத்தை தரும். பஸில் என்பவர் வேலை செய்யும் தலைவர் என்பது எதிரணிக்குகூட தெரியும். பஸிலை அரசியல் ரீதியில் விமர்சித்ததால்தான் தயாசிறியை விமர்சிக்க வேண்டிவந்தது. இணைந்து பயணிக்க நாம் தயார். ஆனால் இணைந்து பயணிப்பதாக இருந்தால் கூட்டு பொறுப்பை உணருமாறு வலியுறுத்துகின்றோம். – என்றார்.