Family Man 2, ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஒரு வகையான மாடல். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம், வியப்புக்குரிய வீரதீரங்களை, சாத்தியமற்றது என்று சொல்லக்கூடிய முறையில் நிகழ்த்திக்காட்டுகிற கதாபாத்திரம் என்பதாலேயே அனைத்துத் தரப்பினரையும் தன்வயப்படுத்தி இருக்கிறது. ஜேம்ஸ்பாண்ட் சந்திக்கிற இடர்கள் மிகமிக வலுவானவை.
கதையின் மையவிடர் வலுவானதாக அமைந்து, கதையோட்ட இடர்களும் வலு மிக்கவையாக அமைந்துவிட்டன எனில், இடரைக் களைய வருகிற கதாநாயகனும் மிக வலுவானவனாக வார்த்தெடுக்கப்பட வேண்டும். கோட்டைக் கதவைக் கொண்டுபோய் வீட்டு நிலையில் பொருத்தமுடியாது; வீட்டுக் கதவைக் கொண்டுபோய்க் கோட்டை வாயிலில் நிறுத்தமுடியாது. அது அதற்கு – அது அது!
Terminator 2 Judgement Day திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். ஜான் என்கிற சிறுவனைத் தேடிவந்து, ஜானை ஒரு நெருக்கடியிலிருந்து மீட்டு, ஜானுக்கு உற்ற நண்பனாக மாறுகிறதொரு மனித எந்திரம். ‘ஜானின் உயிரைப் பாதுகாக்கவேண்டும்’ என்கிற நோக்கத்தை நிறைவேற்றும்படியான கட்டளை நிரல் கொண்டு உரு கொடுக்கப்பட்ட மனித எந்திரம் இது. ஜானை அழித்தொழிக்க வேண்டுமென்ற கட்டளை நிரல்கொண்டு உரு கொடுக்கப்பட்ட மனித எந்திரமும் கதையில் பின்னர் அறிமுகமாகிறது. இந்த மனித எந்திரம்தான் வில்லன். அப்படியானால் கதாநாயகன் – ஜானா? அல்லது நல்ல மனித எந்திரமா? என்று கேட்டால், நல்ல மனித எந்திரம் என்று இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்.
ஜானை அழித்தொழிப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கிற எந்திர வில்லனுக்கும், ஜானைக் காப்பாற்றுவதற்காக அனுப்பப்பட்டிருக்கிற எந்திரக் கதாநாயகனுக்கும் இடையிலான அதகளம்தான் Judgement Day. இந்த இரண்டில் – கதாநாயகன் பழைய காலத்து மெஷின்; வில்லன் நவீன காலத்து மெஷின். செயற்கையறிவைப் பொறுத்தவரையில் பழையதைவிடப் புதியது சிறந்தது; வலிமை மிக்கது; Updated Version. வில்லன் எந்திரம் பார்வையருக்கு அறிமுகமாகிற முதல் காட்சியிலேயே இந்த வேறுபாட்டினைப் பளிச்சென உணர்கிறது பார்வையரின் உள்ளம். இங்கு, கதாநாயக எந்திரத்துக்கும், வில்லன் எந்திரத்துக்கும் வலுச் சமநிலை இல்லை. இந்த வலிமை வேறுபாடுதான் கதாநாயக எந்திரம் சந்திக்கிற பேரிடர். இந்த வேறுபாடுதான் தனக்கு முன்னால் இருக்கிற பெரும் நெருக்கடி என்பதை, க.எந்திரமே ஜானிடம் சொல்லுவதாக ஒரு காட்சி இருக்கிறது. தன்னையறிந்த எந்திரம்!.
ஜானைக் கொல்வதற்காக வி.எந்திரம் மேற்கொள்கிற ஒவ்வொரு முயற்சியையுமே க.எந்திரம் முறியடித்து விடுகிறது. ஒவ்வொரு முறியடிப்பின்போதும் க.எந்திரம் வென்றுவிட்டதாகப் பார்வையர் கருதவேண்டுமல்லவா? ஆனால் அப்படிக் கருதுவதில்லை. க.எந்திரம் வென்றுவிட்டதென்று நம்ப மறுக்கிறது பார்வையரின் உள்ளம். க.எந்திரத்தின் வெற்றி தற்காலிகமானதுதான் என்று கருதுகிறது. பார்வையரின் கருத்து சரிதான் என்பதை அடுத்தடுத்த காட்சிகள் மெய்ப்பிக்கின்றன.
வி.எந்திரத்தால் உருவாகிய முந்தைய இடரைக் காட்டிலும் வலுவான இடராகவே ஒவ்வொரு புதிய இடரும் வந்துதிக்கிறது. க.எந்திரம், முந்தைய முயற்சிகளைக் காட்டிலும் கடினமான முயற்சியைக் கொண்டுதான் புதிய இடரினை வெல்லமுடிகிறது. வி.எந்திரத்தால் மீண்டுமொரு புதிய இடர் உருவாகிறது. இப்படியே நீண்டுபோய் இறுதியில் பேரிடரொன்றை உருவாக்குகிறது கதை. இந்தப் பேரிடர்தான் படத்தின் க்ளைமாக்ஸ்; இறுதியிடர்!
இப்படியாக, இடைவிடாது இடர்களை உருவாக்குகிற அளவு வலிமை மிக்கதான மைய முரண்களை அடித்தளமாக்கிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. ‘க.எந்திரம் பழைய மடல் மெஷின் – வி.எந்திரம் புதிய மாடல் மெஷின்’ என்கிற நுண்ணிய வேறுபாடானது வலிமையான முரணாகும். மைய முரண்களிலேயே முதன்மையான முரணுமாகும். வலுவீனமான க.எந்திரமானது வலுக்கொண்ட வி.எந்திரத்திடமிருந்து ஜானின் உயிரை எவ்வாறு பாதுகாக்கப் போகிறது? என்ற கேள்வி பார்வையரின் உள்ளத்தே உதித்த கணத்தில் மைய முரணானது மைய இடராக உருவத்தை மாற்றிக்கொள்கிறது. இந்த மைய இடரானது துணை இடர்களையும், துணை இடர்கள் தமக்குள் மோதி விளையாடுவதால் கருகொள்கிற கிளை இடர்களையும் பிறப்பிக்கின்றன. இந்த இடர்கள் ஒவ்வொன்றையும் கதாநாயகன் முறியடித்த பின்னர், பேரிடர் தனது உருவத்துடன் வெளிப்படுகிறது.
இனி, கதையின் மூன்றாவது கட்டம் ஆரம்பித்ததுவிட்டது. ஒப்பீட்டளவில் திறன் பற்றாக்குறை கொண்டிருக்கிற க.எந்திரமானது பேரிடரை எப்படி முறியடிக்கப்போகிறது? என்ற பெருங்கேள்விக்கு விடை சொல்கிறது திரைக்கதை. இந்தக் கேள்வியானது கதையின் முரண்முகிழ்வுத் தருணத்தின்போதே பார்வையரின் உள்ளத்தில் உதித்துவிட்ட கேள்விதான் என்றபோதிலும், இறுதியிடர்த் தருணத்தில் இதே கேள்வி பேருருவெடுத்து எழும்பி நிற்கிறது. இந்தக் கேள்விக்கான விடை எப்பொழுது கிடைக்கிறதோ அப்பொழுது கதைமுடிவும் கிடைக்கப்போகிறது. கதைமுடிவு என்பது வெறுமனே கதைமுடிவுதானா? என்றால், அவ்வாறன்று; கதைமுடிவு என்பது தீர்ப்பு!
தீமைக்கும் நன்மைக்கும் இடையேயான போரில் நன்மையின் பக்கம் சார்பெடுத்திருக்கிறார் பார்வையர். நன்மையின் பிரதிநிதியாகிய க.எந்திரம் வெல்லவேண்டும் என்று விரும்புகிறார்; விருப்பத்தை நிறைவேற்றுகிறது திரைக்கதை. வி.எந்திரத்தைவிட வலுகுறைந்த க.எந்திரம் எப்படி வெல்லமுடியும்? என்றொரு கேள்வி எழும்புகிறதல்லவா?! இந்தக் கேள்விக்கான விடையைப் பார்வையர் தன்னாலே கண்டுபிடித்துக் கொள்ளும்படியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை.
வி.எந்திரத்தில் – க.எந்திரத்தில் உள்ளதைக் காட்டிலும் எந்திரத் திறன்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன; கட்டளை நிரல்கள் அவ்வாறு கணிணியப்படுத்தப் பட்டிருக்கின்றன. வி.எந்திரத்தின் நோக்கம் ஆக்குவதன்று; அழிப்பது! அதாவது, ஜான் என்கிற எதிர்கால நன்மையை அழிப்பது. அழிவு என்கிற எதிர்மறை விளைவை நோக்கமெனக் கொண்டிருப்பதால், படைப்பார்த்த கண்ணியத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை வி.எந்திரத்தின் திறன்கள். மேலும், நன்மையை அழிப்பது என்பதை வி.எந்திரத்தின் இயல்நிரலாக ஏற்றியிருப்பதால், வி.எந்திரம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே அறத்திற்கு எதிரானது. இப்படியிருக்க, திறன்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிற க.எந்திரத்திற்கு நேர்மாறாக, எல்லையற்ற திறன்களோடு வலிமையாக நிற்கிறது வி.எந்திரம்.
க.எந்திரம், எதிர்கால நன்மையாகிய ஜானின் உயிரைப் பாதுகாப்பது என்கிற மனிதார்த்த நோக்கத்தை இயல்நிரலாக ஏற்றிருப்பதால், திறன்கள் யாவும் படைப்பார்த்த கண்ணியத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. தூய்மையின் சிகரம்தான் இலக்கு என்றால், களங்கமற்ற பாதைதானே பயணவழி!
மனித எந்திரத்தால் மனித குலத்துக்குத் தீங்கு நேரந்துவிடக்கூடாது என்ற நெறிமுறை கொண்டு, மனித எந்திர உருவாக்கத்திற்கென்று கறாரான வரைமுறைகளை வகுத்துச் சென்றிருக்கிறார், அறிவியல் புனைவு எழுத்தாளர் ஐசக் அசிமோவ். அந்த வரைமுறைகளின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டுதான் எந்திர மனிதனுக்கான கட்டளை நிரல்கள் எழுதப்படவேண்டும். அப்படித் தயாரிக்கப்பட்டது க.எந்திரம். அதனால்தான் ஜானைப் பாதுகாக்கிற பணியை ஏற்றுக்கொள்கிறது. ஜானுடன் பழகிப் பழகி, புன்னகை, சிரிப்பு, துயரம், மகிழ்ச்சி, துயரக் கண்ணீர், ஆனந்தக் கண்ணீர், உயிரச்சம், உடல் வலி, பொய், உண்மை, இழிவு, உயர்வு … இப்படியான மானுடத் தன்மைகளைப் புரிந்துகொள்கிறது; கற்றுக்கொள்கிறது; கடைபிடிக்கிறது. ஜான் ஒரு முறை, சத்தியம் செய்யச்சொல்கிறான். ‘சத்தியம் என்றால் என்ன?’ என்று கேட்டுப் புரிந்துகொள்கிறது க.எந்திரம். மானுடத் தன்மைகளைத் தனது உரையாடல்களிலும் நடவடிக்கைகளிலும் செயலாக்கிப் பார்க்கிறது. இடர்களை எதிர்கொள்ளும்போதும், இடர்களை ஆய்வு செய்யும்போதும், இடர்களைத் தீர்க்கும்போதும் விழுமியங்களின் அடிப்படையில் தீர்மானத்திற்கு வருகிறது. அந்த விழுமியங்கள் யாவும் காலங்காலமாக மாந்தகுலம் பேணிவந்திருக்கிற விழுமியங்கள். மாந்தகுலம் கூட்டமாக இருந்து, கூட்டாக வாழ்ந்து, கூட்டத்தைப் பெருக்குவதற்காகப் படைத்த அறநெறிகளைத்தான் விழுமியங்கள் என்கிறோம். மாந்த குலம் அழிந்திடாமல் பாதுகாப்பவை விழுமியங்களே. ஒவ்வொரு விழுமியத்தின் அடியேயும் கடந்தகால மனிதக் கூட்டத்தின் பொதுநேயம் வேரோடிக் கிடக்கிறது. அதனால்தான், எல்லாவற்றையும் இழந்து விழுமியங்களைக் காப்பது என்கிற அறப் பற்று, விழுமியங்களின் சிகர விழுமியம் என்று போற்றப்படுகிறது. சாக்ரடீஸ் உயிரை மாய்த்துக்கொண்டதும், ஜோசுவா என்கிற ஜீசஸ் உயிரை மாய்த்துக்கொண்டதும், எர்னஸ்டோ சே குவேரா உயிரை மாய்த்துக்கொண்டதும், பிரபாகரனோடு ஒன்றரை லட்சம் தமிழர் உயிரை மாய்த்துக்கொண்டதும் – விழுமியங்கள் உயிர் தரிப்பதற்காகத்தான். விழுமியங்களைக் காப்பதற்காகத் தன்னையேகூட மாய்த்துக்கொள்ளத் துணிகிற நிலைதான் விழுமியங்களின் சிகர நிலை! விழுமியங்கள், மாந்த குலத்தின் பொதுச் சொத்து.
வி.எந்திரத்தின் கட்டளை நிரல்களுக்குள் விழுமியங்கள் பதியப்பட்டிருக்கவில்லை என்பது போலவே, க.எந்திரத்தின் கட்டளை நிரல்களுக்குள்ளும் விழுமியங்கள் பதியப்பட்டிருக்கவில்லைதான். இப்படியொரு பொதுத் தன்மை இரண்டுக்கும் இருந்தாலும், அழிப்பது ஆக்குவது ஆகிய எதிர்மை காரணமாக இவையிரண்டும் வேறுபடுகின்றன. வி.எந்திரம், மாந்த குலத்துடன் பகை பூண்டிருக்கிறது. க.எந்திரம், மாந்த குலத்துடனான நட்பைப் பேணுகிறது. அதனால் க.எந்திரம் மாந்த குலத்தை எதிர்கொள்ளும்போது மாந்த மாண்புகளைக் கற்றுக்கொள்கிறது. கற்றுக்கொடுப்பவன் ஜான் என்கிற சிறுவன். இன்னும் குழந்தைமை மிச்சமிருக்கிறது ஜானுக்குள். குழந்தைமைதானே ஞான நிலை! அதனால் ஜானின் எளிய தெறிப்புகள்கூட மெய்மொழிகளாக எழுகின்றன. இப்படிப்பட்ட ஜானை அழிப்பதற்காகத் திரண்டிருக்கும் பெருங்கூட்டத்திடமிருந்து ஜானைக் காப்பதென்ற பணியில் க.எந்திரம் ஈடுபடும்போது ஜான் கட்டளையிடுகிறான் க.எந்திரத்திற்கு, ‘ஓருயிரையும் கொன்றுவிடக்கூடாது’ என்று; மாந்தகுல விழுமியங்களை ஒழுகுமாறு கட்டளையிடுகிறான் (தமிழரின் போர்நெறி); கட்டளையை சிரமேற்கொள்கிறது க.எந்திரம். ஜானுக்குக் கீழ்ப்படியவேண்டுமென்று க.எந்திரத்தின் கட்டளை நிரலில் பதியப்பட்டிருப்பதால், ஜானின் சொற்படி கேட்கிறது க.எந்திரம். இப்படியாக மனித வாழ்வைக் கற்றுக்கொள்கிறது. மனிதத் தன்மைகளைத் தனக்குள் ஏற்றிக்கொள்கிறது. இந்த மனிதத் தன்மை வி.எந்திரத்திடம் இல்லை. எனவே வி.எந்திரத்தைக் காட்டிலும் திறன் கூட்டப்பட்ட எந்திரமாக மேம்படுகிறது க.எந்திரம். அதாவது Update ஆகிறது. வில்லன் எந்திரம் இப்படி Update ஆகாததால், Old Version ஆகிவிடுகிறதல்லவா? இப்படித்தான், பழைய மாடல் மெஷினாகிய வி.எந்திரத்தை, புதிய மாடல் மெஷினாகிய க.எந்திரம் தோற்கடிக்கிறது.
‘விழுமியங்கள் வெல்கின்றன’ என்பதுதான் Judgement Day வின் செய்தி.
ஒரு கதையின் முரண் முகிழ்வுத் தருணத்தில் உருவாகிற இடர், கதையின் கருப் பையாக விளங்குகிறது என்பதைக் கண்டோம். இடர்களால் ஒரு கதை எவ்வாறு வளர்ச்சியுறுகிறது என்பதையும், எத்தனை இடர்கள் தீர்க்கப்பட்டாலும் இறுதியிடர் தீர்க்கப்படும்போதுதான் கதையின் நோக்கு வெளிப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்வதற்காக Judgement Day வை எடுத்துக்கொண்டோம்.
அகிரா குரோசோவாவின் Hidden Fortress திரைப்படமும் இவ்வகையானதுதான். Hidden Fortress – இடர்களின் காவியம். திரைப்பட இயக்குநராவதற்கு விரும்புகிற ஒருவர் Start, Cut சொல்வதற்கு முன்னர் கட்டாயம் கண்டிருக்கவேண்டிய நூறு படங்கள் என்று பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் Hidden Fortress கட்டாயம் இடம் பெறும். அந்தப் பட்டியலில் ஒரேயொரு தமிழ்ப்படத்திற்கு இடம் தரலாம் என்றால், அது எந்தப் படம்? விடை : 16 வயதினிலே.
பொதுவாக வீரதீரக் கதைகளில் ‘இடர்’ என்கிற கருத்தாக்கம் வலுவாகப் பங்கு வகிக்கிறது. புரூஸ் லீ யின் Enter the Dragon நல்ல எடுத்துக்காட்டு. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் இந்த வகையானவைதான். Henri-Georges Cluzot இயக்கத்தில் வந்த The Wages of Fear, Spielberg இயக்கத்தில் வந்த Duel … சொல்லிக்கொண்டே போகலாம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரள கிராமம் ஒன்றுக்குள் நுழைகிற மின்சாரம் கிராமத்தின் பண்டைய பழக்கவழக்கங்களுக்கு இடையூறு உண்டுபண்ண, அதன் விளைவான நாடகீயம் கதையாக விரிகிறது ஜி. அரவிந்தனின் ‘ஓரிடத்து’ திரைப்படத்தில். ஆனால் இதே அரவிந்தனின் ‘கும்மாட்டி’, ‘தம்பு’ போன்ற படங்களின் கதை வடிவத்தை ‘இடர்’ என்கிற கருதுகோள் கொண்டு எளிமைப்படுத்திவிட முடியாது. பொதுவில் அரவிந்தன், இடர் ஏற்படுத்துகிற பேரதிர்ச்சிகளை, பேரலைகளை, பெருவிளைவுகளை, பேருணர்ச்சிகளைப் புறக்கணிக்கிறார். பூவின் மகரந்தக் கொம்பும், ஈயின் மதுவுறிஞ்சு குழலும் பட்டுக்கொள்கிற தருணத்தின் அதிர்வுக் கவித்துவமே அரவிந்தனுக்குப் போதுமானதாயிருக்கிறது.
இடர் என்கிற கருத்தமைவு இல்லாமல் திரைக்கதை இல்லை. இந்தக் கருத்தமைவு பலவகைகளில் கையாளப்பட்டு வந்திருக்கிறது. இதுவொரு விரிவான ஆய்வுப் பரப்பு என்பதால் அந்தத் திசையில் இப்போது பயணப்படவேண்டாம். இப்போதைக்கு, இடர் என்கிற கருத்தமைவு வீரதீரக் கதைகளில் கதை வளர்ச்சிக்கு எவ்வாறு பணியாற்றுகிறது என்று கண்டுகொண்டிருக்கிறோம். Terminator 2 – Judgement Day படத்துக்கு நெருக்கமான கட்டமைப்பு நுட்பங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறு Family Man 2. ஆனால் Terminator 2 – Judgement Day படத்தில் காணக் கிடைக்கிற படைப்பு அறம் Family Man 2 வில் இல்லை. Terminator 2 – Judgement Day வில் அன்பு, அறம், அமைதி, ஈகம், மெய், மொழி இன தேச வேற்றுமைகளற்ற உலகளாவிய மாந்த நேயம் போன்ற விழுமியங்கள் உயர்த்திப் பிடிக்கப்பட்டு, மாந்தகுலம் பாதுகாக்கப்படவேண்டும் என்கிற அடிப்படை அக்கறை மிளிர்கிறது. Family Man 2 வில் இவையெதுவும் மருந்துக்குக்கூட இல்லை.
பொய்யை மட்டுமே வரலாறாகத் திரித்துவிடுகிற, மானுட குலத்தின் மிக மூத்த ஃபாசிசமாகிய பார்ப்பனியம் உருவாக்கிவைத்திருக்கிற ராமாயண மகாபாரதப் புராணிக மரபின் டிஜிட்டல் யுக நீட்சிதான் Family Man 2 வில் காணக்கிடைப்பது. தமிழினத்திற்கு எதிரான மாபெரும் சதித்திட்டம் இப்படம். இப்படிப் படமெடுப்பவர்களை மட்டுமே ஊக்குவிப்பதற்காகத்தான் ஒளிப்பதிவுச் சட்டம் 2021; மெய்காண்பவர்கள் பொத்திக்கொண்டு கிடக்கவேண்டும் இனிமேல்.
தமிழினத்தின் வரலாற்று உரிமைத்துவ இரு துண்டு நிலங்களையும் கைப்பற்றுவதற்காக ஆயுதப்படை, ராஜதந்திரம், அரசியல் நைச்சியம் ஆகிய அனைத்தையும் கொண்டு நடத்தப்பட்ட முக்கால் நூற்றாண்டுப் போரில் (உண்மையில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிற, உலகின் மிக நீளமான ராஜதந்திர பண்பாட்டுப் போர் இதுதான்) முழு வெற்றி கிட்டாத நிலையில் அந்த இனத்தின் மீது பண்பாட்டழிப்புப் போர் வல்லடியாக நிகழ்த்தப்பட்டு வருகிறது 2009 க்குப் பின்னர் என்பதற்கான சான்றுதான் இந்த வலைத் தொடர்..
தமிழ்த் தேசியக் கருத்தியலைப் பரப்புநர்களும், தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் பாரதிராஜா உள்ளிட்ட சிலரும் மட்டுமே இந்தத் தொடருக்கு எதிராகக் குரலெழுப்பினார்கள். தமிழில் கவிதை எழுதிக்கொண்டும்; கதை புனைந்துகொண்டும்; கட்டுரை வடித்துக்கொண்டும்; கவைக்குதவாத வெளிநாட்டுக் கோட்பாட்டு உடைசல்களையெல்லாம் கொண்டுவந்து தமிழினத்து மண்டைக்குள் கொட்டிக்கொண்டும்; திட்டமிட்ட இனவழிப்புக்கும் புறவினத்தாரின் முற்றுகைக்கும் ஆட்பட்டு மூச்சுக்காற்றுக்கு வழியின்றித் தாய்நிலத்திலேயே பண்பாட்டு முடக்கப் பிணியினால் நோகிறது இந்தத் தொல்லினம் என்கிற வரலாற்றுச் சுரணை ஏதுமில்லாமலும்; இனவெறித் தாகங்கொண்டு ஒன்றரை லட்சம் குடிமக்களின் தமிழ்க் குருதி குடித்த பின்னர் பார்ப்பனியத்தின் ‘அகண்ட’ நிலப் பெரும்பசிக்கு ஆயிரமாயிரமாண்டுகால ஈழ வரலாற்று நிலத்தை உண்டு செறித்த பின்னர் தொல்தமிழ்நாட்டு நிலத்தையும் இரைகொள்ளத் துடிக்கிற இனவெறிகளின் பக்கம் போய் நின்றுகொண்டும்; கிளையினங்களுடனான இசைமை கேடுறா வண்ணம் கிளையினங்களின் ஆதரவையும் இறைஞ்சியபடியே உயிர்காப்புக் கூப்பாடு எழுப்புகிற தமிழினத்தின் இழவொப்பாரியை இனவெறி என்று வியாக்கியானம் பண்ணிக்கொண்டும்; பழங்கோட்பாட்டு முகமூடிகளால் தமது இனவெறிக் கோர முகங்களுக்கு மறைப்பு கட்டி நாடகமாடுபவர்களை அம்பலப்படுத்துவதற்கான அறிவுத் திராணியோ, அறிவொழுக்கமோ இம்மியளவும் இல்லாமல், மெய்காண் வேட்கை வற்றிப்போய், அந்தப் பழங்கோட்பாடுகளையே தமிழினத்தின் மீட்புக் கருவிகளென்று பசப்பியபடியும்; அழிப்புக்கு ஆட்பட்டிருக்கிறதே சோறு போட்ட நிலம்… மொழி ஈன்ற நிலம்…. இந்த நிலத்தை, இந்த மொழியை, இந்த இனத்தை – அழிவிலிருந்து காக்க வேண்டுமே என்கிற நன்றியுணர்வு சற்றேனுமின்றி கேவலத்திலும் கேவலம் சொந்தப் புகழுக்காகப் பிழைப்புக்காகக் காரியவாதத்திற்காகத் தங்களைக் கவிஞர்கள் கலைஞர்கள் என்று மழுப்பிக்கொண்டும்; ‘சிறு பத்திரிகை மரபைச் சேர்ந்தவனாக்கும் நானெல்லாம்’ என்று வெற்று டம்பம் அடித்துக்கொண்டும்; தங்களை ‘இனட்டலக்ச்சுவல்ஸ்’ என்று பீற்றிக்கொண்டும்; “பின்நவீனத்துவ வ்யாதிகளாக்கும் நாங்கள்” என்று உளறிக்கொண்டும்; உலகப் புரட்சியாளரைப் போல் ஒப்பனை போட்டுக்கொண்டும்; வேடதாரிக் கூட்டங்கள் தமிழ் பேசித் திரிந்துகொண்டிருக்கின்றன. இனவழிப்புக் கருத்துருவாக்கப் பொறிகளின் முடுக்குவிசைகளைக் கையாளுகிற சதிகாரக் கரங்களுள் பெரும்பாலானவை இந்த வஞ்சகர்களின் கரங்களே.
இந்தத் திருக் கூட்டத்தார் திருந்தினாலொழிய தமிழ்நாட்டுக்கு விடிவில்லை; அதிரடியும் அடேபுடா அமர்க்களமும் பண்ணி இவர்களைத் திருத்துவதற்கு, அறிவுலக கெரில்லா ஒரு பிரமிள் இங்கில்லை.
FAMILY MAN 2 – திரைப்படமல்ல ; அரசியல் நகர்வு! ‘தெற்காசியச் சதுரங்கம்’ என்கிற ராணுவ ராஜதந்திர அரசியல் பண்பாட்டு போரில், தமிழினத்துக்கு எதிரான ‘பண்பாட்டுத் தாக்குதல் வடிவம்’ என்று இந்த வலைத் தொடரைச் சொல்லலாம். இந்த வலைத் தொடரைக் குறித்து ஒரே கட்டுரையில் விமர்சனம் செய்துவிட முடியாது. இந்த வலைத்தொடர் 9 பகுதிகள் கொண்டது; அதேபோல் 9 அத்தியாயங்கள் கொண்ட விமர்சன நூலைத் திட்டமிட்டிருக்கிறோம். அந்த நூலின் முதல் அத்தியாயம் – ‘கற்பாம் மானமாம் கண்ணகியாம்…’. இந்த முதல் அத்தியாயம் இரண்டாகப் பிரித்து வெளியிடப்பட்டிருக்கிறது. மீதியையும் உடனே எழுதிவிட நேரம் ஒத்துழைக்கவில்லை. செப்டம்பர் 15 ஆம் தேதியிலும் அக்டோபர் இறுதியிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிற திரைப்படத் திறனாய்வு நூல்கள் இரண்டுக்குமான எழுத்து வேலைகள் கட்டிப்போட்டிருக்கின்றன; இந்த வேலைகளை முடித்த பின்னர்தான் FAMILY MAN 2 குறித்த விமர்சனத்துக்கு நேரம் ஒதுக்கமுடியும். ஜெகமே தந்திரம், மேதகு ஆகிய திரைப்படங்கள் ஈழ அரசியலில் வகிக்கிற பங்கு குறித்தும் ஆய்வு செய்வது அந்த நூலின் நோக்கம்.
வாசகர்களுக்கு நன்றி!
09.07.2021
தங்கம்