பேசத்தெரிந்த இரண்டு குழந்தைகள் மூன்றாவது ஒருவரது துணையின்றி தங்களுக்குள் அறிவுப் பரிமாற்றத்தை, உணர்வுப் பரிமாற்றத்தை, செய்திப் பரிமாற்றத்தை – மொழி வழியாகக் கடத்திகொள்ள முடிகிறது என்றால், அந்த இரண்டு குழந்தைகளும் பேசிக் கொள்கிற மொழி எந்த நிலப்பரப்பு வரைக்கும் பரவி நிற்கிறதோ அந்த நிலப்பரப்பு வரை அந்தக் குழந்தைகளின் தாய்நாடு ஆகும். கோயம்புத்தூரிலும், கோயில்பட்டியிலும், கும்பகோணத்திலும், கும்மிடிப்பூண்டியிலும் இருக்கிற குழந்தைகள் ஒருவருக்கொருவர் பேசிப் புரிந்துகொள்ள முடியும் எனில், இந்த மொழி எந்த நிலப்பரப்பின் எல்லை வரை பரவிக்கிடக்கிறதோ அந்த நிலப்பரப்பு முழுக்க ஒரு நாடு; அந்தக் குழந்தைகளின் தாய் நாடு. ஒரு மொழிக்கு 18,000 நாடுகள் அமைத்துக் கொள்ள முடியாது.
மொழி வழியாக ஒற்றுமைகொண்ட நிலத் தொகுதிகளைத்தான் மொழிவழித் தேசம்’ என்று சொல்கிறோம். இந்தத் தேசத்தில் வாழ்கிற மக்களை, இந்தத் தேசத்தை வாழ்விக்கிற மக்களை – மொழிவழித் தேசியர் என்கிறோம். இந்த நிலத்துக்கும் இந்த மக்களுக்கும் இடையிலான உறவு வரலாற்றின் வழியாக உருவாகி வந்திருக்கிறது. இந்த உறவில், இந்தத் தேசத்துக்கும் இந்தத் தேசியருக்கும் இடையில் புழங்கப்பட்டு வந்திருக்கிற பொருளாதார வகையிலான, பண்பாட்டு வகையிலான, வரலாற்று வகையிலான, அரசியல் வகையிலான பிணைப்புக் கூறுகளை ஒருங்கிணைத்து ஒரு கருத்தமைவு உருவாக்கிக் கொண்டால், அதுவே தேசியம். தேசியம் என்பது வெறும் கருத்தமைவு மட்டுமே அல்ல; உரிமை! இந்தத் தேசத்தின் மீது இந்தத் தேசியருக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று வரலாறு எழுதிக் கொடுத்திருக்கிற ‘பட்டா’ – அதாவது உரிமைப் பத்திரம். இந்த தேசியத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக வரலாற்றில் வழிவழியாக கைகொண்டு வந்திருக்கிற அதிகாரத்தின் பெயர்தான் இறையாண்மை.
ஒரு தேசிய இனத்தின் இறையாண்மையில் வேறு ஒரு தேசிய இனம் குறுக்கீடு செய்யும் போது முரண் உருவாகிறது. இந்தக் குறுக்கீடு உள்நோக்கமின்றியோ, உள்நோக்கம் கொண்டோ ஏற்படலாம். அப்படி தேசிய இனங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படாமல் தேசிய இனங்கள் இணக்கமாக சேர்ந்து வாழும்போது மக்களுக்கு அமைதி கிட்டுகிறது.
ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக ஒன்று சேர்ந்த தேசிய இனங்கள், ஆங்கிலேயரை வெளியேற்றிய பின்னர் – 1947க்குப் பின்னர் – புதிய முடிவுக்குத் தள்ளப்பட்டன. டெல்லி அரசின் ஒற்றை ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு வரலாற்று அழுத்தம் தேசிய இனங்களை நசுக்கியது. டெல்லியிடம் படை இருந்தது; தேசியங்களிடம் மக்கள் இருந்தனர்; தேசியங்கள் டெல்லியிடம் சமரசம் செய்து கொண்டன.
தேசியங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி ஆங்கிலேயரை வெளியேற்றி விட்டதனால், மொழிவழி தேசியங்களின் கூட்டுத் தலைமையிடம் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்தக் கூட்டுத் தலைமைதான் ஒன்றியம்; தேசியங்களின் கூட்டாட்சி!
ஒன்றியத்தின் வேலை, இனவெறி உருவாகிவிடாமலும், இனப் பகை வெடித்துவிடாமலும், இன மோதல்கள் நிகழ்ந்துவிடாமலும், இன அழிவுகள் ஏற்பட்டுவிடாமலும் – தேசிய இனங்களுக்கு இடையில் நல்லிணக்கப் போக்கை உருவாக்குவதுதான். தேசிய இனங்களின் வாழ்வை – நலமும், வளமும், அன்பும், அமைதியும், வலிமையும், இனிமையும் கொண்டதாக மேம்படுத்த முயற்சிப்பதுதான் ஒன்றியத்தின் வேலை. ஆனால் நிலைமையோ நேருக்கு மாறாக இருக்கிறது! தேசிய இனங்களின் மொழிகளை, கலாச்சாரங்களை, வரலாறுகளை, அடையாளங்களை, நினைவுகளை அழிப்பது என்பதை வேலைத்திட்டமாகக் கொண்டிருக்கிறது டெல்லி. ஏனெனில், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய தேசிய இனங்கள் அனைத்திற்கும் தேசிய நிலம், அதாவது தேசம் – இருக்கிறது. ஆனால் இந்திய ஒன்றிய அரசின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றியிருப்பதோ நிலமற்ற பார்ப்பனியம். பார்ப்பனர்களுக்கு என்றொரு தேசம் இல்லை. ஆக, நிலம் கொண்ட தேசிய இனங்களை நிலமற்ற தேசிய இனம் ஆள்கிறது.
மொழிவழித் தேசியங்கள் யாவும், தமக்குச் சொந்தமான தேசிய நிலத்தின் மீதிருந்து தங்கள் சந்ததியைப் பெருக்கிக் கொண்டன. அதனால்தான் தேசிய இனங்கள் என்கிறோம். பார்ப்பனர்கள் தேசிய இனம் அல்ல; குருதியினம்.
தேசிய இனங்களின் நிலங்களை, குருதியினம் ஒன்று ஆளும் பொழுது, குருதியினம் தன்னுடைய அடையாளங்களை அந்த நிலமெங்கும் விதைக்க முனைகிறது. இந்த முனைப்புதான் இந்தியத் துணைக்கண்டத்தில் பார்ப்பனிய பாசிச மேலாதிக்கம். பார்ப்பனியத்தின் இந்த பாசிசப் போக்கானது பழங்குடிகளுக்கும், கிழக்கிந்திய மக்களுக்கும், வடமுனையின் காஷ்மீர் மக்களுக்கும், தென்முனையின் தமிழ் மக்களுக்கும் தீராத துயரங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படிக் கேடான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டால் வரலாறு அதற்கான பதிலைத் தரும். பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்த வேர் கொண்ட பழம்பண்பாட்டின் மீது கை வைப்பது என்பது, எரிமலைக் குழம்பின் உலை வாயை திறப்பது போல் ஆகிவிடும் . இந்த பூமிப்பந்தின் மிகத் தொன்மையானதொரு கலாச்சாரத்தை அடக்குமுறைகளால் முற்றாக அழித்துவிட முடியாது.
கொங்கு நாட்டுக்குப் பிரிப்புக்கு எதிராக வெற்றுக் கூக்குரல்களையும், முழக்கங்களையும்தான் குவித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. இப்படி ஏன் கொங்கு நாட்டை பிரிக்க வேண்டும்? இதற்குப் பின்னுள்ள சதித் திட்டம் என்ன? என்று மக்களிடம் விளக்குவதுதான் அறிவு.
ஈழத்தில் தமிழர் தாயகத்தைச் சிங்களர் எப்படி வெட்டிக் கூறு போட்டனரோ, அதே வேலைத் திட்டம்தான் இது. கொங்குநாட்டுப் பிரிப்புக்குத் தமிழ்நாட்டில் ஆதரவு தருகிறவரும், ஈழத்துச் சிங்களரும் குணத்தில் ஒன்றுபடுகின்றனர்; அரசியல் வேலை திட்டத்திலும் ஒன்றுபடுகின்றனர்.
‘தமிழின அழிப்பு’ என்கிற திரைப்படத்தின் முற்பகுதி ஈழநாடு; பிற்பகுதி தமிழ்நாடு; முள்ளிவாய்க்கால்தான் இடைவேளை.
( கொங்கு நாட்டுப் பிரிப்பு குறித்து இவ்வளவு எளிதாக விளக்கினால் போதாது; உண்மை – வெகு ஆழத்தில் கிடக்கிறது. ‘தெற்காசியச் சதுரங்கம்’ என்கிற ராணுவ ராஜதந்திர அரசியல் பண்பாட்டுப் போர் விளையாட்டைப் புரிந்துகொள்ளும்போதுதான் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் செயலாக்குவதற்கு என்று என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பது விளங்க வரும். ‘தெற்காசியச் சதுரங்கம்’ என்கிற கோட்பாடு குறித்துப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்)